ஓடிடி தளங்கள், டிவி சேனல்களை முந்தி நிற்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நாம் விரும்பும் படத்தை அல்லது வெப் சீரிஸ் போன்றவற்றை விரும்பும் நேரத்தில் பார்க்கும் வசதியைக் கொடுத்திருக்கிறது. ஓடிடி தளங்களில் லட்சக்கணக்கான கண்டெண்டுகள் குவிந்திருக்கும் நேரத்தில் எதைப் பார்ப்பது என்பதைத் தேர்வு செய்யவே நாம் பெரும்பாலானா நேரங்களை செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களுக்காக IMDb தளத்தில் தேடி, டாப் 250 என அவர்கள் பட்டியலிட்டுள்ள வெப் சீரிஸ்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் வெப் சீரிஸ்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.
இந்தியாவின் டாப் – 10 வெப் சீரிஸ்!
Scam 1992
ஹன்சல் மேத்தாவால் உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் ஸ்டாக் மார்க்கெட் புரோக்கராக இருந்த ஹர்ஷத் மேத்தாவின் கதையைப் பேசுகிறது. 2020-ல் வெளியான இந்த வெப்சீரிஸ் IMDb பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெஸ்ட் இந்திய வெப்சீரிஸாகும். ஸ்டாக் மார்க்கெட் செயல்பாடுகளில் இருக்கும் முரண்கள், லூஃப் ஹோல்கள் பற்றிய திரைக்கதைக்காக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வெப் சீரிஸில் பிரதிக் காந்தி லீட் ரோலில் நடித்திருக்கிறார். சோனி லைவ்வில் இதை நீங்கள் பார்க்கலாம்.
Aspirants
இந்தி புரடக்ஷன் ஹவுஸாகவும் இந்தியாவின் முன்னணி யூ டியூப் சேனலாகவும் இருக்கும் டி.வி.எஃப் (The Viral Fever) நிறுவனத்தின் தயாரிப்பு இந்த வெப் சீரிஸ். நவீன் கஸ்தூரியா, சன்னி ஹிந்துஜா போன்றோர் லீட் ரோலில் நடித்திருக்கும் அஸ்பிரண்ட்ஸ் சீரிஸ் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகுபவர்கள் பற்றிய கதை. உலகின் மிகவும் கடினமான தேர்வாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள், அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என அவர்களது வலியைப் பேசியிருக்கும் இந்த சீரிஸ் யூ டியூபில் வாராந்திர அடிப்படையில் ஐந்து எபிசோடுகளாக வெளியானது. இதை டி.வி.எஃப் நிறுவனத்தின் யூ டியூப் சேனலில் பார்க்கலாம்.
Pitchers
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த சீரிஸ் இந்தியாவில் டிஜிட்டல் கண்டெண்டுகளுக்கான திரைமொழியை ஆரம்ப காலகட்டங்களிலேயே பேசியது. வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் இதற்கான வரவேற்பு, IMDb ரேட்டிங்கில் இந்திய வெப்சீரிஸ்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைத்திருக்கிறது. இளைஞர்கள் சிலர் இணைந்து புதிய தொழில் தொடங்கி, அதை நடத்த முற்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விரிவாக அலசுகிறது இந்த சீரிஸ். முதலில் யூ டியூபில் வெளியான இந்த சீரிஸை நீங்கள் டி.வி.எஃப் ப்ளே மற்றும் சோனி லைவ் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
Kota Factory
பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் இண்டஸ்ட்ரியின் பின்னணியைப் பேசிய இந்த வெப்சீரிஸ் இந்திய அளவில் மிகப் பரவலாகக் கவனம்பெற்ற சீரிஸ்களுள் ஒன்று. 2019-ல் ஐந்து எபிசோடுகளாக வெளியான கோட்டா பேக்டரி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் குவிந்திருக்கும் பயிற்சி மையங்கள் பற்றி பேசுகிறது. ஜிதேந்திர குமார், மயூர் மோர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரிஸ் டி.வி.எஃப் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு. யூ டியூபில் ஐந்து எபிசோடுகளும் சேர்த்து 130 மில்லியனுக்கும் மேலான வியூஸ்களைக் குவித்திருக்கிறது.
Gullak
ஒரு மிடில் கிளாஸ் பேமிலி, தங்களின் தினசரி வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னைகளை எதிர்க்கொள்கிறது என்பதைப் பேசிய குல்லாக் சீரிஸ், இந்தியாவின் பெரும்பான்மையான குடும்பங்களின் கேரக்டர்களைப் பிரதிபலிக்கிறது. கேரக்டர் அமைப்பு, அவர்களின் நடிப்புக்காகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வெப்சீரிஸின் முதல் சீசன் ஹிட்டடித்தது. அதையடுத்து, இரண்டாவது சீசன் இந்தாண்டு ஜனவரியில் ரிலீஸானது. இதை நீங்கள் சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Ramayan
ராமானந்த் சாகர் உருவாக்கிய ராமாயணம் முதன்முதலில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பானது. ஆனால், 2020 லாக்டவுனின் போது தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பட்ட ராமாயணம், IMDb ரேட்டிங்கிலும் கவனம் பெற்றது. வரலாற்றுப் பின்னணியில் ஒரு டிவி தொடர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டெக்னீஷியன்களால் இன்றளவும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது இந்தத் தொடர். இதில், நடித்த நடிகர்கள் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுவது அதன் வெற்றியை நமக்குச் சொல்லும்.
Mahabharat
ராமாயணத்தைப் போலவே மகாபாரதக் கதைக்கெனவும் தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. மகாபாரதம் பலமுறை டி.வி தொடர்களாக எடுக்கப்பட்டிருந்தாலும், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் அவைகளில் தனித்துவமானது. 2020 லாக்டவுனின் போது இந்தத் தொடரும் டி.வியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு அப்ளாஸ் அள்ளியது.
Sarabhai vs Sarabhai

2000-களின் தொடக்கத்தில் காமெடி களத்தில் அதிரடியாகக் களமிறங்கிய சாராபாய் vs சாராபாய் தொடர், முதலில் ஹிட்டடிக்கவில்லை. லேட்டாக ஹிட்டடித்த இந்தத் தொடருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். டெலிவிஷன் தொடர்களுக்கான காமெடி பென்ச் மார்க்கை செட் பண்ணிய தொடர்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தொடர், குடும்பப் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இதற்கான ஃபேன் பாலோயிங்கைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது. ஆனால், முதல் சீசனைப் போலவே ஆடியன்ஸிடம் இதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. இந்திய டிவி சீரிஸ்களின் கல்ட் கிளாசிக்காக இந்தி பேசும் மக்கள் இதன் முதல்சீசனைக் கொண்டாடி வருகிறார்கள். ஹாட்ஸ்டாரில் இதை நீங்கள் பார்க்கலாம்.
https://www.hotstar.com/in/tv/sarabhai-vs-sarabhai/523/monisha-ki-mannat-1/1000175396
Yeh Meri Family
மூன்று குழந்தைகளைக் கொண்ட மிடில் கிளாஸ் குடும்பத்தில் சம்மர் வெக்கேஷனைப் பற்றிய இந்த சீரிஸ், 12 வயது சிறுவனின் பாயிண்ட் ஆஃபில் கதை சொல்லப்படுவது போல் உருவாக்கப்பட்டது. டி.வி.எஃபின் மற்றொரு தயாரிப்பான இந்த சீரிஸ் 2018-ல் யூ டியூபில் வெளியாகி கவனம் பெற்றது. 1990களில் நடப்பது போன்ற கதைக்களம், பெற்றோர்களும் 3 குழந்தைகளும் கொண்ட மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை நமக்குக் கடத்தும். பக்கத்து வீட்டு குடும்பங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் இதில் கிடைக்கும். டி.வி.எஃப் பிளேவில் இருக்கும் இந்தத் தொடரின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
10.Panchayat
பிரைம் வீடியோ சீரிஸான பஞ்சாயத்து, அரசு வேலையில் ஒட்டாமல் அதில் பயணிக்கும் இளைஞரைப் பற்றியது. ஜிதேந்திர குமார் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் உளவியலையும் பேசியிருக்கும். உத்தரப்பிரதேச கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளர் பணியில் சேரும் ஹீரோவின் அனுபவங்கள் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும். IMDb-யின் இந்திய வெப்சீரிஸ்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் இதன் ரேட்டிங் 8.8. அமேசான் பிரைமில் இதை நீங்கள் பார்க்கலாம்.
இந்த லிஸ்ட்ல நிச்சயம் இந்த வெப் சீரிஸ் இருக்கணும்னு நீங்க நினைக்கிற சீரிஸ் பத்தி கமெண்ட்ல சொல்லுங்க… நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.
Also Read – IMDb வரலாறு… அதன் ரேட்டிங் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
0 Comments