நடிகர் நாசரை வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என எந்த வட்டத்ள்ளும் சுருக்கி விடமுடியாது. சின்ன ரோலில் ஆரம்பித்து ஹீரோ வரைக்கும் ஒரு படத்தின் எல்லா விதமான கேரக்டர்களையும் நடித்திருக்கிறார். இந்தக் கட்டுரையில் நாசரின் நவரசா தருணங்களைத்தான் பார்க்கப்போகிறோம்.
-
1 தந்திரம் - இம்சை அரசன் 23ம் புலிகேசி
இம்சை அரசன் படத்தில் தனது அக்காவிற்கு பிறக்கும் சொல்புத்தி மற்றும் சுயபுத்தி குழந்தைகளில் சொல்புத்தி குழந்தையை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, அவரை கைப்பாவையாக பயன்படுத்தி, தந்திரமாக அரசை ஆளும் ராஜகுரு கதாபாத்திரம்தான் நாசருக்கு. வடிவேலு கொடுக்கும் காமெடியான தண்டனைகளை அவர் முன் இருக்கும் போது சிரித்துவிட்டு கடப்பதும், அவருக்கு பின்னால் தந்திரமாக சூழ்ச்சி செய்வதுமாக தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருப்பார், நாசர்.
-
2 தேவர் மகன் - கொடூரம்
தேவர் மகன் படத்தில் நாசர் நடித்த மாயன் என்கிற கதாபாத்திரத்தில் அவரைத் தவிர்த்து வேறு எந்த நடிகரையும் வைத்துப் பார்க்க முடியாததுதான் நாசரின் வெற்றி. ஒரு பக்கம் கமல் இன்னொரு பக்கம் சிவாஜி என இரு பெரிய ஆளுமைகளை முறைத்து கொள்ளும் ஒரே ஆளாக நடித்து மிரட்டியிருப்பார். தேவர்மகன் படத்தைப் பார்த்த சிவாஜி, ‘படத்துல நீதான்யா நல்லா நடிச்சிருக்க’ என்று சொன்ன வார்த்தைகள்தான் நாசருக்கு கிடைத்த ஆஸ்கர்.
-
3 குருதிப்புனல் - வீரம்
நாசரின் சினிமா கரியரில் குருதிப்புனல் படம் முக்கியமானது... நாசர் எவ்வளவு பெரிய மகா கலைஞன் என்பதைக் காட்ட இந்தப் படத்தில் அவர் காட்டும் சில நொடி ரியாக்ஷன்களே போதும். விசாரணைக் காட்சிகளில் மங்கலான விளக்கொளியில் அழுத்தமாக, எந்தவித சலனமும் காட்டாத நாசரின் முகமும், வீரம்னா என்னன்னு தெரியுமா வசனத்தின் போது அவர் முகத்தில் இருக்கும் திமிரும், ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் எனும் போது அவர் காட்டும் அலட்டலான முகமுமாக... நாசர் இந்தப் படம் முழுக்க செய்தது அட்டகாச மேஜிக்!
-
4 அவதாரம் - பரிதாபம்
நாசர் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் அவதாரம். இந்தப் படத்தில் அழிந்துவரும் நாடகக் கலையை மக்களுக்கு கொண்டு சேர்க்கப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பரிதாபம் என்பதற்கு மிக பொருத்தமாக இருக்கும் படியான பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன.
-
5 பாகுபலி - வன்மம்
தனது அப்பாவிற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறும் அதிகாரம் தனக்கு கிடைக்காததற்கு தன் உடல் ஊனம்தான் காரணம் என நினைத்து, அரியணையில் இருந்த தனது தம்பி, தம்பி மகன் என தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வன்மத்தை கொட்டும் கதாபாத்திரம்தான், பாகுபலி படத்தில் நாசர் நடித்த கேரக்டர். படத்தில் அவரது தோற்றம், பாடி லாங்குவேஜ் என பல விஷயங்களை வித்தியாசமாக முயற்சி செய்த நாசர், படத்தில் பிங்கல தேவனாக மிரட்டியிருப்பார்.
-
6 மகளிர் மட்டும் - காமம்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு இந்த மாதிரியான கேரக்டர்கள் புதிதல்ல. ஆனால், படம் முழுக்க அந்த கேரக்டரை நடிக்க வைத்ததுதான் புதுமை. அதில் நாசர் நடித்தது அந்தக் கேரக்டருக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். தனது அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று பெண்களிடமும் தவறான நடந்துகொள்ள நினைக்கும் நாசர், அதற்காக எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்; அதனால் அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வில்லன் கதாபாத்திரத்திலேயே கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர் என்பதால் கலக்கியிருப்பார் நாசர்.
-
7 எம்.மகன் - கண்டிப்பு
எம்.மகன் நாசரை யாராலும் மறக்கவே முடியாது. ஏனென்றால், படத்தில் ஏதாவது ஒரு காட்சியாவது, பார்ப்பவர்களின் அப்பாவை நினைவு படுத்திவிடும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, தனது அப்பாவைப் போலவே சில காட்சிகளில் நடித்தாராம் நாசர். கண்டிப்பான தந்தை என்றால் அது எம்டன்தான்.
-
8 ஜீன்ஸ் - அப்பாவி
ஜீன்ஸ் படத்தில் பிரசாந்தைப் போல நாசருக்கு இரட்டை வேடம். நாச்சியப்பன் பெரிய பிசினஸ் மேன் என்றால், பேச்சியப்பன் அப்பாவித்தனத்தின் உச்சக்கட்டம். கணக்கு தெரியாமல் ஊர் மக்களால் கிண்டல் செய்யப்படுவது; தனது மனைவியிடம் திட்டு வாங்குவது என அப்பாவியாகவே வாழ்ந்திருப்பார், நாசர்.
-
9 பொய் சொல்லப்போறோம் - காமெடி
நாசர் நடித்த காமெடி வேடம் என்றதும் பலருக்கும் அவ்வை சண்முகி பாட்ஷாதான் நினைவுக்கு வருவார். ஆனால், ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தில் பேபி என்கிற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாகவே காமெடி செய்திருப்பார். அதிகம் பேசாமல் தனது பாடி லாங்குவேஜ், முக பாவனைகள் மூலம் கலக்கியிருப்பார்.
0 Comments