சினிமாவில் வெறும் கதை மட்டுமே முக்கியமல்ல. தூணில் இருந்து துரும்பு வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தால் மட்டுமே ஒரு அற்புதமான படைப்பு தயாராகும். ஒரு காட்சியின் போக்கை வசனங்களால் கடத்தி விடலாம். ஆனால், ஒரு காட்சியின் ஆழத்தை ரசிகர்களுக்குக் கடத்துவது கேமராவும் அதன் ஆங்கிளும்தான்.
இனிமேல் நீங்கள் பார்க்கப்போகும் சினிமாவோ அல்லது நீங்கள் இதுவரை பார்த்த ஒரு சினிமாவோ, இந்த கேமரா ஆங்கிளை எல்லாம் நோட் பண்ணி அந்த காட்சியை அணுகிப் பாருங்க. இயக்குநரும் கேமராமேனும் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியும். முன்பே சொன்னதுபோல் ஒரு காட்சியின் ஆழத்தை அதன் கேமரா ஆங்கிளே தீர்மானிக்கிறது. அப்படி என்னென்ன வகையில் எதற்காக எல்லாம் அந்த கேமரா ஆங்கிளானது வைக்கப்படுகிறது; அப்படி அந்த கேமரா ஆங்கிளில் என்னென்ன அடிப்படை வகைகள் இருக்கின்றன… வாங்க பார்க்கலாம்!
சிம்பு இன்ட்ரோ : Mixed Angles

-
1 ஹீரோ இன்ட்ரோ :
பொதுவாக ஒரு மாஸ் ஹீரோவை இன்ட்ரோ செய்யும்போது சடாரென முகத்தைக் காட்டிவிட மாட்டார்கள். முதலில் அந்த ஹீரோவுக்கான பிஜிஎம் பின்னணியில் ஒலிக்கும். சாதாரண ஒரு சூழலைப் பரபரப்பாக மாற்றி அதை நமக்கும் தோன்ற வைப்பதற்குதான் இந்த பிஜிஎம். அதன் பிறகு ஹீரோவின் Low ஆங்கிளில் இருந்து விஷுவல் காட்டப்படும். அல்லது ஹீரோவின் மற்ற பாகங்களைக் காண்பிப்பார்கள். பிஜிஎம்மின் ஹை பிட்ச்சும் ஹீரோவின் முகத்தைக் காட்டும் ஆங்கிளும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும். திரையரங்கில் பார்க்கும் ரசிகர்களை கதறவிடும் நோக்கில்தான் ஒரு மாஸ் ஹீரோவின் இன்ட்ரோவுக்கான ஃபார்முலா இவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான `மாஸ்டர்' படத்தின் விஜய்யின் இன்ட்ரோவையும், விஜய் சேதுபதியின் இன்ட்ரோவையும் சொல்லலாம். இப்படி எந்த ஒரு கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களை எடுத்துப் பார்த்தாலும் அப்படியான ஃபார்முலாதான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
-
2 Bird view & God view :
இந்த இரு விதமான கேமரா ஆங்கிளும் பல்வேறு காட்சி அமைப்புகளின் போது பயன்படுத்தப்படும். படம் ஆரம்பித்தவுடன் கதை சொல்லி அந்தப் படத்திற்கு நம்மை தயார் செய்வார். அதற்கு மட்டுமல்லாமல் கார் சேஸிங், ஒன்றிக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும் பரபர திரைக்கதை, ஒரு ஊரை அறிமுகப்படுத்துதல் எனப் பல்வேறு ஷாட்களுக்கு இந்த Bird view மற்றும் God view உபயோகப்படும். பறவை பறக்கும் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி கேமரா ஆங்கிளை வைத்தால் அது Bird view. அதற்கும் பல கிலோமீட்டர் மேல் கேமரா ஆங்கிளை வைத்து கீழே காட்டினால் அது God view. உதாரணத்திற்கு கமல் நடித்த `தசாவதாரம்' படத்தில் கல்லை மட்டும் கண்டால் பாடலில் அந்த Bird view-வை பார்க்கலாம். அதேபோல் `பாகுபலி' படத்தில் ஏகப்பட்ட Bird view மற்றும் God view ஆங்கிள்களைப் பார்க்க முடியும்.
`வீரம்', `விஸ்வாஸம்', `வேதாளம்' போன்ற படங்களில் அஜித்தின் இன்ட்ரோ. ஆனால், இதைவிட அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் சிம்பு இன்ட்ரோவை சொல்லலாம். படம் எப்படியோ இந்தப் படத்தின் இன்ட்ரோ கொடுத்த மாஸ் வேற லெவல். இதில் ஒரு ஆங்கிள் மட்டும் இல்லாமல் பல்வேறு ஆங்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்ட்ரோ இன் தமிழ் சினிமா.
-
3 Eye level shot :
திரையில் நடிக்கும் இரு நடிகர்களின் கதாபாத்திரத் தன்மையுமே ஒன்று என்பதைக் குறிப்பதே இந்த Eye level shot. எந்த பாகுபாடும் இன்றி நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது இந்த கேமரா ஆங்கிளை உபயோகப்படுத்துவார்கள். ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது, காதலனும் காதலியும் நேரில் சந்தித்துப் பேசும்போது இப்படியான ஷாட்டைத்தான் பயன்படுத்துவார்கள். எந்த மெனக்கெடலும் இல்லாமல் சிம்பிளாக வைக்கபப்டும் ஒரு ஷாட்தான் இது. `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவும் த்ரிஷாவும் பார்த்துக்கொள்வது, `கபாலி' படத்தில் ரஜியினியும் டோனி லீயும் எதிரெதிரே அமர்ந்து `நீயும் நானும் ஒண்ணுதான்' என்பதைச் சொல்லாமல் சொல்லும் ஆங்கிள் போன்ற ஷாட்களை உதாரணமாகச் சொல்லலாம்.
-
4 Low Angle shot :
ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் சந்திக்கும் போது Eye level shot-யை பயன்படுத்துவார்கள். இதுவே ஹீரோவையும் வில்லனையும் தனித்தனியாக காட்டும்போது Low angle shot-யைதான் முக்கால்வாசி பயன்படுத்துவார்கள். அந்தக் கேரக்டரின் அடர்த்தியையும், இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் இதுதான் என்று புரிய வைக்கவும் இந்த ஷாட் பயன்படுத்தப்படுகிறது. அப்படியே Low ஆங்கிளில் இருந்து மெல்ல சப்ஜெக்ட்டின் முகம் காட்டப்படும். உதராணத்திற்கு Protagonist மற்றும் Antogonist-ன் இன்ட்ரோவை சொல்லலாம்.
-
5 High Angle shot :
பல்வேறு காரணங்களுக்காக இந்த ஷாட் ஆனது வைக்கப்படுகிறது. ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட வைப்பதற்கு, தன்னை விட ஒரு பெரிய சப்ஜெக்ட்டை அாண்ணாந்து பார்ப்பதற்கு, கதை நடக்கும் இடத்தை ஏரியல் ஷாட்டில் காட்டுவதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த வகை ஆங்கிள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஸ்கூலில் படிக்கும்போது மண்டியிடுவதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். டீச்சர் பனிஷ்மென்ட் கொடுப்பதற்காக மட்டுமே நம்மை மண்டியிடச் சொல்கிறார்கள். மண்டியிட்ட நாம் அண்ணாந்துதான் டீச்சரைப் பார்க்க முடியும். அப்போது டீச்சரின் கண்களை நாம் கேமராவாக நினைத்துக் கொள்வோம். அவர்களின் பார்வையில் இருந்து நாம் தரையில் ஒருவித தாழ்வுமனப்பான்மையோடுதான் மண்டியிட்டிருப்போம். இதுதான் சிம்பிள் உதாரணம். ஒரு சினிமாவில் பல்வேறு சூழலில் பல்வேறு விதமாக இந்த High angle shot ஆனது பயன்படுகிறது. குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்களில் அதிகமாக இந்த வகை ஆங்கிள்களைப் பார்க்கலாம்.
`மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதிக்கு விஜய்க்கும் இடையே போன் உரையாடல் ஒன்று நடக்கும். அப்போது விஜய்க்கு சம்பந்தப்பட்ட சிலர் கொல்லப்படுவார்கள் அந்த விரக்தியில் விஜய் மண்டியிட்டு மேல் நோக்கி கத்துவார். பவானியின் பிடியில் இப்போது JD இருக்கிறார் என்பதன் உணர்த்துதல்தான் அது.
-
6 Knee level shot/ Ground level shot :
முட்டி என்றாலே மிஷ்கின்தான் நம் ஞாபகத்தில் வருவார். அவரின் பிரத்யேக ஆங்கிள்தான் இவை இரண்டுமே. கிரவுண்டில் இருக்கும் சப்ஜெக்ட்டை பார்வையாளர்களுக்கு கடத்தவே இந்த மாதிரியான ஷாட்கள் பயன்படுகிறது. தூரத்தில் ஒரு கேங்காக நிற்கும் கூட்டத்தை ஹீரோ எதிர்கொள்ளும்போது இந்த கேமரா ஆங்கிளானது ஹீரோவின் கால்களைக் காட்டி தூரத்தில் இருக்கும் கும்பலையும் காட்ட உதவுகிறது. இது மூவிங் கிரவுண்ட் லெவல் ஷாட். இதுவே குறிப்பிட்ட ஒரு சப்ஜெக்ட்டை ஹைலைட் செய்து ஸ்டெடி ஷாட்டாக வைத்திருந்தால் அந்த சப்ஜெக்ட்டை நோக்கி ஒரு கதாபாத்திரம் வந்தடையும். உதாரணத்திற்கு செத்துக் கிடக்கும் பிணத்தை அடையாளம் கண்டுபிடிக்க வருவது போன்ற காட்சியை சொல்லலாம். பிணத்தை நோக்கி அந்த கேமரா ஆங்கிள் ஸ்டெடியாக இருக்கும், அதை நோக்கி வரும் பாத்திரம், அந்த சப்ஜெட்டை நோக்கி விரைந்து வருவார். தரை அளவிற்கு கீழே இருக்கும் சப்ஜெக்ட்டை பார்த்து எமோஷனை வெளிக்கொண்டு வருவார். இவை அனைத்து அந்த ஆங்கிளில் கவர் ஆகிவிடும். `வேட்டையாடு விளையாடு', `சைக்கோ', `யுத்தம் செய்', `அஞ்சாதே', `விஸ்வரூபம்' எனப் பல படங்களில் நம்மால் இந்த ரக ஆங்கிள் ஷாட்களைப் பார்க்க முடியும்.
-
7 Shoulder level shot :
இந்த ஷாட்டும் ஏகப்பட்ட இடத்தில் பயன்படும். ஒரு சூழ்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் வியூ எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஷாட் வைக்கப்படும். `புதுப்பேட்டை', `ஜிகர்தண்டா', `தலைவா', `இருவர்', `விக்ரம்' படத்தின் டீஸர் என ஏகப்பட்ட படத்தில் இந்த ஷோல்டர் ஷாட்களைப் பார்க்கலாம். இது கலவையான எமோஷனைக் கடத்த உதவும் ஆங்கிள்.
மேற்கூறிய கேமரா ஆங்கிள்கள்தான் ஒரு சினிமாவுக்கான அடிப்படை. இவை இல்லாமல் எண்ணற்ற கேமரா ஆங்கிள்கள் இருக்கின்றன. மொழிகளுக்கு அப்பாற்பட்டதுதான் கேமரா ஆங்கிள். வசனங்களின்றி ஒரு காட்சி வெளிக்காட்ட நினைக்கும் எமோஷன்களை இந்த கேமரா ஆங்கிளானது வெளிப்படுத்திவிடும். தற்போது வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பல ஒளிப்பதிவாளர்கள் இதில் விளையாடுகின்றனர். அதை பல படங்களில் நம்மால் பார்க்கவும் முடிகிறது. அதில் பல மெனக்கெடல்களோடு குறியீட்டை அள்ளித் தெளித்திருப்பார்கள்.
இதேபோல் சினிமாவில் பயன்படுத்தப்படும் அடிப்படையான கலர் கரெக்ஷன்ஸ்கள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
0 Comments