* `சிங்கம்’ பட சூர்யாவைப் போல் ஊரே கேட் வின்ஸ்லெட்டுக்குப் பழக்கம். எங்கு திரும்பினாலும் நண்பர்கள், சொந்தக்காரர்கள். சில கேஸ்களைக் கண்டுப்பிடித்து தீர்த்துதான் வைக்கவில்லை. அப்படியான ஒரு சூழலில்தான் தன்னுடைய போலீஸ் பணியை செய்து வருவார் அவர். தன்னுடைய சொந்த மகன் ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்கிறார். அந்த கணத்தையும் தாங்கி, அந்த ஊரில் நடக்கும் தொடர் கொலைகளையும், அங்கு நடக்கும் மர்மங்களையும் துப்பறியும் டிடெக்டிவ்வாக தன்னுடைய நடிப்பு மூலம் வெளுத்து வாங்கியிருக்கிறார் மேர் (எ) கேட்.
* தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் சோக சம்பவங்களால் பல்வேறு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் மேர். அந்த அழுத்தத்தை, தன்னுடைய நடிப்பின் மூலம் பார்க்கும் நமக்கும் கடத்தி இருக்கிறார். மகனின் தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று நினைத்து அவருடைய மகள் இவர் மீது அவ்வப்போது வெறுப்பைக் காட்டுவார். அதில் ஆரம்பித்து இறுதியில் தன்னுடைய முந்தைய கணவரின் திருமண நிகழ்வுக்கு செல்வது வரை பார்ப்பதற்கே அவ்வளவு நிறைவாக இருந்தது. இவரின் கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது ஒரு வித மெச்சூரிட்டி ஃபீல் கட்டாயம் ஏற்படும்.

* மேரின் அம்மாவாக நடித்திருக்கும் ஜீன் ஸ்மார்ட்தான் நமக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர். அவர் வந்து போகும் அனைத்து இடங்களிலும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். அவ்வப்போது போடும் பன்ச் டயலாக், டைமிங் நக்கல்ஸ் போக கதவின் அருகே நின்று படாரென்று அடியும் வாங்குகிறார். நம்முடைய நக்கல் பிடித்த பாட்டி எப்படி இருப்பார்களோ அப்படியே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜீன்.
* திரைக்கதை ஒரே ஊரைச் சுத்திக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. நம்மூரில் சாதி பிரச்னையைப் போல் அண்டை நாட்டில் நிற பிரச்னை தலைவிரித்தாடும். அதுவும் ஒரு படைப்பில் எப்படி காட்டப்படுகிறது என்பதுதான் மிகப் பெரிய சவாலும், பேசுபொருளும். அப்படி இருக்கையில் மேல் மட்டத்தில் இருப்பவர்களை கருப்பின மக்களாகக் காட்டியிருப்பது ரொம்பவே ஆரோக்கியமான விஷயம். மேரின் உயர் அதிகாரியாக இருப்பவர், அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பவர் என அது சார்ந்த விஷயங்களை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

* பல விஷயங்களில் இயக்குநரின் நுட்பமான திரைமொழி வெளிப்பட்டிருந்தாலும் இறுதியில் ஒரு சின்ன பையனை டிவிஸ்ட்டுக்காக அப்படி செய்தது சரியாகப்படவில்லை. அதற்கு முன்பே ஒரு படைப்பாக அது நம்மிடையே வந்து சென்றிருந்தாலும் திரைக்கதை சுவாரஸ்யபடுத்தும் ஒரே நோக்கிற்காக இவ்வாறு செய்திருப்பது அபத்தத்தின் உச்சம். தவிர பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் எரினின் கதாபாத்திரத்தில் இருக்கும் அடர்த்தி ரொம்பவே ஆழமானது. ஆனால், ஊரில் இருக்கும் அனைவராலும் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது நம்பகத் தன்மையை குறைக்கிறது.

ஒரு நாளில் பார்த்து முடிகின்ற Slow Burn வகையறாவைச் சேர்ந்த மினி வெப் சீரிஸ்தான் `Mare of Easttown'. சில அதிருப்திகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் இது ஒரு பக்காவான படைப்புதான். கொஞ்சம் டிராமா நிறைய ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் சீரிஸுக்கு ஈஸ்ட் டவுனுக்கு கட்டாயம் சென்றுவிட்டு வரலாம்.
0 Comments