அஜித்

அஜித்தின் டப்பிங் டெக்னிக் தெரியுமா… ஆரம்பகால விமர்சனங்கள்!

 ஆரம்ப கால அஜித்துக்கு அவரது குரல் மிகப்பெரிய மைனஸாக இருந்தது. அப்போதைய படங்களில் வரும் அவரது குரலில் சுத்தமாக பேஸ் இல்லாமல், தட்டையாகத்தான் இருக்கும். இப்போதும் மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் அஜித்தின் வாய்ஸை இமிடேட் செய்யும்போதுகூட ‘ஏய்ய்ய்.. நான் தனி ஆளு இல்ல… அது’ என அவரைப்போலவே பேஸ் இல்லாமல் பேசி கிண்டலடிப்பது வழக்கம். ஆனால் இப்போதைய அஜித்தின் படங்களில் அவரது ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் என்பது எந்த அளவுக்கு தாறுமாறாக மாறி இருக்கிறதோ அதே அளவுக்கு அவரது குரலிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றங்கள்..?

அஜித்
அஜித்

அஜித்தின் ஆரம்பகால படங்களில் அவரது குரலும் உச்சரிப்பும் வீக்காக இருந்ததற்கு முக்கிய காரணம் அவரது தாய் மொழி தமிழ் இல்லை என்பததுதான். நாளடைவில் குரலைவைத்து தன் மீது வைக்கப்படும் இந்த விமர்சனத்தை நன்கு புரிந்துகொண்ட அஜித், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க நினைத்தார். முதல்கட்டமாக, தமிழ்மொழியை தீவிரமாக கற்றுத் தேர்வதென முடிவெடுத்தார் அஜித். அதன்படி முதலில் தமிழ் மொழியை நன்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்ட அஜித், தமிழ் மொழியின் உச்சரிப்புகளிலும் நன்கு பயிற்சிபெற்றார். மேலும் வசன உச்சரிப்பைப் பொறுத்தவரை டப்பிங் ஸ்டூடியோவில் போய் பார்த்துக்கொள்ளலாம் என நினைக்காமல் ஸ்பாட்டில் டயலாக் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநர்களிடமே அதன் சரியான உச்சரிப்பையும் கேட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.  அதன்பிறகு இனிமேல் தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கப்படும் சீன் பேப்பர்கள் தமிழிலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த பல பிரபலங்களுக்கு நம் உதவி இயக்குநர்கள் தங்கிலீஷில் சீன் பேப்பர்களை எழுதிக்கொடுத்துவரும் நிலையில், பல வருடங்களுக்கு முன்பிருந்தே அஜித், தமிழிலேயே தன்னுடைய காட்சிகளை படிக்க ஆரம்பித்தார்.

அஜித்
அஜித்

இவ்வாறு தமிழை முழுதாக உள்வாங்கிக்கொண்டு அதன் உச்சரிப்பை சரியாக வெளிப்படுத்தியபோது ஓரளவு அவரது குரலில் சரியான ஏற்ற இறக்கங்கள் உருவாக ஆரம்பித்தது. இதன் அடுத்தகட்டமாக இன்னும் தன் குரலில் பேஸ் வரவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென தீவிரமாக யோசித்தார் அஜித். அதன்படி, இனி அதிகாலை நேரங்களில் டப்பிங் பேசுவதென முடிவெடுத்தார். பொதுவாகவே அனைவருக்கும் அதிகாலை நேரத்தில் குரலில் ஒரு அடர்த்தி இருக்கும். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தார் அஜித். மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட சில கேரக்டர்களுக்கும் குறிப்பிட்ட சில மாடுலேஷன்களுக்கும் மட்டுமே அதிகாலை டப்பிங் டெக்னிக்கை பயன்படுத்திவந்த நிலையில், அஜித் தனது படம் முழுவதற்கும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.  இதற்காக நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் தன்னுடையை வீட்டிலிருந்து கிளம்பிவந்து மூன்று மணியிலிருந்து எட்டு மணி வரை டப்பிங் பேசுவதென திட்டமிட்டார்.  அந்த நேரத்தில் இருக்கும் குரலின் அடர்த்தியின் விளைவாக, அஜித்தின் குரல் தியேட்டர்களில் சிம்மக் குரலாக கர்ஜிக்கத் தொடங்கியது. இதன் முதல் அறுவடையை `வீரம்’ டீஸரில் அனுபவித்தார் அஜித். அந்த டீஸரில் அவர் ‘என்னத் தாஆஆஆண்டி’ என பேசும் மாடுலேஷனைத்தான் அதன்பிறகு அவரது படங்களில் தொடர்ந்து பயன்படுத்திவருகிறார். இதே டெக்னிக்கைத்தான் தற்போது ‘வலிமை’ படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் அஜித்.  நீங்கள் வேண்டுமானால் சமீபத்தில் வெளியான அவரது `நேர்கொண்ட பார்வை’ படத்தில் இருக்கும் அவரது குரலையும் ‘வாலி’  காலத்து படங்களில் இருக்கும் அவரது குரலையும் ஒப்பீட்டு பார்த்தீர்களென்றால் உங்களுக்கே வித்தியாசம் புரியும்.

அஜித்
அஜித்

மேலும் இந்த அதிகாலை டப்பிங் மேட்டரில் அஜித்துக்கு இன்னொரு நன்மையும் கிடைக்கிறது. அதாவது, டப்பிங் பேசுவதற்காக, ஏ.வி.எம் மாதிரியான பிரபல ஸ்டூடியோக்களுக்கு பகல் நேரத்தில் வந்துபோவதில் அவருக்கு பல சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக ரசிகர்களின் கண்களில் படாமல் தப்பிப்பது என்பது ஒவ்வொருமுறையும் அஜித்துக்கு பெரும் சவாலாக இருந்துவந்தது. அதுவே அதிகாலையில் வந்து டப்பிங் பேசி முடித்துவிடும்போது அவருக்கு ஒருவகையில் சௌகர்யமாக அமைந்தது. இனி, அந்தப் பிரச்சனையும் அஜித்துக்கு இருக்கப்போவதில்லை. ஏனெனில் அஜித் தற்போது திருவான்மியூரில் புதிதாக கட்டிவரும் அவரது இல்லத்திலேயே ஒரு டப்பிங் ஸ்டூடியோவையும் அமைத்துவிட்டார். இனி அவரது அடுத்தடுத்த படங்களுக்கு எல்லாம் அங்கேயேதான் டப்பிங் நடக்கப்போகிறது.

Also Read – `Onam ashamsakal’ – ஹீரோயின்களின் கலர்ஃபுல் ஓணம் புகைப்படங்கள் #PhotoGallery

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top