ஒரு லாங்க் டிரைவ் போகனுமா… அதுக்கு என்கிட்ட ஒரு பிளேலிஸ்ட் இருக்கு. சோகமா இருந்தா கேக்குறதுக்காகவே ஒரு பிளே லிஸ்ட்… துள்ளிகுதிக்க… குமுறியழ… கொண்டாடித் தீர்க்க…அத்தனைக்கும் ஒவ்வொரு பிளே லிஸ்ட் வச்சிருக்கேன். அத்தனை பிளே லிஸ்ட்டிலும் தவறாமல் இடம்பெறக்கூடிய ஒரு விஷயம்… ஒரு ஐஸ்க்ரீம் குரல்… குளு குளு ஐஸ் க்ரீமுக்கு ஒரு குரல் இருந்தா அது ‘ஸ்வர்ணலதா’வின் குரல்தான்.
வெரைட்டி விருந்து..!
சின்னத்தம்பி படத்தில் ஒரே மெட்டில் இரண்டு பாடல்கள் இருக்கும். “போவோமா ஊர்கோலம்..”, “நீ எங்கே என் அன்பே” இரண்டு பாடல்களும் வெவ்வேறு வகை, ஒன்று துள்ளல், இன்னொன்று சோகம். இரண்டு பாடலையும் இரண்டு உணர்ச்சிகளிலும் பாடியது ஸ்வர்ணலதாவே தான்… இரண்டு விதமான உணர்ச்சிகள் மட்டுமல்ல, ஸ்வர்ணலதா பல குரல் வித்தகியும் கூட. 1960-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘முகல் இ அஸாம்’ திரைப்படம் 2004-ம் ஆண்டு டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் வெளியாகியது. அப்போது அந்தப் படம் தமிழிலும் வெளியாகியது. தமிழில் அத்தனைப் பாடல்களின் பெண்குரல்களும் ஸ்வர்ணலதாவினுடையது. ஹிந்தியில் லதா மங்கேஷ்கரும், ஷம்ஷாத் பேகமும் பாடிய ‘மெஹ்ஃபில் மே கிஸ்மத்’ பாடலின் தமிழ் வடிவத்தில் இரண்டு குரல்களையும் ஸ்வர்ணலதாவே பாடினார்.
எவனோ ஒருவன் வாசிக்கிறான் என சோக கீதம் பாடுவார், ஆட்டமா தேரோட்டமா என துள்ளியெழுவார், என்னுள்ளே என்னுள்ளே என விரகதாபத்தை ஒலிப்பார், மாலையில் யாரோ மனதோடு பேச எனஓர் இளம்பெண்ணின் தனிமையை ரகசியமாய் கிசுகிசுப்பார், மெர்குரிப் பூக்கள் என வேறொரு இளம்பெண்ணின் கொண்டாட்டத்தை பயங்கர அலட்டலுடன் கொண்டாடித்தீர்ப்பார், மலைக்கோயில் வாசலில் என ரகசியம் பேசுவார், அடி ராக்கம்மா கையைத் தட்டு என ஓங்காரமிடுவார்… 14 வயதில் எம்.எஸ்.வி தாத்தாவுக்கு முதல் பாடலை ஒரு தாயின் அரவனைப்பில் ‘சின்னஞ்சிறு கிளியே’ என தாலாட்டுவார், ‘போராளே பொன்னுத்தாயி…’ என பொல பொலவென கண்ணீர் விட்டபோது கேட்டவர்கள் அத்தனை பேருமே கண்ணீர் சிந்தினார்கள். பாடலின் ஒலிப்பதிவு முடிந்தபோது அவருமே கண்ணீர் சிந்தி இருக்கிறார். ஸ்வர்ணலதாவின் வெரைட்டி வித்தையைப் பட்டியலிட வேண்டுமானால், இந்த வீடியோ சுமார் 4 மணி நேரத்துக்குப் போய்விடும்.
ஸ்வர்ணலதா… பல குரல்… பல மொழிகள்… ஒரே மனுஷி…
ஏ.ஆர்.ரகுமானின் முதல் இந்திப் படமான ரங்கீலாவில் “ஹேய் ராமா யே க்யா ஹுவா” என ஒலிக்கும் போது அந்த வரிகளின் நேரடி அர்த்தமான “ஓ மை கடவுளே என்ன நடக்குது” அப்படின்னுதான் இருக்கும். ஸ்வர்ணலதாவின் இந்தி உச்சரிப்பும் அவ்வளவு நேர்த்தி… தென்னிந்தியாவிலிருந்து இவ்வளவு அட்சரசுத்தமான உச்சரிப்புக்கு ஹிந்திவாலாக்களும் சொக்கித்தான் போனார்கள். ரக்த் படத்தில் அவர் பாடிய “ஜன்னத் ஹேய் ஸமீன்” பாடலும் கூட ஸ்வர்ணலதாவையே குறிக்கத்தான் போல… “சொர்க்கம் இந்த பூமியிலேதான் இருக்கிறது” என தோராயமாக மொழிபெயர்க்கலாம். ஸ்வர்ணலதாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது “சொர்க்கம் இந்த பூமியிலேதான் இருக்கிறது… அது ஸ்வர்ணலதாவின் குரலுக்குள் கட்டுண்டிருக்கிறது” என்று நிச்சயம் அடித்து சொல்லலாம்…
பிறப்பால் மலையாளி. ஆனால், மலையாளித்தில் அவர் பாடிய பாடல்கள் மிகச் சொச்சமே. சிறு வயதிலேயே கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்ததால், எல்லா மொழி பாடல்களையும் கன்னடத்தில் எழுதி, மெட்டுகளை உள்வாங்கிக்கொண்டு, உச்சரிப்பு சுத்தமாக அத்தனை மொழிகளையும் கட்டியாண்டார். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழில் தலைமுறைகளைக் கடந்தும் கோலோச்சியதைப் போலவே அந்தந்த மொழிகளிலும் உச்ச இசையமைப்பாளர்களின் பாடல்களை அலங்கரித்தார். இந்தி இசையின் போற்றத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘நௌஷத்’ ஸ்வர்ணலதாவின் குரலில் சொக்கிப்போய் அவர் திறமையை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். நம்மூரில் அவருக்கு நிகரான எம்.எஸ்.வி தாத்தா கூட “நான் சந்தித்த அபூர்வமான பாடகி” என கொண்டாடினார். தெலுங்கிலும் கூட அவர் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிவிட்டே சென்றார்.
Also Read : ஸ்ரேயா கோஷல்.. எந்த மியூசிக் டைரக்டருடன் சேரும்போது மேஜிக் நடக்கிறது?
மென்சோக ராணியின் அடர் சோகம்!
புகழின் உச்சியில் இருந்தபோது திடீரென யாரும் தொடர்புகொள்ள முடியாத தூரத்துக்குப் போனார். இந்தப் பாடல் ஸ்வர்ணலதா பாடியிருக்க வேண்டியதாயிற்றே என ரசிகர்களே ஊகிக்கக்கூடிய அளவிற்கு திரையிசை வாணில் இருந்து காணாமல்போனார். பெற்றோரும் இல்லாமல், 36 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல், சகோதரர்களின் அரவணைப்பில் இருந்தவருக்கு என்ன ஆனது என உலகத்துக்கு தெரியாமல் போனது. Idiopathic Pulmonary Fibrosis என்ற விநோதமான நுரையீரலைத் தாக்கிய நோயில் வீழ்ந்தார் ஸ்வர்ணலதா. அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் சிகிச்சைகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஒதுங்கியிருந்தார். அவர் உடல்நிலை பற்றி ரகசியம் காத்தார். அந்நோயிலிருந்து அவரால் மீண்டு வரமுடியாத தூரத்துக்குச் சென்றார்.
எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலில் ‘அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…” என ஸ்வர்ணலதா உருகும் போது அந்த இடத்தில் அமைதியாக ஒரு புல்லாங்குழலில் சில நொடிகள் ஒரு சோக கீதத்தை ஒலிக்க விட்டிருப்பார் ஏ.ஆர்.ரகுமான். ஸ்வர்ணலதாவின் திடீர் மறைவுக்குப் பிறகு அவரின் எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்தப் புல்லாங்குழல் தான் சோககீதம் வாசிக்கிறது.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.