கமல் வில்லன் கேரக்டர்கள்

வில்லனா வந்து நின்னா… எவனும் நிக்க முடியாது – கமலின் அட்டகாசமான வில்லன் ரோல்ஸ்!

ரெண்டும் சேர்ந்ததுதான் நான். I’m a hero; I’m a villian’னு விஸ்வபரூம் படத்துல கமல் பேசுற மாதிரி ஒரு டயலாக் வைச்சிருப்பாரு. அவரோட ஃபிலிம் கரியர்லயும் அதுதா நெசம். இப்போ நாக் அஸ்வின் டைரக்ட் பண்ற `புராஜக்ட் கே’ படத்துல வில்லன் ரோல் கமிட்டாகியிருக்கார் உலக நாயகன். பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா படானினு பெரிய ஸ்டார் கேஸ்டிங்க்கோடு வில்லனா மிரட்டப்போறார். சரி, இதுதான் அவர் வில்லனா நடிக்குற மொத படமானு கேட்டா, நிச்சயம் இல்லைங்குறதுதான் பதில். எத்தனையோ ரோல்கள்ல நடிச்சு பட்டையைக் கிளப்புன அவர் வில்லன் ரோலை மட்டும் விட்டு வைச்சிருப்பாரா என்ன… அப்படி கமல்ஹாசன் வில்லனா மிரட்டுன 6 படங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

ஆளவந்தான்

சித்தி கொடுமையால் சின்ன வயசுலேயே மனநல பாதிப்புக்குள்ளாகும் கேரக்டர். ஆர்மி ஆஃபிஸர் – மனநோயாளினு இரண்டு கேரக்டர்கள் கமலுக்கு இருந்தாலும், நந்துவா வர்ற மனநோயாளி கேரக்டர் கமலோட கரியர்ல ரொம்பவே முக்கியமானதுனு சொல்லலாம். நந்து கேரக்டருக்காக உடம்பை ஏற்றி வேற லெவல்ல உயிர் கொடுத்திருப்பார். கமலோட குரல்ல ஒலிக்குற `கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ டயலாக்காவே வர்ற அந்த பாட்டு ஐகானிக்காவே மாறிடுச்சு. தெனாவெட்டான பார்வை, ஏளனமான நடை, தலையைத் திரும்பிப் பாக்குற ஸ்டைல்னு தமிழ் சினிமா நந்துவ மாதிரியான ஒரு கேரக்டரை அதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இன்னிவரைக்கும் பாக்கலை. சொந்த சகோதரனைக் கொல்ல எந்த எல்லைக்கும் போற நந்துவோட இன்னசென்ஸ் பக்கத்தையும் நமக்குக் கடத்தியிருப்பார் கமல்.

நடிகர் கமலுக்குத் தான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. இதனாலேயே சினிமாவின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றையும் தேடித் தேடிக் கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தசாவதாரம்

கமல் பத்து கேரக்டர்கள் பண்ண மாஸ்டர் பீஸ் சினிமா… அதுல ஒரு முக்கியமான கேரக்டர்தான் கொடூர வில்லனா வர்ற கிறிஸ்டியன் ஃபிளட்சர். சிஐஏவின் முன்னாள் ஏஜெண்ட், கார்ப்பரேட் வில்லன்களுக்கு வேலை செய்யும் சூப்பர் அடியாள். Rouge Agents-ஐ நாம் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் பார்த்திருந்தாலும், அதிலிருந்து தனித்துத் தெரிய கமல் ரொம்பவே மெனக்கெட்டிருப்பார். அதேநேரம், பாடி லாங்குவேஜ்லயும், டயலாக் டெலிவரியிலும் ஃபிளெட்சரை நாம சந்தேகப்படவே முடியாது என்பதுதான் கமலின் அர்ப்பணிப்புக்குச் சான்று. தமிழ் சினிமா பார்த்த வில்லன்கள்லயே Ruthless, ஸ்டைலிஷ்னு பல விஷயங்கள்ல ஃபிளட்சர் வேற பரிணாமத்துல இருந்த கேரக்டர்னே சொல்லலாம்.

தசாவதாரம் படத்துல இருக்க பத்து கேரக்டர்கள்ல ஃபிளட்சர் கேரக்டருக்கு மட்டும்தான் reoccurring theme soundtrack வரும். அதாவது, அந்த கேரக்டர் வரும்போதெல்லாம், அந்த தீம் மியூஸிக் வர்ற மாதிரி பண்ணிருப்பாங்க. அதோட சேர்ந்து நமக்கும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும்.

சிகப்பு ரோஜாக்கள்

கமலோட கரியர்ல மட்டுமில்ல பாரதிராஜாவோட கரியர்லயும் முக்கியமான படம். நெகடிவ் ஷேட் உள்ள பணக்கார இளைஞன் திலீப் கேரக்டரில் அப்படியே பொருந்திப் போயிருப்பார் கமல். கெட்டது செய்றவனும் நீட்டா டிரெஸ் பண்ணிட்டு ஜென்டில்மேன் மாதிரி நம்ம கூடவே உலாவலாம்னு அதுக்கப்புறம் எத்தனையோ படங்கள் சொல்லிடுச்சு. ஆனால், அதுக்கெல்லாம் சிகரம் வைச்ச கேரக்டர்தான் திலீப் கேரக்டர். இரண்டு ஹீரோக்கள் நிராகரிச்ச கதை, கிளைமேக்ஸ்ல வர்ற ஒரு நிமிட சீன் தவிர எல்லா இடத்துலயும் மக்கள் வெறுக்குற கேரக்டர். சிறு வயசுல பெண்களால் பாதிக்கப்பட்டவன், வளர்ந்த பிறகு பெண்களைத் தேடித் தேடி கொல்லும் சைக்கோவாக உருவெடுக்கிறான். பெண்களைக் காதலிப்பதாக உருகுவதும், அவர்களைக் கொலை செய்யும்போது எடுக்கும் ருத்ரதாண்டவமும் அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வில்லத்தனம்னே சொல்லலாம். கமலுக்கு இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் மதன காமராஜன்

காமெடி கல்ட் கிளாசிக் படமான மைக்கேல் மதன காமராஜனில் கொஞ்சம் காமெடி கம்மியான காட்சிகள் மைக்கேலுக்குத்தான் இருக்கும். காரணம், நாலு கேரக்டர்லயும் நெகடிவ் ஷேட் தூக்கலா இருக்க கேரக்டர் மைக்கேல்தான். ரௌடியாகவும், ஸ்மக்லராகவும் இருக்கும் அவரின் முழுநேர வேலையே கள்ள நோட்டு அடிப்பதுதான். இதனாலேயே மதன், காமேஷ்வரன், ராஜூ என இவர்கள் மூவரையும் விட இறுக்கமாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். பிரெஞ்சு தாடியுடனான அவரது லுக்கும் கரகர குரலும் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கும்.

இந்திரன் சந்திரன்

ஊழல்தான் எப்போதும் இலக்கு, பெண்கள், குழந்தைகள்னா அறவே பிடிக்காது – இதுதான் மேயர் ஜி.கேவின் அடையாளம். இந்துருடு சந்துருடுனு தெலுங்குலயும் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். நான்கு குழந்தைகள், ஊனமுற்ற மனைவியைப் பிரிந்து தனியே வாழும் ஊழல் மேயர் கேரக்டர். தொந்தி, தெத்துப்பல் தொடங்கி பாடிலாங்குவேஜ், டிரெஸ்ஸிங் வரைக்குமே யுனீக்னஸ் காட்டியிருப்பார் கமல். ஒரு சீனை ஒரே மாதிரி இரண்டு தடவை நடிக்குறது கிட்டத்தட்ட இம்பாசிபிள்னே சொல்வாங்க. ஆனால், அந்த மேஜிக்கையும் இந்தப் படத்துல ஒரு சீன்ல நிகழ்த்திக் காட்டியிருப்பார் உலக நாயகன். மேயர் இறந்தபிறகு அவரை மாதிரியே சந்திரனை நடிக்க வைக்க சரண்ராஜ் டிரெய்னிங் கொடுப்பார். ஒரு மேடைல அவர் பேசுற சீன் டிவில ஓடவே, அதே மாதிரி அச்சு அசல் இமிடேட் பண்ணி நடிச்சுக் காட்டுவார் சந்திரன் கமல். இந்த ஒரு சீன் போதும் கமல் அந்தப் படத்துக்கு எவ்வளவு உழைப்பைப் போட்டிருப்பார்ங்குறது. தன்னோட தவறை உணர்ந்து 3 வயசு மகள்கிட்ட பேசுற சீன்லயும் மேயர் ஜி.கே-வா நம்மை உருக வைச்சிருப்பார்.

மன்மதலீலை

கமல் கரியர்லயே மன்மதலீலை படத்துல பண்ணது ஒரு வித்தியாசமான குடும்பத் தலைவன் கேரக்டர். ரீஜினல் மேனேஜர் மது கேரக்டர்ல நடிச்சிருந்த கமலோட சபலம் எப்படிப்பட்டதுனு முதல் சீனிலேயே டைரக்டர் சொல்லியிருப்பார். புதுசா வர்ற செகரட்டரிக்கிட்ட வழிந்தபடியே போனை வைப்பதாகட்டும், பென்சிலை கீழே தூக்கிப்போட்டு எடுப்பது, கதவு அடிக்கடி திறந்துகொள்ற வீக்னெஸ் இந்த ஆபிஸ்ல இருக்குனு வசனம் பேசுறது, பெர்மிஷன் கேட்டு வர்ற கணக்காளரின் மகளுடன் திருமணம் நடந்துவிட்டதாகக் கனவு காண்பது என அக்மார்க் பிளேபாயாகவே நடித்திருப்பார் கமல். திருமணமான நிலையிலும் எந்தப் பெண்களைப் பார்த்தாலும் அவர்கள் பற்றி கனவு காண்பது என்பதோடு, டாக்டரிடம் விளக்கம் சொல்வது என அந்த காலகட்டத்தில் எந்தவொரு நடிகரும் ஏற்று நடிக்கத் தயங்கும் துணிச்சலான கேரக்டர். என்னதான் மனைவியோட சண்டையா இருந்தாலுமே தன்னோட பிளேபாய் விளையாட்டுகளைத் தொடர்ந்து பண்ணிட்டேதான் இருப்பார். மனைவிகிட்ட மாட்டிக்கிட்டு பம்முற இடத்துலயும் ஷட்டிலா பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருப்பார் கமல்.

Also Read – எடுத்துப்பாரு ரெக்கார்டு எனக்கே ரெட் கார்டா – பாலாவுக்கு வணங்கான் ஏன் முக்கியம்?!

பிரபல ஹாலிவுட் டைரக்டர் குவிண்டின் டொராண்டினோவோட கில் பில் படம் ரொம்பவே ஃபேமஸ். அவர் ஆளவந்தானோட இந்தி வெர்ஷனான அபய் படம் பார்த்தபிறகுதான் வயலன்ஸ் காட்சிகளை அனிமேஷனா காட்டலாமேனு யோசிச்சிருக்கார். அப்படிப் பார்த்தா கில் பில் படத்துக்கு ஒரு வகைல ஆளவந்தான் இன்ஸ்பிரேஷன்னே சொல்லலாம்.

கமல் வில்லனா தெறிக்கவிட்ட கேரக்டர்கள்ல உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top