அறிமுக இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் க்ரைம் – த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம் ̀ஆபரேஷன் ஜாவா’. பைரஸி, பண மோசடி, டெலிவரி என்ற பெயரில் அரங்கேறும் திருட்டு மற்றும் கொலை… ஆகிய ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மூன்று கேஸ்களை டீல் செய்வதுதான் இந்தப் படம். நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் படத்தின் முக்கால்வாசி இடங்களில் த்ரில்லர் கன்டென்ட் ஒர்க் ஆகியிருக்கிறது. இன்னும் டீடெயிலா இதைப் பார்க்கலாம் வாங்க!

* முதலில் ̀ப்ரேமம்' படத்தின் பைரஸி கேஸ். படம் வெளிவரும் முன்பே படத்தின் சென்சார் காப்பி இன்டர்நெட்டில் உலாவி கொண்டிருப்பதால் ஏற்படும் குழப்படிகள்தான் இந்த அத்தியாயம். ̀தயாரிப்பாளர் தவிர இருக்க எல்லாரையும் விசாரிக்கணும். முக்கியமாக அல்போஸ் புத்திரனை விசாரிக்கணும்' என்று காலரை தூக்கிவிட்டு தேடுதல் வேட்டைக்கு கிளம்புகிறது Crime branch. அந்த கேஸுக்குள் இருக்கும் சில டெக்னிக்கல் விஷயங்களைச் சொல்லி ̀இப்படித்தான் பைரஸி செய்பவர்களை அணுக வேண்டும்' என தாமாக முன் வந்து உதவுகிறார்கள் இரு இன்ஜினியரிங் பட்டதாரிகள் (ஆண்டனி ஜார்ஜ், வினய் தாசன்). காமெடி, பைரஸி நுணுக்கங்கள் என முதல் கேஸ் நன்றாக நகர்ந்தது.
* அடுத்தது பண மோசடி கேஸ். முதல் கேஸில் உதவி செய்த ஆண்டனி மற்றும் தாசன் ஆகிய இருவரையும் தற்காலிமாக Crime branch-ல் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். ஆண்டனிக்கும் இந்த பண மோசடி கேஸ்க்கும் ஒரு பர்சனல் டச் இருப்பதால் இந்த கேஸை முழுவதுமாக அவர்கள் இருவரையும் டீல் செய்ய சொல்கிறார் உயரதிகாரி பிரதாபன். விசாரணை முடிந்து பண மோசடி கேஸை உள்ளும் புறமும் அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக கிரிமினல்களை ரீச் செய்கிறார்கள். பெரிய இடம் என்பதால் மொத்த க்ரைம் ப்ரான்ச் ஆபிஸர்களும் கோதாவில் இறங்குகிறார்கள். ஒரு வழியாக அந்த இருவரின் உதவியுடன் அந்த கேஸும் முடித்துவிடுகிறது க்ரைம் ப்ரான்ச். ஆனால், இன்னும் எத்தனை படங்களில்தான் தமிழர்களை இப்படியே காட்டப்போகிறீர்கள்?!

* கடைசியாக Food Delivery என்ற பெயரில் வீட்டில் இருப்பவர்களை கொலை செய்து கொள்ளை அடித்துவிட்டு செல்லும் கேஸ். முதல் கேஸில் ஆரம்பித்த சுவாரஸ்யம் கடைசி கேஸில் படிப்படியாக குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ̀ப்ரேமம்' கேஸில் காமெடி, பரபரப்பு ஆகிய இரண்டும் இருந்தது. அதற்கு அடுத்து வந்த கேஸில் அது அப்படியே குறைந்தது, மூன்றாவதாக வந்த இந்த கேஸில் சுவாரஸ்யம் துளியும் இல்லை.
* படத்தில் ஏற்பட்ட முதல் சலிப்பு ஒரு கேஸுக்கும் இன்னொரு கேஸுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது. ஏனென்றால் ஒரு பக்கா த்ரில்லர் படத்தில் கதையானது முழு படத்தையும் தாங்கிப் பிடித்து வந்து கொண்டே இருக்க வேண்டும். மூன்று கேஸ்கள், மூன்று சூழல்கள் என்பதால் மூன்று குறும்படம் பார்த்த எஃபெக்ட் கொடுப்பதோடு ஒருவித அயர்ச்சியையும் தருகிறது. நிஜ சம்பவம் என்பதால் கதையில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. அப்படியே திரைக்கதையில் மெனக்கெட்டு மூன்று கதையையும் கோர்த்திருந்தால் படம் தாறுமாறாக நகர்ந்திருக்கும்.
* ஆண்டனி மற்றும் தாசன் ஆகிய இருவரும்தான் படத்தில் முக்கிய பாத்திரங்கள். அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இருவரும் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். திறமைசாலிகளின் திறன் சில ஆளுமைகளின் ஓவர்ஷேடோவில் அடையாளம் தெரியாமல் போகிறது என்ற கான்செப்டிற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். அதுவும் கடைசிவரை அந்த ஸ்டாண்டில் இருந்து அவர் மாறவே இல்லை. ஆண்டனியாக நடித்த பாலு வர்கீஸ் நன்றாக நடித்திருந்தாலும், தாசனாக நடித்த அவரன், ̀எங்களுக்கு சம்பளம் கூட வேண்டாம் சாரே இங்கேயே வேலை பார்க்கறோம்' என்று இயல்பாகவும் பாவமாகவும் சொன்ன ஒரே வசனத்தின் மூலம் அப்ளாஸ் அள்ளிவிட்டார்.

* காலம் காலமாக மலையாள சினிமாவில் மாறவே இல்லாத பழக்கம் தமிழர்களை கீழ்த்தனமாக சித்தரிப்பது. அவர்களது வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்களை தமிழனாக காட்டப்படுவது, நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைப்பது, இந்தப் படத்தில் கூட பண மோசடி செய்பவர்களை தமிழர்களாக காட்டியிருப்பது என இதை மட்டும் மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள்.
மற்றபடி மூன்று சுவாரஸ்யம் நிறைந்த குறும்படம் பார்க்க ̀ஆபரேஷன் ஜாவா'வோடு இணையலாம்!
0 Comments