லாக்டவுன் வந்துவிட்டது. பரண் மேல் இருக்கும் தாயக்கட்டை, சீட்டுக்கட்டு போன்றவைகளோடு ஓடிடி தளங்களின் பயன்பாடுகளும் அமோகமாய் இருக்கும். அதைக் கருத்தில்கொண்டு தமிழ் படங்களைத் தவிர்த்து சில மற்ற மொழிப் படங்களை இந்த லாக்டவுனில் பார்க்க பரிந்துரைக்கிறோம்.
-
1 Joseph (மலையாளம்) : Prime
`ஜோசஃப்' மலையாளத்தில் மிக முக்கியமான படம். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிதான் படத்தின் நாயகன். எப்பேர்ப்பட்ட கேஸ்களையும் அசால்ட்டாக டீல் செய்வதுதான் இவர் ஸ்டைல். அது படத்தின் முதல் காட்சியிலே நம்முள் விதைத்து விடுவார் இயக்குநர். படம் நகர நகர சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இருக்காது. மனைவியையும், குழந்தையையும் பிரிந்து இவர் தனியாக வாழ்வதற்குக் காரணம் என்ன, இவர் வசிக்கும் கிராமத்தில் தொடர்ந்து ஒரே பாணியில் நடக்கும் விபத்துக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதைப் போல் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது விறுவிறுவென நகர்கிறது படத்தின் கதை. இதை சொன்னாகூட புரியாது... ஸோ பாருங்க!
-
2 Jathi Ratnalu (தெலுங்கு) : Prime
2021-ல் வெளியான இப்படம் டோலிவுட்டில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வளர்ந்து வரும் ஹீரோவான நவீன் பாலிஷெட்டிதான் படத்தின் நாயகன். அவரோடு சேர்த்து பிரியதர்ஷி புலிகொண்டி மற்றும் `அர்ஜுன் ரெட்டி' புகழ் ராகுல் ராமகிருஷ்ணா நடித்திருக்கிறார்கள். கதைப்படி இவர்கள் மூவரும் எந்த வேலையும் செய்யாத தண்டச்சோறு. `சிட்டிக்கு போய் சிக்ஸர் அடிக்கிறோம் பாரு' என அவர்களின் கிராமத்தில் இருந்து ஹைதராபாத் வந்து சேர்கிறார்கள். ஹீரோவுக்கு காதல் வந்த கையோடு, இவர்கள் மூவர் மீதும் கொலைப் பழி ஒன்றும் விழுகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கும் காமெடி ரோலர்கோஸ்டர், படம் முடியும் வரை நம்மை என்டர்டெயின் செய்யும். எந்த லாஜிக்கும் எதிர்பார்க்காமல் வெறும் காமெடி என்ற மேஜிக்கை மட்டும் அனுபவிக்க இந்த மூன்று ரத்தினங்களுக்காகவே கட்டாயம் பார்க்கலாம்.
-
3 Mathu Vadalara (தெலுங்கு) : Prime
இதுவும் மூன்று நண்பர்கள் சார்ந்த கதைதான். காமெடி, டார்க் காமெடி என எல்லா டைப் காமெடிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும். படத்தின் நாயகன் ஶ்ரீ சிம்ஹாவும், சத்யாவும் கொரியர் பாயாக வேலை பார்ப்பவர்கள். வாழ்க்கையை நினைத்து விரக்தியில் இருக்கும் ஹீரோவுக்கு, கொரியர் டெலிவரி செய்யும் போது சின்ன லெவல் பணத்தை எப்படி நூதனமாக திருட வேண்டும் என்கிற ஒரு ட்ரிக்கைச் சொல்கிறார் காமெடியன் சத்யா. முதல் பரிசோதனையே இவரை சோதித்து விடுகிறது. வயதான ஒரு பாட்டியிடம் அந்த டிரிக்கை இவர் செய்து பார்க்க, அதை பாட்டி கண்டுபிடித்துவிட, வாக்குவாதத்தில் அந்தப் பாட்டி எதிர்பாராமல் கீழே விழ... கடைசியில் பாட்டி இறந்து போகிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது ஃபன்னும், த்ரில்லும். படம் பார்த்தால் கிளைமாக்ஸை என்றும் மறக்க மாட்டீர்கள்!
-
4 Forensic (மலையாளம்) : Netflix
கோலிவுட்டில் வெளிவந்த `ராட்சசன்' டைப் சினிமாதான் `ஃபாரன்சிக்'. முழுக்க முழுக்க இது ஒரு த்ரில்லர் படம். ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் கொண்டு படத்தின் நகரும். கதையைச் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் தவிர்த்துவிடலாம். தடயவியல் நிபுணராக நடித்துள்ளார் ஹீரோ டொவினோ தாமஸ். சில நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் சுவாரஸ்யத்துக்குத் துளிகூட பஞ்சம் இருக்காது. கதை ஒரு பக்கம் திகிலைக் கிளப்பினாலும் மியூஸிக்கலாகவும் படம் மிரட்டியிருக்கும். இன்டர்வல் ப்ளாக்கில் வரும் சின்ன குழந்தையின் `லாலாலா' பிஜிஎம், உங்களுடைய மைண்ட்டுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். டோன்ட் மிஸ் இட்!
-
5 Maya Bazar 2016 (கன்னடம்) : Prime
2020-ல் வெளியான கன்னட படம் `மாயா பஜார் 2016'. 2016-ல் டிமானிடைசேஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். வயிற்றுப் பிழைப்புக்காக சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் குபேரன், நேர்மையான போலீஸ் அதிகாரி தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தவுடன் பணத்துக்காக சில ஏமாற்று வேலைகள் செய்கிறார். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் இணைந்து ஏமாற்று வேலையில் களமிறங்குகிறார்கள். இவர்களது பாதையில் கார்பென்டர் ராஜி என்பவரும் குறுக்கே வருகிறார். பரபரப்பாக நகரும் கதையில் காமெடிக்கும் குறைவிருக்காது.
-
6 Mardaani 1 & 2 (இந்தி) : Prime
ராணி முகர்ஜியின் சினிமா கரியரில் இரு முக்கியமான படங்கள். முதல் பாகம் 2014-ம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2019-ம் ஆண்டும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு பாகத்தின் கதையும் ஒன்றுதான். பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் ராணி முகர்ஜி. இதன் இரண்டு பாகத்தின் வில்லன்களும் அதிக கவனம் பெறுவார்கள். பொதுவாக ஒரு சினிமாவில் Protagonist எந்தளவிற்கு முக்கியமோ அவரை எதிர்கொள்ளும் Antogonist-ம் முக்கியம். இந்த ஃபார்முலாவை உணர்ந்து படத்தின் கேரக்டர்கள் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். ஒரே ஃப்ளோல ரெண்டு பார்ட்டையும் பார்த்து முடிச்சிடுங்க. மூணாவது பார்ட் ஆன் தி வே!
-
7 Detective Byomkesh Bakshy! (இந்தி) : Prime
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பு்த் நடித்த திரைப்படம் `Detective Byomkesh Bakshi'. கதையும், சுஷாந்த் சிங்கும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றாலும் படத்தின் ஆர்ட் வொர்க் வாவ் சொல்ல வைக்கும். 1943, அதாவது சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும் விதமாக இந்த படத்தின் ஆர்ட் வொர்க் அமைந்திருக்கும். படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் இந்தக் கதைக்கேற்ப பொருந்தி இருப்பார்கள். `இந்த மாதிரி படம் எல்லாம் நடிச்சிட்டாயா இறந்து போன' என்ற எண்ணம் படம் முடிந்தவுடன் கட்டாயம் ஏற்படும். இந்தப் படத்தைப் பார்த்து அந்த காலகட்டத்துக்கே போயிட்டு வாங்க.
-
8 Photo Prem (மராத்தி) : Prime
இந்த வருடம் நேரடியாக ப்ரைமில் வெளியான படம்தான் `போட்டோ ப்ரேம்'. இறப்புதான் படத்தின் மையக் கதை என்றாலும் அந்தக் கணத்தை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் முழுக்கவே ஹ்யூமராக அணுகியிருக்கிறார் இயக்குநர். கிட்டத்தட்ட கோலிவுட்டில் வெளியான `முண்டாசுப்பட்டி' படத்தின் கான்செப்ட்தான். ஒரு ஊரே புகைப்படம் எடுப்பது தெரிந்தால் அலரும் அல்லவா, அதேபோல் இதில் பாட்டியாக நடித்திருக்கும் நீனா குல்கர்னிக்கு போட்டோ என்றாலே அல்லு. பல ஆண்டுகளாக போட்டோ எடுத்துக் கொள்ளாமல் இருப்பார். ஒரு நாள் இறுதி சடங்கிற்கு செல்லும் இவருக்கு, `இறந்த பிறகு நம்மை ஞாபகப்படுத்துற ஒரே விஷயம் இந்த போட்டோதான், நம்ம பேரப் பசங்க நம்மை மறந்து போயிட்டா?!' என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. அதன் பிறகு ஒரு நல்ல போட்டோ எடுக்க இவர் செய்யும் லூட்டி கட்டாயம் ரசிக்க வைக்கும்.
-
9 Ee Nagaraniki Emaindi (தெலுங்கு) : Prime
வெங்கட் பிரபு இயக்கிய `கோவா' ரக சினிமாதான் `Ee Nagaraniki Emaindi'. தெரிந்தோ தெரியாமலோ படத்தின் முக்கால்வாசி கோவாவில் நகரும். விவேக், கார்த்திக், கௌஷிக், உப்பி ஆகிய நால்வரும் பால்ய நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். நம் கேங்கில் இருக்கும் ஒவ்வொருவரையும் கட்டாயம் இவர்கள் நினைவூட்டுவார்கள். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் ஆசை. ஆனால், ஆசை... வெறும் ஆசையாக மட்டுமே இருக்க, ஒவ்வொருவரும் வேறு வேறு வேலையைப் பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரு பார்ட்டியில் போதை தலைக்கேறிய இவர்கள், கோவாவில் கண் விழிக்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பமாகிறது ஃபன்.
-
10 `Swathanthryam Ardharathriyil' (மலையாளம்) : Netflix
ஹாலிவுட்டில் வெளியான கல்ட் ரக சினிமாவான `ஷஷாங் ரிடெம்ஷன்' படத்தின் இன்ஸிபிரேஷனில் எடுக்கப்பட்டதுதான் `Swathanthryam Ardharathriyil'. நெட்ஃப்ளிக்ஸில் `Freedom at midnight' என்று இருக்கும். ஆன்டனி வர்கீஸ், செம்பன் வினோத், விநாயகன் என மூன்று நடிப்பு அரக்கர்கள் நடித்து இருக்கிறார்கள் என்பதே முதல் முக்கிய ப்ளஸ். அடுத்தது கிரிஷ் கங்காதரனின் கேமரா. மழையின் போது ஜெயிலுக்குள் நடக்கும் ஒரு சண்டைக்காகவே படத்தைப் பார்க்கலாம். அந்தளவிற்கு நம்பகத்தன்மையோடு அமைந்திருக்கும். கதையைப் பற்றி வாயே திறக்காமல் அதைப் பார்த்து அனுபவிக்க உங்களிடமே விட்டு விடுகிறோம். ஆனால், க்ளைமாக்ஸின் போது Goosebumps கன்ஃபார்ம். #Verified
லாக்டவுனின் முதல் செட் படங்களாக இதை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாளைக்கு வேற பத்து படங்களோடு வருகிறோம்!
0 Comments