காலத்தாலும் அழிக்கமுடியாத பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அவற்றை நாம் ஏன் கொண்டாடுகிறோம்; அந்தப் படங்களின் உருவாக்கத்தின் போது என்னெல்லாம் நடந்தது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு தமிழ்ப்படமும் இன்றுவரைக்கும் தொட்டிடாத, 1,000 நாள்கள் ஓடிய சாதனையோடு இருக்கும் படம்தான் சந்திரமுகி. இந்த கட்டுரையில் அந்தப் படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
-
1 வேட்டையன்:
சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மணிசித்ரத்தாழ் படத்தில் மோகன் லால் வேட்டையன் கேரக்டரில் நடித்திருக்க மாட்டார். மோகன் லாலில் நண்பர் கேரக்டரில் நடித்திருந்த சுரேஷ் கோபிதான் ஒரிஜினல் வேட்டையன். சந்திரமுகியை பொறுத்தவரை சந்திரமுகியின் காதலுக்குத் தடையாக இருப்பது வேட்டையன்தான். அப்படிப்பார்க்கும் போது சந்திரமுகியாக தன்னை நினைத்துக்கொள்ளும் பெண்ணுக்குத் தனது காதலனுடன் சேரத் தடையாக இருக்கும் கணவர்தானே வேட்டையனாக இருக்க முடியும். அப்படித்தான் ஒரிஜினல் வெர்ஷனில் இருக்கும். 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 2004 ஆம் ஆண்டு விஷ்ணு வர்தனை வைத்து ஆப்தமித்ரா என கன்னடத்தில் ரீமேக் செய்த பி.வாசு, ஹீரோ உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் போதுதான் மக்களுக்கு கனெக்ட் ஆகும் என அதை மாற்றி எடுத்தார். 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்திரமுகி படத்தை ரிலீஸ் செய்தார்.
-
2 சந்திரமுகிக்கு ஐஸ்வர்யா ராய்
ரஜினியோடு எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கு முன்பே, பல முறை ரஜினி படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. அப்படி சந்திரமுகி போன்ற ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரில் நடிக்க வைக்கவும் அவரிடம்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள். அவர் நடிக்க மறுக்கவே பி.வாசுவும், பிரபுவும்தான் ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரைக்கும் ஜோதிகாவை நான் சீரியஸாக இருந்து பார்க்கவேயில்லை. விளையாட்டு பிள்ளையாக இருக்குற பொண்ணு இந்த கேரக்டரை சரியாக பண்ணிடுமா என ரஜினிக்கு சந்தேகம் இருந்திருக்கிறது. பி.வாசுதான் நம்பிக்கை கொடுத்து ஜோவை நடிக்க வைத்தார். பிறகு ஜோவின் நடிப்பைப் பார்த்து ரஜினியே மிரண்டு போனாராம்.
-
3 ரசிகர்களுக்கு பிடிக்காத பெயர்
‘சந்திரமுகி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு காரில் ஏறிய இயக்குநர் பி.வாசுவை, ரஜினியின் ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு, ‘அதெப்படி எங்க தலைவர் படத்துக்கு ‘சந்திரமுகி’னு பொண்ணு பேரு வைக்கலாம்’ என கேட்டிருக்கிறார்கள். என்ன சொல்லி தப்பிப்பது என தெரியாமல் இருந்த பி.வாசு, ‘ஏம்பா எம்.ஜி.ஆர் ‘அடிமைப்பெண்’ படம் நடிக்கலையா, சிவாஜி கணேசன் ‘தில்லானா மோகனாம்பாள்’னு படம் நடிக்கலையா. அந்த மாதிரிதான் இதுவும்’ என சொன்ன பிறகுதான் ரசிகர்கள் அவரை விட்டிருக்கிறார்கள்.
-
4 ரஜினியின் நம்பிக்கை
2002 ஆம் ஆண்டு பாபா படத்தின் படு தோல்விக்கு பிறகு அடுத்தப்படத்தின் அறிவிப்பிற்கு நேரம் எடுத்துக்கொண்ட ரஜினிக்கு, ஆப்தமித்ரா படம் நம்பிக்கை கொடுத்தது. இந்தப் படம் நிச்சயமாக தமிழில் மெகா ஹிட்டாகும் என கணித்த ரஜினி, சந்திரமுகி படத்தை ரொம்பவே நம்பினார். அதை பொதுவெளியிலும் பதிவு செய்தார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ’நான் யானை இல்லை; குதிரை. விழுந்த உடனே எழுந்திடுவேன்’ என பேசினார். இந்த பேச்சைக் கேட்டவர்கள் ரஜினிக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் என்றும் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு படம் பதிலளித்தது. படத்தின் வெற்றி விழாவின் போது, ’என்னை ஓவர் கான்ஃபிடன்ஸ் என்று கிண்டல் அடித்தார்கள். சந்திரமுகியின் வெற்றிவிழாவை இப்போது நாம் கொண்டாடுகிறோம். ஆனால், இதை நான் சந்திரமுகி ரிலீஸாகும் முன்பே கொண்டாடிவிட்டேன். ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு எனது மனைவியின் சகோதரர் வீட்டில் சந்திரமுகி படத்தின் வெள்ளி விழாவை நான் கொண்டாடிட்டேன்’ என்று சொன்னார். அந்தளவுக்கு சந்திரமுகி படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைதான் சோதனையில் இருந்த ரஜினிக்கு சாதனையைக் கொடுத்தது. அதே வெற்றிவிழா மேடையில் இந்தப் படம் ஹிட்டானதற்கு காரணம் நான் இல்லை, ஜோதிகாவும் வடிவேலுவும்தான் என்றார்.
0 Comments