நடிகர் லால்

நிஜத்திலும் சண்டக்கோழி.. நடிகர் லால் மெர்சல் பின்னணி!

சண்டைக்கோழி காசி, பொன்னியின் செல்வன் திருக்கோவிலூர் மலையமான், கர்ணன் ஏமராஜா, டாணாக்காரன் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பல ரோல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் லால். இவரோட சினிமா பயணம் எங்க, எப்படி தொடங்குச்சு… `ப்ரண்ட்ஸ்’ இயக்குநர் சித்திக்குக்கும் இவருக்கும் இருக்கும் முக்கியமான கனெக்‌ஷன்… கோடம்பாக்கம் பாலத்துல நடக்காம நீயெல்லாம் என்ன டைரக்டர்னு கேட்ட ஒரு விஷயத்துக்காக சித்திக்கோட சேர்ந்து லால் பண்ண ஒரு சேட்டை என்னனு தெரியுமா… 50 வயசுல சிறந்த நடிகருக்காக வாங்குன முதல் ஸ்டேட் அவார்டு, 54 வயசுல ஸ்பெஷல் மென்ஷன் கேட்டகிரில வாங்குன தேசிய விருதுனு லால் பண்ண மெர்சல் சம்பவங்கள் பத்தியும் அவர் கரியரோட 4 முக்கியமான மொமண்ட்ஸ் பத்தியும்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

மிமிக்ரி டூ உதவி இயக்குநர்

சிறுவயது முதலே கலைதாகம் கொண்டிருந்த லாலின் உண்மையான பெயர் மைக்கேல். எர்ணாகுளத்தில் கல்வியை முடித்த இவர் அங்கிருந்த கலாபவன் மையத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாகத் தனது பயணத்தைத் தொடங்குகிறார். இவரது சிறுவயது நண்பர்தான் இயக்குநர் சித்திக். ஒரு கட்டத்தில் சினிமாவில் பயணிக்கலாம் என முடிவெடுத்த இவர்கள் இருவரும் புகழ்பெற்ற இயக்குநரான ஃபாசிலிடம் நோக்காதே தூரத்து கண்ணும் நட்டு படத்தில் உதவி இயக்குநராகச் சேர்கிறார்கள். மலையாளத்தில் மோகன்லால், பத்மினி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் மூலமாகத்தான் நதியா நடிகையாக அறிமுகமானார். பின்னாட்களில் தமிழில் `பூவே பூச்சூடவா என்கிற பெயரில் இதே படத்தை ஃபாசிலே எடுத்திருந்த படம்தான் இது.

நடிகர் லால் – இயக்குநர் சித்திக்

சித்திக் – லால் கூட்டணி

லாலைப் பத்தி பேசணும்னா, சித்திக்கைப் பத்தி பேசாம இருக்க முடியாது. அந்த அளவுக்கு இரண்டு பேரும் அவ்வளவும் குளோஸ். சித்திக்கும் லாலும் சிறுவயது நண்பர்கள் என்றாலுமே இருவரும் இணைந்த தருணம் சுவாரஸ்யமானது. சிறுவயதில் இருவரும் தனித்தனி குரூப்பில் இருந்திருக்கிறார்கள். இரண்டு குரூப்களும் நாடகம், ஃபுட்பால் போட்டிகள் என முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் லால் நடித்த ஒரு நாடகத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்தால், நாங்களும் போடுவோம் என அவரிடம் சித்திக்கின் குரூப் கேட்டு வந்திருக்கிறது. அந்த ஸ்கிரிப்டைக் கொடுத்த கையோடு, லால் அதில் ஏற்று நடித்திருந்த பாத்திரத்தில் அவரையே நடிக்கவும் கேட்டிருக்கிறார்கள். அதை ஒப்புக்கொள்ளவே அங்கு தொடங்கியிருக்கிறது இரண்டு குரூப்புகளின் சங்கமம். அதுமுதல் இரண்டு பேரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இரண்டு பேரும் இணைந்து நாடகம் போடத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு போட்டியில் இவர்கள் நாடகம் போட்டபோது, சிறந்த நடிகர் பட்டம் லாலுக்குத்தான் கிடைக்கும் என்று திடமாக நம்பியிருக்கிறார்கள். ஆனால், அப்போது மெலிந்த உருவம் கொண்டிருந்த லால், ரெக்கார்டட் வாய்ஸைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நடுவர் குழு முடிவு செய்து (அப்போது லாலின் பெயர் பால் மைக்கேல்), அவருக்கு விருது கொடுக்க மறுத்திருக்கிறது. இதனால், கோபமடைந்த நண்பர்கள் இருவரும் நாடகத்தின் ஜட்ஜாக இருந்தவரின் வீட்டுக்கே சென்று கல்லை விட்டு எறிந்து எதிர்ப்பைக் காட்டினார்களாம்.

ஒரு கட்டத்தில் ஃபாசிலிடம் இருந்து பிரிந்துவந்த இந்தக் கூட்டணி முதல்முறையாக 1980 ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் என்கிற பெயரில் காமெடி படம் ஒன்றை இயக்கியது. அந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இன் ஹரிஹர்நகர்’,காட்ஃபாதர்’ , `வியட்நாம் காலனி’ மற்றும் காபூலிவாலா ஆகிய படங்களை ஒன்றாகச் சேர்ந்து இயக்கினார்கள். மலையாளத் திரையுலகம் என்றில்லை இயக்குநர்கள் பலரும் எண்ட் கார்டில் தங்கள் பெயரோடு நண்பர்கள் என்கிற வார்த்தையை இணைத்துக் கொள்ள முன்னோடி சித்திக் – லால் கூட்டணி என்றால் அதுமிகையல்ல. காமெடி டயலாக்குகள் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 1993-ல் பிரிந்தது. அதற்கான காரணத்தை இன்று வரை இவர்கள் இருவருமே எந்தவொரு இடத்திலும் பகிர்ந்ததில்லை. அதேநேரம், 2016-ல் திலீப்பின் கிங் லையர் படத்தில் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதிக் கொடுத்ததோடு, இன்று வரை அந்த நட்பையும் பேணி வருகிறார்கள்.

Also Read – ‘ஜெயிலர், கேப்டன் மில்லர்’ வில்லன்… சிவராஜ்குமார் கதை!

இவர்கள் நட்புக்கு இன்னொரு சம்பவத்தையும் உதாரணமாகச் சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் மலையாளப் படங்களில் வேலைகள் சென்னையில்தான் நடக்கும். அப்போது, `கோடம்பாக்கம் வெயில் பார்த்திருக்கீங்களா… கோடம்பாக்கம் பாலத்தை நடந்தே கடந்துருக்கீங்களா… இதையெல்லாம் செய்யாம நீங்களாம் என்ன ஒரு டைரக்டர்?’ என்று மலையாளத் திரையுலகில் அடிக்கடி சொல்வார்களாம். இதைக் கேட்ட சித்திக்கும் லாலும் கோடம்பாக்கம் பாலத்தை நடந்து கடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை சென்னை வந்தார்களாம். பாலத்தின் ஒரு எண்ட் வரை ஆட்டோவில் சென்று இறங்கி அங்கிருந்து பாலம் ஏறி, இறங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படி பாலத்தை பாதி ஏறி கடந்த போது ஒரு கார் இவர்கள் அருகில் வந்து நின்றிருக்கிறது. அதில், மலையாள இசையமைப்பாளர் கண்ணூர் ராஜேந்திரன், துளசிதாஸ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாலத்தை நடந்தே கடப்பது என்கிற தீர்மானத்தோடு அதை மறுத்துவிட்டார்களாம் இருவரும்.

நடிகர் லால்

இயக்குநர் – தயாரிப்பாளர்

சித்திக்கிடம் இருந்து பிரிந்தபிறகு ஃபாசிலிடம் ஒரு சில படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். தமிழில் ரஜினி நடித்து பி.வாசு இயக்கிய சந்திரமுகியின் ஒரிஜினல் வெர்ஷனான மணிச்சித்திரத்தாழ் படத்தின் செகண்ட் யூனிட் டைரக்டர் நம்ம லால்தான். 1990-ல் சித்திக்குடன் இணைந்து இயக்கிய இன் ஹரிஹர் நகர் படத்தின் இரண்டாம் பாகமாக 2009-ல் டு ஹரிஹர் நகர் படத்தை இயக்கி தனி இயக்குநராக அறிமுகமானவர், அதன்பின்னர் In Ghost House Inn, Tournament – Play & Replay மற்றும் Cobra உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவரது மகன் ஜீன் பால் லாலும் மலையாளத்தில் திரைப்பட இயக்குநர்தான். அவருடன இணைந்து Tsunami என்கிற படத்தையும் லால் இயக்கியிருக்கிறார். இவரது முதல் தயாரிப்பான ஹிட்லர் படத்தின் ஹீரோ மம்மூட்டி. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஃப்ரண்ட்ஸ், தென்காசிப்பட்டணம், கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட முக்கியமான பல மலையாளப் படங்களைத் தயாரித்தது இவரின் லால் மீடியா ஆர்ட்ஸ் நிறுவனம்தான். மலையாளத் திரையுலகில் பல படங்களை வாங்கி விநியோகிக்கவும் செய்திருக்கிறார் லால்.

நடிகர் லால்

நடிகர் லால்

1993-ல் சித்திக் – லால் கூட்டணி பிரிந்தபிறகு சித்திக் தனியாகப் படங்களை இயக்கத் தொடங்கிவிட்டார். அதேநேரம் லால் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது, 1989 மலையாளத்தில் புகழ்பெற்றிருந்த இயக்குநர் ஜெய்ராஜ் இயக்கிய களியாட்டம் படத்தின் வில்லன் ரோல்தான். ஷேக்ஸ்பியரின் ஒத்தலோ நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டிருந்த அந்தக் கதையில் லாகோ (Lago) எனும் வில்லன் கேரக்டரை ஒட்டி வடிவமைக்கப்பட்டிருந்த பனியன் கேரக்டரில் நடித்திருந்தார் லால். அதன்பிறகு பல படங்களில் நடித்த லாலுக்கு 2005-த்தில் வெளியான சண்டைக்கோழி படம் தமிழில் பிரேக் கொடுத்தது. இப்போது வரை சண்டைக்கோழி காசி கேரக்டரில் வேறு ஒரு நடிகரை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரத்துக்கு லால் உயிர் கொடுத்திருப்பார். அதன்பின்னர், தொடர்ச்சியாக மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ்ல பார்த்தீங்கன்னா, கர்ணன் ஏமராஜா, டாணாக்காரன் ஈஸ்வரமூர்த்தி, சுல்தான் மன்சூர், சீமராஜா காத்தாடி கண்ணன் போன்ற கேரக்டர்கள் முக்கியமானவை. அசிஸ்டண்ட் டைரக்டராக சினிமாப் பயணத்தைத் தொடங்கிய லால், 2012-ல் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்துக்காக முதன்முறையாக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது வாங்கியபோது அவரின் வயது 50. நான்காண்டுகளுக்குப் பிறகு 2016-ல் ஸ்பெஷல் மென்ஷன் தேசிய விருதையும் வென்றார். அதேபோல், சமீபத்தில் வெளியான பொன்னியில் செல்வன் படத்தில் திருக்கோவிலூர் மலையமான் கேரக்டரில் நடித்திருந்தார் லால்.

தமிழில் லால் நடித்ததிலேயே உங்களோட ஃபேவரைட் கேரக்டர் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top