சென்னை தியேட்டர்கள்

சென்னை மவுன்ட் ரோடில் 2K கிட்ஸ் அறிந்திடாத தியேட்டர்கள்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக எப்போதும் இருப்பவை தியேட்டர்கள். ஒரு படத்தை நினைவுகூரும்போது, அந்தப் படத்தைப் பார்த்த தியேட்டரும் நம் நினைவுகளில் நிழலாடும். ஆனால், அந்த பேரனுபவம் இந்த மல்டிப்ளக்ஸ் காலத்தில் வாய்க்க வாய்ப்பில்லை. ஒருவேளை, பிற்காலத்தில் சினிமா பார்க்கும் முறையே கம்ப்ளீட்டாக மாறியிருந்தால், அப்போது இப்போதிருக்கும் மல்டிப்ளக்ஸ் அனுபவமே மறக்க முடியாததாக இருக்கலாம். சரி, மேட்டருக்கு வருவோம். சென்னை மவுன்ட்ரோடில் 80ஸ், 90ஸில் இருந்த சிங்கிள் – மல்டி தியேட்டர்கள் குறித்தும், அதில் 2K கிட்ஸ் மிஸ் பண்ணும் அனுபவத்தையும் பார்க்கலாம். ‘டெர்மினேட்டர் 2’ மாதக்கணக்கில் ஓடிய அலங்கார் தியேட்டர் முதல் அப்போதே சிலருக்கு மட்டுமே தெரிந்த கலைவாணர் அரங்க திரைப்படக் காட்சிகள் வரை நிறைய விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மவுன்ட் ரோடு தியேட்டர்கள்

சஃபையர் தியேட்டர்

சஃபையர் தியேட்டர்
சஃபையர் தியேட்டர்

முதலில் சஃபையர் தியேட்டர். ஜெமினி பிரிட்ஜ்ல இறங்கின உடனே லெஃப்ட்ல ஒரு காலி கிரவுண்ட் இருக்கும். அது ரொம்ப வருஷமா காலியாதான் இருக்கு. அந்த காலி கிரவுண்ட்லதான் அப்போ களை கட்டின சஃபையர் காம்ப்ளக்ஸ் இருந்துச்சு. சஃபையர், ப்ளூடைமண்ட், எமரால்டுனு மூணு தியேட்டர்ஸ். அதுல சஃபையர் செம்ம பெருசு. இப்போ இருக்கிற தேவி, தேவி பாரடைஸ் மாதிரி. இந்த காம்ப்ளக்ஸ்லதான் வெவ்வேறு மொழி படங்கள் வரிசை கட்டும். குறிப்பாக, ஆங்கிலப் படங்களும் இந்தி படங்களும் நிறைய நிறைய. இதுல ப்ளூடைமண்ட்ல ஒரு காலத்துல இன்ட்ரஸ்டிங்கான ஒரு சிஸ்டம் இருந்துச்சு. ஒரு டிக்கெட் எடுத்து எந்த ஷோ வேணுன்னாலும் எப்ப வேணுன்னாலும் பார்க்கிற சிஸ்டம் அது. பல உலக காவியப் படங்கள் எல்லாம் இங்கேதான் பார்க்க முடிஞ்சுது சென்னை வாசிகளால. கடைசியா சஃபையர்ல நலல ஓடின படம், அர்ஜுனோட ஜெய்ஹிந்த். இந்தத் தியேட்டர் லேண்டுக்குப் பின்னாடி ஏகப்பட்ட அரசியல் மேட்டர்லாம் இருக்கு. அதை விட்ருவோம். சென்னைல 2கே கிட்ஸ் மிஸ் பண்ண தரமான தியேட்டர்ஸை பட்டியலிட்டா அதுல சஃபையருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

ஆனந்த்

சஃபையரைத் தாண்டி தவுசண்ட் லைட் வந்தா, அங்கதான் ஆனந்த், லிட்டில் ஆனந்த் தியேட்டர் இருந்துச்சு. சென்னை சர்வதேச திரைப்பட விழாக்கள், ஆரம்ப கட்டத்துல இந்த ரெண்டு தியேட்டர்லதான் நடந்துச்சு. ஆனந்த் தியேட்டரோட ஸ்பெஷலாட்டியே அதன் கலைநயமிக்க வடிவமைப்புதான். ஸ்க்ரீன் முன்னாடி இருக்கிற மூன்று பக்க சுவர்கள்லயும் சிற்பங்கள் மாதிரி விதவிதமான கலைப்படைப்புகள் செதுக்கி வெச்சிருப்பாங்க. கும்மிருட்டுல ஒயிட் லைட்டிங்ல அதைப் பார்க்குறதே ஒரு கிக் அனுபவம்தான். கமல்ஹாசனின் ‘மகாநதி’ படமெல்லாம் ஆனந்த் தியேட்டர்ல கிட்டத்த 200 நாள் ஓடுச்சு.

அலங்கார்

ஆனந்த்துல இருந்து அப்படியே எல்.ஐ.சி பில்டிங் பக்கம் வந்தா, எல்.ஐ.சி பில்டிங்கை ஒட்டி அலங்கார் தியேட்டர் இருக்கும். 80ஸ், 90ஸ்ல எக்கச்சகமான ஆக்‌ஷன் ஹாலிவுட் படங்கள் எல்லாம் இந்தத் தியேட்டர்லதான் பிச்சிகிட்டு ஓடிச்சு. குறிப்பாக, அர்னால்டோட ‘டெர்மினேட்டர் 2’ கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல இங்கே ஓடிச்சு. இப்போதான் தல, தளபதி வசூல் என்னன்னு ரசிகர்கள் ஆர்வமா இருக்கிறாங்கன்னு நினைக்காதீங்க. இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே அலங்கார் தியேட்டரும் அர்னால்டும்தான். டெர்மினேட்டர் டூவோட ஒவ்வொரு நாள் வசூல் நிலவரும் தினத்தந்தில விளம்பரமா வரும். அது அப்போ வித்தியாமா பார்க்கப்பட்டது. பழைய காலத்து ஆர்கிடெக்ல செம்மயா இருக்கும் இந்தத் தியேட்டர்.

மெலடி, ஜெயப்பிரதா

அப்படியே அலங்கார்ல இருந்து எல்.ஐ.சி. பேக் சைடு போனா ‘மெலடி’, ‘ஜெயப்பிரதா’ தியேட்டர் இருக்கும். சென்னைப் பசங்களுக்கு இந்தி தெரியுதோ இல்லையோ, நார்த் இந்தியன் பொண்ணுங்க எல்லாம் அசம்பிள் ஆகுற இடம்ன்றாதால இந்த ரெண்டு தியேட்டர்லயும் ஆஜராகிவிடுவாஙக. யெஸ்…. இந்த ரெண்டு தியேட்டர்லயும்தான் அப்ப நிறைய பாலிவுட் படங்கள் வரும். ஹம் ஆப்கே ஹெயின் கோன், தில்வாலே துல்ஹனியா லேஜேயாங்கே எல்லாம் மாதக்கணுக்கு மெலடில ஓடிச்சு. இப்போ இந்த ரெண்டு தியேட்டரும் இருக்கிற சுவடே இல்லாம போச்சு.

பைலைட்

அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்து ராயப்பேட்டை பக்கம் வந்தா ‘பைலட்’ தியேட்டர். அப்பல்லாம் நிறைய ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை இங்க இறக்குமதி பண்ணுவாங்க. குறிப்பா, ஹாரர் படங்கள் வரிசை கட்டும். அந்தத் தியேட்டரோட ஸ்பெஷலே சவுண்ட் எஃபக்ட்தான். டிபிக்கல் சிங்கிள் தியேட்டருக்கே உரிய பிரமாண்டமான அமைப்பு கொண்ட அந்தத் தியேட்டர்லாம் இப்ப இருக்குற சென்னை எயிட்டீஸ் கிட்ஸ் மிஸ் பண்ற முக்கியமான தியேட்டர்.

பிளாஸா

பேக் டூ மவுன்ட் ரோடு. இப்ப இருக்குற தேவி தியேட்டருக்கும், அதுக்கு பக்கத்துல பெட்ரோல் பங்குக்கும் இடையில ஒரு சந்துல கொஞ்சம் தூரம் போனா உள்ள இந்தத் தியேட்டர் வரும். நைட்டீஸ் எண்டுலயே இந்தத் தியேட்டர் காணா போயிடுச்சு. எம்ஜிஆர், சிவாஜி காலத்து தியேட்டர். அப்புறம் நைட்டீஸ்லயும் பழைய படங்கள் ஓடும் தியேட்டரா இருந்துச்சு. 80ஸ், 90ஸ் கிட்ஸ் எல்லாம் பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் படங்கள் பார்க்க இந்தத் தியேட்டர் உதவியா இருந்துச்சு.

சாந்தி தியேட்டர்
சாந்தி தியேட்டர்

சாந்தி தியேட்டர்

தேவிக்கு பக்கத்துல இருந்த சாந்தி தியேட்டர் பலருக்கும் தெரிஞ்சிருக்கலாம். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான் க்ளோஸ் பண்ணாங்க. மன்னன் படத்துல கூட இந்தத் தியேட்டரை நீங்க பார்க்கலாம். சிவாஜி படங்கள்னா அது சாந்தில தவறாம ரிலீஸ் ஆகும். அப்புறம் பிரபு படங்கள் எல்லாமே இங்கேதான். இந்தத் தியேட்டர் வாசல்ல இருக்குற சுவர்ல பெரிய லிஸ்டே எழுதி வெச்சிருப்பாங்க. சிவாஜி நடிச்ச பராசக்தில இருந்து கடைசி படம் வரைக்குமான பட்டியலும், அது எத்தனை நாள் ஓடிச்சின்ற விவரமும் இருக்கும். இன்னமும் சாந்தி பஸ் ஸ்டாப் இருக்கு. ஆனா, தியேட்டர்தான் இல்லாதது சோகம். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த தியேட்டர்கள் எத்தனையோ… அதில் இதுவும் முக்கியமானது.

கெயிட்டி

அப்படியே சாந்தி சிக்னலுக்கு எதிர்ல ரிச்சி ஸ்ட்ரீட் பக்கத்துல காஸினோ தியேட்டர் இருக்கும். அந்தத் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு இப்போ கூட இயங்குது. காஸினோவுக்கு பக்கத்துலதான் கெயிட்டி இருந்துச்சு. அது இப்போ ஒரு சின்ன ஷாப்பிங் காப்ளக்ஸா மாறிடுச்சு.

 கெயிட்டி தியேட்டர் - சென்னையின் பழைய தியேட்டர்கள்
கெயிட்டி தியேட்டர்

சென்னையின் ரொம்ப பழைய தியேட்டர்னா, அது கெயிட்டிதான். 1930-களில் ஆரம்பிக்கப்பட்ட தியேட்டர். நைட்டீஸ்ல ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் மாதிரியே தோற்றம் அளிக்கும். எத்தனையோ காவியப் படங்களைக் கண்ட கெயிட்டி தியேட்டர் தன்னோட கடைசி காலத்துல பி கிரேடு படங்களின் சொர்க்கமா மாறிச்சு. அஞ்சரைக்குள்ள வண்டி ரேஞ்சு படங்கள்தான் இங்கே ஓடும். ஆனாலும், நல்ல க்ரவுடு வந்ததால ரொம்ப காலம் இருந்துச்சு. கால மாற்றத்தால் தியேட்டராக நிலைக்க முடியாம போன தியேட்டர்கள் நிறைய உண்டு. அதில் கெயிட்டி முக்கியமான ஒண்ணு.

பரங்கிமலை ஜோதி

கெயிட்டின்னு சொன்னதும் பரங்கிமலை ஜோதியும் நினைவுக்கு வருது. இதுவும் மவுண்ட்ரோடுதான். ஆனா கிண்டி ஏரியா. கத்திபாரா பக்கத்துல. இப்போ கூட ஜோதி தியேட்டர் இருக்கு. ஆனா, இதோட வரலாறு வேறு விதமனாது. இங்கேயும் அந்தக் காலத்துல பி கிரேடு – அடல்ட் படங்கள் தான் ஓடும். பிட்டுப் படங்களுக்காகவே ஃபேமஸ் ஆன ஒரே தியேட்டர் பரங்கிமலை ஜோதி. இன்னிக்கும் இந்த ஏரியாவை சுத்தி இருக்குற சில ஃபேமிலி ஆடியன்ஸ், இந்தத் தியேட்டர்ல தல, தளபதி, ரஜினி, கமல் ரிலீஸ் படங்கள் போட்டாக் கூட உள்ளே போக தயங்குவாங்க. அந்த அளவுக்கு பரங்கிமலை ஜோதி அந்தக் காலத்துல ஏற்படுத்தின தாக்கம் பயங்கரமானது.

சித்ரா

சரி, அப்படியே கெயிட்டி பக்கத்துல… புதுப்பேட்டை ரோடு போகுற பிரிட்ஜை ஒட்டி கூவம் ஆற்றங்கரையோரம் இருக்கிற சித்ரா தியேட்டர் பக்கம் திரும்புவோம். அந்தக் காலத்துல எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் படமெல்லாம் கொடி கட்டி ஓடின தியேட்டர்ல இதுவும் ஒண்ணு. பிற்காலத்துல ராமநாராயணன், சாமி படங்கள் எல்லாம் செகண்ட் ரிலீஸா ஓடிச்சு. அப்புறம் காலப் போக்குல காணாம போச்சு.

Also Read – எல்லாரும் கடவுள்தான்.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஃபீல் குட் சீன்கள்!

ஸ்டார்

அப்படியே சென்னை அண்ணாசிலைல இருந்து பீச் ரோடுல ரைட் கட் பண்ணா ஐஸ் அவுஸ் ரோடு… டிரிப்ளிகேன்ல எயிட்டீஸ், நைட்டீஸ்ல ஃபேமஸான தியேட்டர் ‘ஸ்டார்’. ஆல்பர்ட், பிருந்தா, அகஸ்தியா மாதிரியான தியேட்டர்களில் அப்போது ரஜினி படம் ரிலீஸ் ஆகுறப்ப செம்மயா செலிப்ரேஷன் நடக்கும். அந்த ரஜினி படங்கள் ஒரு மாதம் கழிச்சு ‘ஸ்டார்’ தியேட்டர்ல செகண்ட் ரிலீஸ் ஆகும். அப்பவும் ஃப்ரெஷ்ஷா ரிலீஸ் ஆன மாதிரி ஸ்டார் தியேட்டர்ல கொண்டாட்டம் நடக்கும். ரஜினி படங்களோட எல்லா செகண்ட் ரிலீஸும் இங்கதான். இடையில தெலுங்கு டப்பிங் படம் எல்லாம் வாராவாரம் ரிலீஸ் ஆகும். ட்ரிப்ளிகேன் பகுதி மக்களால் இன்றளவும் மறக்க முடியாத தியேட்டர் இது.

பாரகன்

அப்படியே பக்கத்துல கலைவாணர் அரங்கத்துக்கு எதிர்ல பாரகன் தியேட்டர் இருந்துச்சு. இதுவும் அந்தக் காலத்துக்கே உரிய சிங்கிள் தியேட்டர் வடிவமைப்புல ரொம்ப நல்லா இருக்கும். சித்ரா, பிளாஸா ரகம்தான். மணாளனே மங்கையின் பாக்கியம் மாதிரியான நிறைய ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களை நைட்டீஸ்ல இங்க பார்க்க முடிஞ்சுது. இப்போ பாரகன் தியேட்டர் இருந்த இடத்துல வானுயர அபார்ட்மென்ட் இருக்கு.

இந்த சித்ரா, ஸ்டார், பிளாஸா, பாரகன் போன்ற தியேட்டர் எல்லாம் அந்தக் காலத்துல சென்னையின் ஏழை எளிய மக்களின் தியேட்டர்கள்னே சொல்லலாம். அந்த அளவுக்கு மிகக் குறைந்த கட்டணம்.

கலைவாணர் அரங்கம்

பாரகனுக்கு எதிர்ல இருக்குற கலைவாணர் அரங்கம் இப்போ புதுப்பிக்கப்பட்டிருக்கு. 90ஸ்ல இருந்த கலைவாணர் அரங்கத்துல ஒரு ஸ்க்ரீன் இருந்துச்சு. அதுல வீக் டேஸ்ல டெய்லி 11 மணி ஷோ இருக்கும். சனி – ஞாயிறுல மட்டும் 11 மணி, 2 மணின்னு ரெண்டு ஷோ. அப்ப இருந்த சென்னைவாசிகளுக்கே இங்க படம் ஓட்டுவாங்கன்ற மேட்டர் தெரியாது. மிஞ்சுப் போனா ஐநூறு பேருக்குதான் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கலாம். அவங்கதான் மீண்டும் மீண்டும் இந்த ஸ்க்ரீனுக்கு ரெகுலர் ஆடியன்ஸா இருந்தாங்க. டிக்கெட் விலை இரண்டு ரூபாய், நாலு ரூபாய். அதுவே பின்னால அஞ்சு ரூபா, பத்து ரூபாவா ஆச்சு. வெறும் நாலு ரூபாய்ல ஃபுல் ஏசில சூப்பரான சீட்ல உட்கார்ந்து படம் பார்க்குற பேரனுபவத்தை கலைவாணர் அரங்கம் தந்துச்சு. இங்கே வாரத்துக்கு ஒரு ஆங்கிலப் படம் ஓடும். மோஸ்ட்லி பழைய படங்கள்தான். சார்லி சாப்ளின் படங்கள் எல்லாம் அடிக்கடி இங்கே பார்க்கலாம். பழைய ஆங்கிலப் படங்கள் வெள்ளிக்கிழமை தான் ஃப்ரெஷ் படம் ரிலீஸ். இங்க படம் பார்க்க வர்ற ரெகுலர் ஆடியன்ஸ்லே சிலர் வெள்ளிக்கிழமை காலை 11 மணி ஷோ தவறாம ஆஜார் ஆவாங்க. அதுக்கு பின்னாடி ஒரு இண்ட்ரஸ்டிங் ரீசன் இருக்கு. அந்த ஷோல தான் ஆப்பரேட்டரே அந்தப் படத்தை முதல் முறை பார்ப்பார். அதுல சில பல கிளுகிளுப்பு காட்சி இருந்தா அப்படியே ஓடும். மக்கள் எஞ்சாய் பண்ணுவாங்க. மறுநாள்ல இருந்து அடுத்த ஆறு நாளுக்கு அந்தக் கிளுகிளு காட்சிகள் இருக்காது. ஆபரேட்டர் அதை சென்சார் பண்ணிடுவார். அந்த சென்சாருக்கு முன்னாடியே பார்க்கணும்னா வெள்ளிக்கிழமை ஷோ பார்க்கணும்!

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

திறந்தவெளி திரையரங்கம்

கலைவாணர் அரங்கம் வரைக்கும் வந்துட்டோம் அப்படியே நேப்பியர் பாலத்துக்கு வருவோமே. நெப்பியர் கிட்ட எங்கடா தியேட்டர்னு கேட்கலாம். உங்கள்ல பலருக்கு ஆச்சரியமா இருக்கலாம். இப்போ கூட தீவுத்திடல்ல சுற்றுலா பொருட்காட்சி நடந்துட்டு இருக்கு. இதே எயிட்டீஸ், நைட்டீஸ்லயும் ஜனவரி தொடங்கி 100 நாட்களுக்கு தீவுத் திடல்ல சுற்றுலா பொருட்காட்சி நடக்கும். அந்தப் பொருட்காட்சில, நேப்பியர் பிரிட்ஜ ஒட்டி, கூவம் அருகே ஒரு திறந்தவெளி திரையரங்கம் அந்த 100 நாட்களுக்கு இயங்கும். தரை டிக்கெட் ரெண்டு ரூபா, பெஞ்சு நாலு ரூபாய். தினமும் இரவு 7 மணிக்கு ஷோ தொடங்கும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு படம்னு 100 நாட்களுக்கு 100 படங்கள் அங்கே பார்க்கலாம். எம்.ஜி.ஆர் படங்கள் தொடங்கி சமீபத்தில் ஹிட்டடிச்ச படங்கள் வரைக்கும் வகை வகையா அங்க படம் பார்க்கலாம். குளிர்ல சுண்டல் சாப்டுகிட்டே அங்க படம் பார்க்குறது அட்டகாச அனுபவம். ஆனா, சென்னைவாசிகள் பலருக்கே இப்படி ஒரு ஷோ நடக்குறது தெரியாது. தீவுத் திடல் சுற்றியிருக்கிற சத்யா நகர் போன்ற குடிசைப் பகுதி மக்கள்தான் தினமும் இங்கே படம் பார்க்க வருவாங்க. அவங்களுக்கு இந்த 100 நாட்கள் ரொம்பவே ஸ்பெஷல்.

தியேட்டர்கள் கொடுத்த அனுபவம் காலத்துக்கும் மறக்க முடியாதது. மவுன்ட் ரோடு தவிர சென்னையின் மத்த இடங்கள்ல இந்த மாதிரி காணாமல் போன தியேட்டர்கள் எக்கச்சக்கம். அதைப் பற்றியும். உங்க ஊருல காணாமல் போன தியேட்டர்கள் பத்தியும், அதுல உங்களோட மறக்க முடியாத அனுபவங்கள் பத்தியும் கமெண்ட்ஸ்ல மறக்காம ஷேர் பண்ணுங்க. நாங்க தெரிஞ்சிக்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top