தமிழ் சினிமாவுல ஜனகராஜை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நாடகக் கலைஞர்களின் தாய்வீடுபோல இருந்த எல்டாம்ஸ் ரோட்டில்தான் அவர் வளர்ந்தார். கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான அவர், ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்தார். அந்த காலகட்டங்களில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட அனைவருமே, தங்கள் படங்களில் ஜனகராஜ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்க கொடுக்குற எந்தவொரு டயலாக்கையுமே தன்னோட மாடுலேஷன்ல பல மடங்கு பவர்ஃபுல் ஆக்கிடுவார். இதனாலேயே டைரக்டர்களோட ஆர்டிஸ்டாவும் இருந்தவர். இப்போ யோகிபாபுவை எப்படி தவிர்க்க முடியாத நடிகர்னு சொல்றோமோ, அது மாதிரி அந்த காலகட்டங்கள்ல இருந்தவர் ஜனகராஜ்’னு இயக்குநரும் நடிகருமான மனோபாலா ஜனகராஜ் பத்தி ஒரு இடத்துல சொல்லிருப்பார். ஜனகராஜோட சினிமா பயணம், அவரோட யுனீக்னஸ் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே டைரக்டர் பாரதிராஜாவுக்கு அறிமுகமான ஜனகராஜ், அவரின் நாடகத்திலும் நடித்திருக்கிறார். பதினாறு வயதினிலே ஹிட்டுக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்து அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். யோவ் நீ நல்ல நடிகன்யா.. என்னோட அடுத்த படத்துல உனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுக்கிறேன்’ என்று சொல்லவே குஷியாகியிருக்கிறார் ஜனகராஜ். ஆனால், பாரதிராஜா அடுத்து எடுத்த கிழக்கே போகும் ரயில் படத்தில் அவருக்குக் குறிப்பிட்ட வேடம் கிடைக்கவில்லை என்பது லொகேஷனுக்குப் போன பிறகே இவருக்குத் தெரிந்திருக்கிறது. இதையடுத்து,நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். இப்போ நடிக்கலைனா அசிங்கமாபோய்டும். எனக்கு கண்டிப்பா சான்ஸ் வேணும்’னு செல்லச் சண்டை போட்ட பிறகே வயதான அந்தணர் கேரக்டர் கிடைத்திருக்கிறது.
காமெடில இவரோட ரகம், எதுமாதிரியும் இல்லாத புது மாதிரினே சொல்லலாம். இழுத்து இழுத்து இவர் பேசுற விதமே உங்களை சிரிக்க வைச்சுடும். பக்கா மெட்ராஸ் மைந்தரான ஜனகராஜ், கல்லூரி நாட்களில் அதிகமாக கட் அடித்ததால், அட்டனன்ஸ் இல்லை என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்களாம். அப்போது இவருடன் ஒரே ஏரியாவில் வசித்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் என பலர் அறிமுகமாகியிருக்கிறார்கள். காலேஜ் டிஸ்கண்டினியூ ஆன பிறகு,நீ ஏதாவது இன்ஸ்ட்ரூமென்ட் கத்துக்க' என பாஸ்கர் சொன்ன பிறகுதான், வயலின் வாசிக்க முறைப்படி கற்றுக்கொண்டார். இளையராஜாவோடு நெருங்கிப் பழகிய இவர், பல இடங்களில் இசைக் குறிப்புகள் பற்றியும் அவரோடு உரையாடுவாராம். வயலின் கலைஞர் ஜனகராஜை நீங்கள் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்க்கலாம்.
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே’ பாடல் பதிவில் அவர் இளையராஜாவோட நடத்துகிற கான்வோ இருவரின் நட்பைப் பற்றி நமக்குச் சொல்லும்.
யுனீக்கான டயலாக் டெலிவரி
காலங்கள் கடந்தும் எவர்கிரீனாக நிலைத்திருக்கும் டயலாக்குகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ இருக்கின்றன. அந்த வரிசையில் கவுண்டமனி, வடிவேலுவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நிச்சயம் நம்ம ஜனகராஜ்தான். அதற்குக் காரணம் அவரோட டயலாக் டெலிவரி. ஜனகராஜைப் பொறுத்தவரை அவரோட மிகப்பெரிய பிளஸ் டயலாக் டெலிவரிதான். அவரோட சிரிப்பும், அழுகையும் டயலாக் டெலிவரிக்கு மேலும் அழகு சேர்க்கும். டயலாக்குகளை நீட்டி முழக்கி அவர் பேசுற ஸ்டைல் இன்னிக்கு வரைக்கும் யாராலையும் நகலெடுக்க முடியாத அச்சு அசல். நெத்தியடி படத்துல வர்ற தம்பி வேணு’னு ஆரம்பிக்குற டயலாக். வேறவேற சிச்சுவேஷன்ல மகனைக் கண்டிக்குறது, கெஞ்சுறது, ஒரு வேலையை முடிக்கச் சொல்றதுனு ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு மாதிரி மாடுலேஷன் கொடுத்து பேசியிருப்பார். அண்ணா நகர் முதல் தெரு படத்துல வர்ற மாதவன் கேரக்டர்ல பின்னியெடுத்திருப்பார். நல்ல நல்ல ஐடியாக்களை யோசிக்கும் ஒவ்வொரு முறையும்
ஏண்டா மாதவா… உனக்கு மட்டும் எப்படிடா இப்டிலாம் தோணுது… என்னமோ போடா?’னு இவர் சொல்ற டயலாக் இன்னிக்கு வரைக்கும் நின்னு பேசும் மீம் டெப்ம்ளேட். இதையே அடி வாங்கின பிறகும்,உன்னையே பின்னிட்டாங்களே மாதவா… என்னமோ போடா’னு வேறொரு மாடுலேஷனில் இவர் சொல்ற சீன் வேற லெவல்ல இருக்கும். இன்னிக்கும் மனைவிகள் ஊருக்குக் கிளம்பியதும் பெரும்பாலான கணவன்மார்கள் வைக்குற ஸ்டேட்டஸ் அக்னி நட்சத்திரம் படத்துல வர்ற,என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சே’ங்குற டயலாக்தான். அதேமாதிரி இன்னொரு முக்கியமான டயலாக்னு சொன்னா, படிக்காதவன் படத்துல வர்ற தங்கச்சிய நாய் கடிச்சுருப்பா..’ டயலாக்கைச் சொல்லலாம். அண்ணாமலை படம் அவரோட நடிப்புல இன்னொரு மைல்ஸ்டோன். பட்லர் இங்கிலீஷ்ல அடிச்சுவிடும் டீக்கடை ஓனர் கேரக்டர். நேசமணி பொன்னையா தெருனு எழுதிருக்கதை,
நாசமானி போனியா’ தெருனு வாசிக்கறதாகட்டும், வெள்ளைக்காரன்கிட்ட பீலாவிட்டு வாங்கிக் கட்டிக்கிறதாகட்டும்னு தலைவன் மாஸ் காட்டியிருப்பார். இதுக்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, ரஜினி லேடீஸ் ஹாஸ்டலுக்குள் பாம்பு பிடிக்கப்போன சீனை விவரிக்கையில், `ஹா’ என்கிற ஒரே ஒரு வார்த்தை டயலாக்கை வேற வேற மாடுலேஷன்ல கொடுத்து, அந்த சீனையே மெருகேத்திருப்பார். அதுதான் ஜனகாரஜ். இந்த சீனைப் பற்றிதான் நடிகர் மணிகண்டனும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சிலாகிச்சிருப்பார். காமெடி மட்டுமில்லாமல், நாயகன், பாட்ஷா படங்களில் குணச்சித்திர வேடத்திலும் கலக்கியிருப்பார்.

ஜனகராஜ் காமெடி கலந்த வில்லன் ரோலில் ஒரு படத்தில் நடித்தபிறகு, ரசிகர்களிடம் இருந்து இவருக்கு நிறையவே லெட்டர்ஸ் வர ஆரம்பிச்சதாம். பெரும்பாலான ரசிகர்கள், `நீங்க எங்களை சிரிக்க வைக்குற காமெடி ரோல்லயே நடிங்க’னு கோரிக்கை வைச்சிருக்காங்க. அந்த லெட்டர்ஸ் இவரை யோசிக்க வைக்கவே, அப்படியான ரோல்களைக் குறைத்துக் கொண்டாராம். சுருளிராஜனின் திடீர் மறைவுக்குப் பிறகு 1980-1990களின் தொடக்கத்தில் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜனகாரஜ், ஒரு கட்டத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அவர், 2008-ல் பட்டயக் கிளப்பு படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்த அவர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் வாட்ச்மேன் கேரக்டரில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
Also Read – ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி… ஏன் ஸ்பெஷல்?!
இயக்குநர் ராபர்ட் ராஜசேகர் ஃபேமிலி பங்ஷனை முடித்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார் ஜனகராஜ். அப்போது, காரின் டயரில் இருந்து தெறித்த கல் ஒன்று அவரது வலது கண் பகுதியைத் தாக்கியது. இதனாலேயே அவரின் முகத்தோட வலது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மருத்துவ உலகில் Bell’s palsy attack என்றழைக்கப்படும் இந்த பாதிப்பால், அவரது கண் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைதான் அவரின் கரியரை மட்டுமல்ல, வாழ்க்கையுமே மாற்றிப்போட்டது. ராபர்ட் ராஜசேகரின் புதிய வார்ப்புகள் படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகன் அளவுக்கு நடித்திருந்த அவர், அதன்பிறகு காமெடி, குணச்சித்திர கேடர்களைத் தேர்வு செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். ஆனால், அதையே பின்னாட்களில் தனது பிளஸ்ஸாக மாற்றிக் காட்டினார். தமிழில் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் காமெடி லெஜண்ட் ஜனகராஜ், இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்.
0 Comments