சிம்புவின் திரைப்பயணத்தி்ல் சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், சர்ச்சைகள் அதிகமா, சாதனைகள் அதிகமா என்பதைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
-
1 சர்ச்சை 1: ரிலேஷன்ஷிப்
எந்த மொழி சினிமா நடிகராக இருந்தாலும் அவர்களோடு நடிக்கும் இளம் நடிகைகளை வைத்து கிசுகிசு வருவதும், ஒரு சிலருக்கு அது காதலாக மாறுவதும் சகஜம்தான். ஆனால், சிம்புவின் வாழ்க்கையில் அது சகஜம் அல்ல; சர்ச்சை. அவரது முதல் காதலில் இருந்து கடைசியாக ப்ரேக் அப் ஆன காதல் வரைக்கும் எல்லாமுமே சர்ச்சைதான். சிம்புவுக்கு பிரேக் அப் நடக்கும் சமயங்களில் ஆடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி அதை சர்ச்சையாக மாற்றிவிடும். இந்த விஷயங்களில் சிம்பு கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தும்.
-
2 சாதனை 1: இசை
இசைக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்களில் சிம்புவுக்கு முக்கியமான இடம் இருக்கும். கவித்துவமாகத்தான் காதல் பாடல்கள் எழுத வேண்டும் என்பதை மாற்றி, ‘லூசுப்பெண்ணே... லூசுப்பெண்ணே...’ என இயல்பான வரிகளில் பாடல் எழுதியவர் சிம்பு. இப்போது வரைக்கும் பல பாடல்கள் இதே போன்ற இயல்பான வரிகளில் எழுதப்படுவதைப் பார்க்க முடியும். அதே போல் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யும் முறையை மாற்றி சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யும் முறையை தமிழ் சினிமாவில் முதலில் செய்தவர் சிம்புதான். இசையமைப்பாளராகவும் இரண்டு படங்களில் வேலை செய்திருக்கிறார்.
-
3 சர்ச்சை 2: பொறுப்பின்மை
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சிம்பு மேல் வைக்கும் விமர்சனம்தான் இது. கால்ஷீட் கொடுத்தபிறகு கடைசி நேரத்தில் அதை கேன்சல் செய்துவிடுவார்; ஷூட்டிங்கிற்கு ரொம்ப தாமதமாக வருவார் என பல குறைகள் சொல்வார்கள். இவைகளை சமீபமாக சிம்பு சரி செய்துவிட்டாலும் தொடர்ந்து இப்படியே இருப்பாரா என்பதும் கேள்விக்குறிதான் என்கிறார்கள். தன்மீது இருக்கும் இந்த சர்ச்சையை சிம்பு சீக்கிரமே சரி செய்ய வேண்டும்.
-
4 சாதனை 2: நடிப்பு
சிறு வயதில் இருந்தே பல பக்க வசனங்களை பேசி படங்களில் நடித்து வரும் சிம்பு, எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதை சுலபமாக நடித்துவிடுவார். அவரால் மன்மதன் படத்திலும் நடிக்க முடிவும்; விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் நடிக்க முடியும். அந்தளவுக்கு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்கும் திறமை சிம்புவைப் போன்ற சில பேரிடம்தான் இருக்கிறது.
-
5 சர்ச்சை 3: படங்களின் தேர்வு
சிம்புவின் நடிப்பு பேசப்பட்டாலும் கதை சரியாக இருந்தால்தான் படம் வெற்றியடையும் என்பதால், படத்தை தேர்வு செய்வது மிகப்பெரிய பொறுப்பு. ஆனால், அதை சிம்பு தொடர்ந்து சரியாக செய்கிறாரா என்பதுதான் முக்கியம். மன்மதன், வல்லவன் என ஹிட் படங்களில் நடிக்கும் போது சிலம்பாட்டம், காளை மாதிரியான படங்களிலும் நடிப்பார். இதனால், அவரது சக்ஸஸ் க்ராஃப் அடிக்கடி கீழே விழுகிறது. இதிலும் சிம்பு கவனம் செலுத்தினால் நல்லது.
-
6 சாதனை 3: நடனம்
ஒரு நடிகர் என்றால் நன்றாக நடிக்கணும், நடனம் ஆடணும் என்பது இயல்புதான். ஆனால், அதிலும் எந்தளவுக்கு புதுமை செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படிப் பார்க்கும் போது, நடனத்தில் சிம்பு செய்த புதுமை ஏராளம். அதிலும் குறிப்பாக சிம்புவும் நடன இயக்குநர் ராபர்ட்டும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்திலும் நடனம் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும்.
-
7 சாதனை 4: ட்ரெண்ட் செட்டர்
‘சிம்புனு சொன்னா புது ஸ்டைலே வரும்’ என சிம்பு ஹீரோவான முதல் படத்தின் பாடலில் டி.ஆர் எழுதியிருப்பார். அந்த வரிக்கு ஏற்றமாதிரிதான் சிம்புவின் ஸ்டைலும் இன்று வரைக்கும் இருக்கிறது. சிம்பு படங்களில் புதிதாக அறிமுகப்படுத்தும் காஸ்ட்டியூம், ஹேர் ஸ்டைல் மற்றும் வித்தியாசமான ஆக்சஸரீஸ் என பலவும் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் பலரும் பயன்படுத்துவார்கள். இப்படி சிம்பு பல முறை ட்ரெண்ட் செட் செய்திருக்கிறார்.
சிம்புவின் கரியரில் சர்ச்சைகளை விட சாதனைகள்தான் அதிகம் என்பதால் சிம்பு இப்போதும் வல்லவன்தான்.
0 Comments