`தி ஃபேமிலிமேன் 2′ வெப் சீரிஸ்தான் தற்போதைய பேசு பொருள். முதல் சீஸனின் கதை கொச்சி, சிரியா, பாகிஸ்தான், ஶ்ரீநகர், டெல்லி, மும்பை ஆகிய இடங்களிலும், `மிஷன் ஜுல்ஃபிகர்’ என்கிற தீவிரவாத அமைப்பின் சதித் திட்டத்தையும் சுற்றி நடக்கும் கதை. இரண்டாவது சீசனின் கதை, சென்னை, லண்டன், இலங்கை, வேதாரண்யம், பாயின்ட் பெட்ரூ, இலங்கை ஆகிய இடங்களிலும் அதைச் சுற்றி நடக்கும் தீவிரவாத செயலையும் பேசுகிறது. மேலும் சென்சிட்டிவ்வான தமிழீழ பிரச்னை குறித்தும் பேசுகிறது இந்த சீரிஸ். எந்த இயக்கம் என்று வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமான சில குறியீடுகளோடு அவர்களின் லட்சியங்கள் பற்றியும் காட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் `தி ஃபேமிலிமேன் 2′ கிளப்பிய சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்!
-
1 டிரெய்லர் சர்ச்சை
இந்த சீரிஸின் டிரெய்லர் வந்த நாளில் இருந்து சர்ச்சைதான். இரண்டாம் பாகத்தின் கதை முக்கால்வாசி சென்னையில்தான் நகரும். அப்படி இருக்கையில் டிரெய்லர் வெளியான சமயம் சமந்தாவின் வசனம் ஒன்று மிகுந்த சர்ச்சையானது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களோடு நாட்டிற்கு ஒரு பிரச்னை வரும் முன் பாதுகாக்கும் TASC அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடித்திருப்பார். டிரெய்லரில் சமந்தா, `நான் எல்லாரையும் சாகக் கொல்லுவேன்' எனப் பேசியிருக்கும் வசனம்தான் முதல் சர்ச்சையை கிளப்பியது. `பொது மக்களைக் கொல்லாமல் தங்களது விடுதலைக்காக மட்டும் போராடுவதையே தமிழீழப் போராளிகள், கொள்கையாக வைத்திருப்பார்கள். அப்படி இருக்கையில் புரிதல் இல்லாமல் இதைப் படமாக்கியுள்ளனர் எனச் சொல்லி அந்த வசனமானது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
-
2 ஐஎஸ்ஐயோடு கூட்டு!
உண்மை சம்பவங்களின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சினிமாட்டிக் விஷயங்களையும் சேர்த்து ராஜ் மற்றும் டிகே இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். முதல் சீசனில் `மிஷன் ஜுல்ஃபிகர்ல ப்ளான் A சொதப்புனா என்ன... என்கிட்ட ப்ளான் B இருக்கு' எனப் பல குளறுபடிகள் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் சீசன் 2-ன் கதைப்படி `ஜுல்ஃபிகர் 2.0' என அதைத் தொடர திட்டமிடுகிறார்கள் ISI அமைப்பைச் சேர்ந்த மேஜர் சமீர். என்ன ஒன்று தமிழ் ஈழப் போராளிகளை தங்களது வலைக்குள் கொண்டு வந்து அதை செய்துகொள்ள திட்டமிடுகிறது ISI. இயக்கத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லாமல் தமிழ் ஈழப் போராளிகள் என்று சித்தரிக்கப்பட்டது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் போராளிகள் கைகோர்த்ததாகக் காட்சியமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.
-
3 காவல்துறையை எதிர்க்கும் ஊர் மக்கள்
இலங்கையின் வடக்குப் பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைக்க இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது சீன அரசு. அதனைத் தடுத்து நிறுத்த இந்தியாவின் பிரதமரான பாசு தீவிரம் காட்டுகிறார். இதனை இலங்கை அரசிடம் தெரிவிக்கவும் செய்கிறார். அப்படிச் செய்ய வேண்டுமென்றால் தமிழீழ போராளிக் குழுவைச் சேர்ந்த சுப்புவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கிறது இலங்கை அரசு. இப்படித்தான் கதை நகர்கிறது. இதற்கு நடுவே தமிழ் ஈழ விடுதலை குழுவைச் சேர்ந்த சமந்தா, வேதாரண்யத்தில் TASC அதிகாரியான மனோஜ் பாஜ்பாயின் பிடியில் சிக்குகிறார். அந்தப் பகுதி மக்கள் மொத்தமாக இணைந்து காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். தமிழீழ விடுதலைப் போராளிகள் குழுவின் செயல் தளமாக வேதாரண்யம் காட்டப்படுகிறது. அப்படியான சூழலில் மொத்த ஊர் மக்களும் துப்பாக்கியும் கையுமாக வன்முறையில் ஈடுபடுவது சர்ச்சைக்குரிய காட்சிகளாகக் கருதப்படுகிறது.
-
4 ஊர் மற்றும் மொழிப் பிரச்னை
தமிழீழ போராளி குழு தலைவர் பாஸ்கரனின் தம்பியான சுப்பு, சென்னை போலீஸின் பிடியில் சிக்குகிறார். அந்த சமயம் மத்தியில் இருந்து என்.ஐ.ஏ-வின் TASC அதிகாரிகள் சென்னை வந்து சேர்கிறார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதை சென்னையை சுற்றியே நடக்க, தமிழ் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து சென்னையில் தங்கி பணியாற்றும் சூழல் TASC அமைப்புக்கு ஏற்படுகிறது. அந்த சமயம் சின்னச் சின்ன காட்சிகளில் கூட சென்னையை காட்டியிருந்த விதம் மோசமானதாக இருந்தது. சென்னை என்றாலே தண்ணீர் தட்டுப்பாடு, வெக்கை, குடிசை வீடுகள் என்பது போல் ஒரு பக்கம் காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்தி - தமிழ் மொழிப் பிரச்னையால் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பகடியும், நக்கலும் செய்துகொள்கிறார்கள். இவர்கள் இணைந்து பணியாற்றும் அலுவலகத்தில் தமிழ் பாட்டு வைப்பதும், பிறகு இந்தி பாட்டு வைப்பதும் இறுதியில் ஒரு காரணத்திற்காக தமிழ் அதிகாரியே இந்தி பாட்டு வைப்பதும் காமெடியாக இருந்தாலும் தேவையற்ற சர்ச்சை காட்சிகளாகவே தெரிந்தது.
0 Comments