மாதவன், ரீமா சென், அனுஷ்கா, வடிவேலு, மணிவண்ணன், பாக்யராஜ், சந்தானம் என மிகப் பெரிய படையே நடித்திருக்கும் படம் ரெண்டு. சில பல டிவிஸ்ட்டுகள், பல பல காமெடிகள் என பக்காவான ஒரு கமர்ஷியல் படம்தான் இது. இந்தப் படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. வடிவேலுவின் அதகள காமெடியோடு படத்தின் சில ஹைலைட்ஸ்களை பார்க்கலாம்.
-
1 அனுஷ்கா - ரீமா சென்
நடித்த முதல் படத்திலேயே நம் பசங்களின் க்ரஷ்ஷாகினார் அனுஷ்கா. இத்தனைக்கும் படம் பாதி முடிந்த பிறகுதான் அனுஷ்கா என்ட்ரி கொடுப்பார். ஃப்ளேஷ்பேக்கில் மாதவனின் ஜோடி இவர்தான். ஒரு பக்கம் ரீமா சென், இன்னொரு பக்கம் அனுஷ்கா என்று படம் முழுக்க கலர்ஃபுல் காட்சிகள்தான். சண்டை வரக்கூடாது என்பதற்காக ஆளுக்கொரு பீச் பாடல் வேறு இடம்பெற்றிருக்கும். இதில் என்ன சோகமென்றால் அனுஷ்கா படம் முடிவதற்குள் கொல்லப்படுவார். அப்புறம் என்ன ரீமா சென் வந்ததும் அவரைப் பார்த்து படத்தை முடிச்சாச்சு.
-
2 மொபைலா
90ஸ் கிட்ஸின் மொபைல்களில் பேலன்ஸ் இருக்கிறதோ இல்லையோ 3gp அல்லது Mp4 ஃபார்மட்டில் மொபைலா பாடலின் வீடியோ கட்டாயம் இருக்கும். டிவியில் ஒளிபரப்பாகும் போது கண் இமைக்காமல் இந்தப் பாடலைப் பார்த்தது எத்தனை எத்தனை முறை. சாதாரணமாக ஆரம்பிக்கும் பாடல் பீச்சில் பயணித்து குளு குளு என முடியும். இந்தப் படத்தையும் பாடலையும் கட்டாயம் பிரிக்க முடியாது.
-
3 தேல்பத்ரி சிங்
மீம் கிரியேட்டர்களின் மீம் ஆந்தமாகவே இந்த ஒரு பிஜிஎம் ஆகிப்போனது. `எங்க அந்த ஆட்டோக்காரத் தம்பி’ என்று தலைவன் வடிவேலு கேட்ட பிறகு தேல் பத்ரி சிங் என்ற இந்த பிஜிஎம் பல மீம்களுக்குப் பயன்பட்டதோடு அன்றாட வாழ்க்கையின் கலாய் கவுன்டராகவும் மாறிப்போனது. படம் முழுக்க பாடலில் பல வெரைட்டிகளை காட்டிய இமான், காமெடிகளின் பிஜிஎம்களிலும் காமிக்கல்லாக விளையாடியிருப்பார்.
-
4 கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ
நம் வாழ்வின் முக்கியமான ஓர் அங்கமாக வடிவேலு ஆனதற்கு இந்தப் படத்தின் காமெடிகளும் ஒரு முக்கியமான காரணம். அதுவும் பீச் பக்கம் கிரேட் கிரிகாலன் ஷோ என்று இவர் செய்யும் லூட்டிகளுக்கு அளவேயில்லை. `பெட்டிக்குள்ள போன பாய் இங்க வந்துட்டேன்’, `டேய் ப்ளூ சட்டை’, `நம்ம ஷோதான் நல்லா இருக்காதேடா’, `பர்ஃபாமன்ஸ் பண்ண விடுடா’ என்பது போன்ற அனைத்து பன்ச்களும் நம் வாழ்வில் நம்முடனே பயணித்து வரும் ஒன்று.
-
5 வடிவேலு - சந்தானம்
பல பேருக்கும் இந்த படத்தில் வடிவேலு நடித்திருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால், சந்தானமும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மாதவன் ஒண்ணு இல்ல ரெண்டு என்று பாக்யராஜ் சொல்லும்போதுதான் இன்டர்வல் டிவிஸ்ட். படத்தின் முதல் பாதி வரை ஒரு மாதவன் வடிவேலுவோடு லூட்டி அடிக்க இன்னொரு பக்கம் கண்ணாடி அணிந்த மாதவன் சில கொலைகளைச் செய்வார். அது ஏன் என்று ஃப்ளாஷ்பேக்கில் சொல்வார்கள். அந்த ஃப்ளாஷ்பேக்கில்தான் சந்தானம் வருவார். வடிவேலு அளவுக்கு இல்லையென்றாலும் அவரது ஸ்டைலில் சில காமெடி கவுன்டர்களை அடித்துவிட்டுக் கிளம்ம்பிவிடுவார்.
0 Comments