சென்னை 28 கதையை வெங்கட் பிரபு எஸ்.பி.பி கிட்ட சொல்றப்போ நிறைய கெட்டவார்த்தைகளோட சொல்லிருக்காரு. அதுக்கு எஸ்.பி.பி ரியாக்ஷன் என்ன தெரியுமா? நடிகர் சிம்பு கொடுத்த ஒரு ஐடியா படத்துல செமயா ஒர்க் அவுட் ஆகி இருந்தது அது என்ன? இந்த படத்தோட மியூசிக்ல செம போங்கடிச்சிருக்காரு யுவன்.. அப்படி என்ன பண்ணினாரு? இதெல்லாம் இந்த வீடியோல இருக்கு.
சென்னை 28 சொன்னவுடனே நமக்குள்ள ஒவ்வொரு சீனா ஓடா ஆரம்பிச்சுடும் சின்னப் பசங்ககிட்ட தோக்குறப்போ வர்ற பி.ஜி.எம், சீனு ஒவ்வொருவாட்டியும் கேட்ச் விடுறது, படவா கோபியோட ஜாலியான கமெண்ட்ரி, சொல்லுங்க தம்பி பவுலிங்கா ஃபீல்டிங்கா காமெடி, அந்தப் படத்தோட பாட்டு இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயம் பிடிக்கும். அந்தப் படம் வந்து 15 வருசம் ஆகுது. ஆனாலும், கிரிக்கெட் மாதிரியே எப்போ பார்த்தாலும் போரடிக்காம இருக்கு. தமிழ் சினிமால சென்னை 28 அடிச்ச ஆறு சிக்ஸர்களை பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
1st Six: நம்ம ஏரியா கதை
எம்.எஸ் தோனி படத்துல இருந்து 83 படம் வரைக்கும் எத்தனையோ கிரிக்கெட் படங்கள் வந்திருந்தாலும் கிரிக்கெட் பிடிச்சவங்களுக்கு சென்னை 28 ரொம்ப பிடிக்கக் காரணம் ‘ஹேய் இது நம்ம ஏரியா கதைப்பா’னு கனெக்ட் ஆனதுதான். தெருவுல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்போ நமக்கு என்னெல்லாம் நடந்துச்சோ, நாம யாரையெல்லாம் சந்திச்சோமோ அதுதான் இந்தப் படத்துலயும் பார்த்தோம். நம்மகூடவே ஒருத்தன் கேட்ச் பிடிக்கத் தெரியாம இருப்பான், ஒருத்தன் லவ் ஃபெய்லியர்ல சுத்திட்டு இருப்பான், ஒரு அண்ணன் நம்ம டீமுக்கு ஸ்பான்ஸர் பண்ணிட்டு இருப்பாரு, ஃப்ரெண்டு தங்கச்சியை ஒருத்தன் லவ் பண்ணிட்டு இருப்பான். இப்படி எதுவுமே சினிமாவுக்காக Larger than life ஆ இல்லாம நம்ம லைஃபை சொன்னதுதான் இந்தப் படம் விளாசின முதல் சிக்ஸர். இந்தப் படத்துக்கு வெங்கட்பிரபு முதல்ல வைக்க நினைச்ச பேரு ‘எங்க ஏரியா உள்ள வராத’ ஆனா வாலி இது நெகட்டிவா இருக்குனு மாத்த சொல்றாரு. Beverly Hills, 90210 அப்படிங்குற டிவி சீரீஸை இன்ஸ்பிரேசனை வச்சு வெங்கட் பிரபு பிடிச்ச பெயர்தான் ‘சென்னை 600 028’.
2nd Six: கிளிஷேக்கு குட் பை!
ஒரு ஸ்போர்ட்ஸ் மூவினாலே க்ளைமேக்ஸ்ல ஒரு ஃபைனல் மேட்ச் நடக்கும். ஹீரோ போராடி அந்த டீமை ஜெயிக்க வச்சு அக்கினி சிறகேனு ஸ்லோ மோஷன்ல கண்ணீர் விட்டு நின்னா ஆடியன்ஸ் கண்ணுலயும் தண்ணி வரும். ஆனா இந்த படத்துல இந்த கிளிஷே எதுவுமே கிடையாது. க்ளைமேக்ஸ்ல ஃபைனல்ஸ் நடக்காது செமி ஃபைனல்ஸ் நடக்கும். அதுலயும் ஹீரோ விளையாடாம ஆஸ்பத்திரில படுத்து ஜூஸ் குடிச்சிட்டு இருப்பாரு. மத்த ஃப்ரெண்ட்ஸ்லாம் சேர்ந்துதான் விளையாடி ஜெயிப்பாங்க. ஃபைனல்ஸ் மேட்ச்சை காமெடியா வச்சி முடிச்சிருப்பாங்க. ஒரு ஸ்போர்ட்ஸ் மூவிக்கான எந்த டெம்பிளேட்டிலும் இல்லாம அதே சமயம் ரொம்பவும் கனெக்ட் பண்ணிக்குற மாதிரி இருந்தது நிஜமாவே மேஜிக்தான்.

3rd Six: செம ஜாலி மியூசிக்
பாடல்கள்தான் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ரோமோசனா இருந்தது. இப்பவும் இந்தப் படத்துக்கான அடையாளமா இருக்குறது பாட்டுதான். இந்தப் படத்துக்கு பாட்டெல்லாம் போட்டது யுவன். பின்னணி இசை பிரேம்ஜி. செந்தமிழ் தேன்மொழியாள் பாட்டை உல்டா பண்ணி வாழ்க்கைய யோசிங்கடா, ஏதோ மோகம் பாட்டை உல்டா பண்ணி யாரோ யாருக்குள் இங்கு யாரோனு ஏதோ மேஜிக் பண்ணிட்டாங்க ரெண்டு பேரும். சரோஜா சாமான் நிக்காலோ பாட்டுலாம் அந்த டைம்ல எல்லா இடத்துலயும் ஓடிட்டு இருந்தது. இந்த பாட்டு போட்டது பிரேம்தான். ஆனா இப்படி ஒரு பாட்டு வைக்கச் சொன்னது யார் தெரியுமா? சிம்பு. கதை கேட்ட சிம்பு, க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு பெப்பியான சாங் வச்சு பசங்களை ஆட விடுங்க. ஆடியன்ஸ்க்கு ரொம்ப பிடிக்கும்னு ஐடியா கொடுத்திருக்காரு. அப்படியே அந்தப் பாட்டும் ஹிட் அடிச்சது.
4th Six: இவங்களும் ஹீரோதான்!
என்னதான் புன்னகை தேசம் காலத்துல இருந்து நாலஞ்சு ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள நடக்குற கதைகள்வந்தாலும் அந்த கேங்க்லயும் ஒரு மெயின் ஹீரோ இருப்பார். அவருக்கு மட்டும் ஒரு ஹீரோயின், ரொமான்ஸ், தனியா டூயட்லாம் இருக்கும். ஆனா சென்னை 28ல பத்து பன்னிரெண்டு பேர் இருந்தா எல்லாருமே ஹீரோதான். சிவாவுக்குதான் ஹீரோயின் இருக்கு. அப்ப அவர்தான ஹீரோ அப்படினு சொன்னா படம் பார்த்த ஆடியன்ஸே சண்டைக்கு வருவாங்க. அந்தளவுக்கு எல்லாருக்கும் முக்கியமான சீன் ஒண்ணு படத்துல இருக்கும். வெங்கட்பிரபு ஏப்ரல் மாதத்தில் படத்துல ஹீரோ ஃப்ரெண்டா நடிக்குறப்போ ஏன் ஹீரோ ஃப்ரெண்ட்லாம் டம்மியா இருக்காங்கனு தோணிருக்கு அதனாலதான் அவர் எடுத்த படத்துல எல்லாருக்கும் ஒரு லைஃப் சொல்லிருந்தாரு.

5th Six: காமெடி களேபரம்
ஆரம்பத்துல வர்ற வாய்ஸ் ஓவர்ல விசாலாட்சி தோட்டத்தை சுண்ணாம்பு கால்வாய்னு வம்பிழுக்குற எஸ்.பி.பில தொடங்கி கடைசி க்ளைமேக்ஸ்ல அந்த சின்னப் பசங்களோட ஃபைனல்ஸ் விளையாடுறது வரைக்கும் படம் முழுக்க காமெடிதான். எப்பவுமே கேட்சை மிஸ் பண்ற சீனு க்ளைமேக்ஸ்ல கேட்ச் புடிச்சா அதுவும் நோ பால் சொல்றதாகட்டும், இளவரசுவை மேட்ச் விளையாடச் சொல்லி சீரியஸா கூப்பிடுறது, சிவா கவிதை சொல்றது, என்ன கொடுமை சார் இது, அவன் எப்பிடி போட்டாலும் அடிக்குறாண்டா, சொல்லுங்க தம்பி பீல்டிங்கா பவுலிங்கா அப்படினு நம்மளை சிரிக்க வச்சுக்கிட்டே இருந்தது சென்னை 28. அதுவும் படவா கோபியோட ‘அவர் பந்தை பிடிக்கவில்லை பந்துதான் அவரைப் பிடித்தது’ ரக கமெண்ட்ரியெல்லாம் களேபரம்.
Final Six: கிரிக்கெட் இஸ் எமோசன்
லஹான், 83, சக்தே இந்தியா, கனா, பிகில் இப்படி ஸ்போர்ட்ஸ் படங்கள் வெற்றியடைய ஒரு காரணம் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு கடைசியில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த எமோசனே படத்தை தூக்கி நிறுத்தும். ஆனால் சென்னை 28-ல் விளையாடிக்கொண்டிருந்தது இந்திய அணி அல்ல. எதோ ஒரு தெருமுனை கிரிக்கெட் டீம். ஆனாலும் இந்தப் படத்தில் ராக்கர்ஸ் அணி ஜெயிக்கணும்னு நினைச்ச காரணம் அந்த கேரக்டர்கள் கொடுத்த எமோசன். கிரிக்கெட் கொடுத்த எமோசன். இந்தப் படம் பார்த்த பழைய செட் ஆட்கள் எங்க காலத்துல நடந்த மாதிரி இருந்தது என்று வெங்கட்பிரபுவிடம் சொன்னார்களாம். நாம் பார்க்கும்போது நம்முடைய கதையாக இருந்தது. இப்போதிருக்கும் 2கே கிட்ஸ் இந்தப் படம் பார்த்தால் அவர்களுடைய கதையும் இதுவாகவே இருக்கும். இப்படி மூன்று தலைமுறைக்கான கதையாக இது அமைந்தது இந்தப் படம் அடித்த விண்ணைத்தாண்டிய சிக்ஸர்.
வெங்கட் பிரபு இந்தக் கதையை எஸ்.பி.பி கிட்ட சொல்றப்போ நிறைய கெட்டவார்த்தைகளோட சொல்லிருக்காரு. அதுக்கு எஸ்.பி.பி ரியாக்ஷன் என்ன தெரியுமா? அதை பார்க்குறதுக்கு முன்னாடி இயக்குநர் வெங்கட்பிரபு இந்த வீடியோ பார்த்திட்டு இருக்குற உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமாம். ஒரு 30 செகண்ட் கேட்டுட்டு வந்திடுங்க.

ஒரு ஃப்ரீ ஹிட்:
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவரிடம் வெங்கட் பிரபு கதை சொன்னபோது ஒரு களேபரம் நடந்தது. ஆர்வமாக கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஃபுளோவுல கெட்டவார்த்தை வந்துடக்கூடாதுனு தயங்கித் தயங்கி கதை சொன்னாரம். பயங்கரமான சீன்களை விவரிக்கும்போதே திக்கித் தினறி மென்னு முழுங்கி இருக்கிறார். இதைப் பார்த்த எஸ்.பி.பி, ‘நல்லா போகுது ஏண்டா திணறுற. ஒழுங்கா சொல்லுடா’ என்று அதட்ட, பக்கத்தில் இருந்த எஸ்.பி சரண், ‘அப்பா அவனுக்கு கெட்ட வார்த்தை இல்லாம கதை சொல்ல வராது’ என்று சிரித்திருக்கிறார். கடுப்பான எஸ்.பி ‘கதை நல்லா புளோவுல போகுது.. எப்படியோ சொல்லித் தொலைடா’ என்று பெர்மிஷன் கொடுக்க, கெட்டவார்த்தைகளெல்லாம் போட்டு ரகளையாக கதை சொன்னாராம் வெங்கட்பிரபு. அப்படித்தான் ஓகே ஆனது சென்னை 28.
Also Read – கமல்… விஜய் சேதுபதி… ஃபகத் ஃபாசில்… விக்ரம் படத்துல யார் வின்னர்?
0 Comments