நலன் குமாரசாமி

எடுத்தது 2 படம்.. பண்ணது பல சம்பவங்கள்… அதுதான் நலன் குமாரசாமி!

நலன் குமாரசாமி எப்பவும் ஸ்பெஷல்தான்… ஏன்? ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ மாதிரி படங்கள் கொடுத்துட்டு எங்கய்யா இருக்க? என்னய்யா பண்ற?-ன்னு ரசிகர்களால் அப்பப்ப தேடப்படும் படைப்பாளியான அவர் இப்போது கார்த்தியை வைத்து படம் எடுக்கப்போறதா அறிவிப்பு வந்திருக்கு. ரெண்டே படங்கள்ல அவர் நிகழ்த்திய அட்டகாச சம்பவங்கள் என்னென்ன? பெஸ்ட் சீன்ஸ், டயலாக்ஸ் என்னென்ன? ஒட்டுமொத்தமா நலன் குமாரசாமியின் ரைட்டிங் எப்பவுமே பெஸ்ட் ஏன்?-ன்னு இந்த வீடியோ ஸ்டோரில பார்ப்போம்.

ப்ளாக் ஹ்யூமர், பொலிட்டிகல் சட்டயர், க்ரைம் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் டிராமான்னு இருக்கு எல்லா ஜானரையும் ‘சூது கவ்வும்’னு ஒரே படத்துல எப்படிய்யா வெச்சீங்கன்னு கேட்டா… “ஒரு மையக் கதையை எடுத்துக்கணும். அதன் கதாபாத்திரங்களை தெளிவா வடிவமைச்சு திரைக்கதை பண்ணினா, அந்தக் கதைக்கு தேவையான எல்லாமே தானாவே உள்ளே வந்துடும்”-ம்னு கூலா பதில் சொல்வார் நலன் குமாரசாமி.

தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்துவந்த மரபுகளை 2013-ல் வெளிவந்த ‘சூது கவ்வும்’ தகர்த்து சுக்குநூறாக்கியது என்று சொன்னால் அது மிகை அல்ல. பல நேர்மையான போலீஸ்களை ப்ரொட்டாகனிஸ்டாக காட்டிய தமிழ் சினிமாவில், ஒரு நேர்மையான – சொதப்பலான ஆள்கடத்தல்காரரை ப்ரொட்டாகனிஸ்டா காட்டினதுல இருந்து சிக்ஸர் விளாச ஆரம்பிக்கிறார் நலன்.

நலன் குமாரசாமி

‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னாடியே ‘சூது கவ்வும்’ வந்துச்சு. ‘மணி ஹெய்ஸ்ட்’ல ப்ரொஃபசர் பாடம் நடத்தி ரூல்ஸ் சொல்றப்ப, நம்ம மைண்ட்ல முதல்ல நினைவுக்கு வந்தது ‘சூது கவ்வும்’ படத்துல விஜய் சேதுபதி நடிச்ச அந்த தாஸ் கேரக்டர்தான். நாம எந்த அளவுக்கு அஹெடா இருக்கோம்ன்றதுக்கு இதைவிட வேற எக்ஸாம்பிள் என்ன வேணும்?

ஆள்கடத்தலுக்கு அவர் சொல்ற ஐந்து விதிகளை ஆழமா கவனிச்சாலே நம்ம சமூக அரசியல் புலப்படும். அதிகாரத்தில் கை வைக்கக் கூடாது-ன்றது இந்தியாவில் அதிகாரத்துக்கு எதிரா ஒரு டேஷும் பண்ண முடியாதுன்றதை தெளிவா சொல்லித் தரும். பரச்னலா பார்த்தா, அந்த அஞ்சாவது ரூல்ஸ்: சொதப்பினா ஒத்துக்கணும்-ன்ற நம்ம பர்சனல் – ப்ரொஃபஷனல் லைஃப்ல ஃபாலோ பண்ண வேண்டிய மகத்தான அறிவுரை. இப்படி நிறைய மேட்டர்களை டீகோட் பண்ணிட்டே போலாம். அவ்ளோ இருக்கு ‘சூது கவ்வும்’ படத்துல.

‘சூது கவ்வும்’ படத்தை மிகச் சிறந்த அரசியல் படமா கூட பார்க்கலாம். ஒருபக்கம் நம் சொசைட்டி முழுக்க முழுக்க பணத்தால் ஆனதுன்ற கோடிட்டு காட்டிட்டு வரும் இந்தப் படம், பகலவன், கேசவன், சேகர், அருமை பிரகாசம், நிதியமைச்சர் ஞானோதயம், தமிழக முதல்வர் கேரக்டர்களின் வழியாக நம் நாட்டு அரசியலை பக்குவமா பகடி செஞ்சிருக்கிறதை கவனிக்கலாம்.

படத்தோட திரைக்கதையும் வசனமும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட விதம்தான் இன்றளவும் ‘சூது கவ்வும்’ படத்துக்கு க்ளாசிக் தன்மையைக் கொடுக்குதுன்னு சொல்லலாம். தாஸ் டீம் செய்யும் முயற்சிகள், சொதப்பல்கள், சிக்கல்கள், பிரச்சினைகளில் இருந்து மீளுதல்ன்றது படம் முழுக்க பரபரப்பாகவும் வெடிச்சி சிரிக்கிற மாதிரியும் இருக்கும்.

அதுவும் திரைக்கதைல பல குட்டி குட்டி ட்விஸ்டுகள் கொஞ்சம் கூட கணிக்க முடியாததா இருக்கும். குறிப்பாக, பணத்தைத் தூக்க ட்ரோன் யூஸ் பண்ணது, இன்டர்வெல் போஷன், இன்ஸ்பெக்டர் பிரம்மாவுக்கு ஏற்படும் பின்விளைவு-ன்னு அடுக்கிட்டே போகலாம். விஜய் சேதுபதியின் மாயக் காதலியாக வரும் சஞ்சிதா ஷெட்டியின் சேட்டைகளும் ரசனையாகவும் ரகளையாவும் இருக்கும்.

சூது கவ்வும்

சார்லி சாப்ளின் படங்கள் திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தன்மை இருக்கும். அப்படியான தன்மை மிகுந்த படங்கள்ல ‘சூது கவ்வும்’ படமும் ஒண்ணுன்னு சொல்லலாம். குறிப்பிட்டு சொல்லணும்னா, சார்லி சாப்ளின் கேரக்டர்களுக்கு இணையானது விஜய் சேதுபதியின் தாஸ் கேரக்டர். ‘சூது கவ்வும்’ படத்துல எங்கேயுமே ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை தாஸ் வாழ்ந்து வர்ற மாதிரியான சீன் இருக்காது. அப்படி இருந்தாலும் அது அந்தக் கேரக்டரோட சைக்காலஜிக்கல் பிரச்சினையால் போலியானதாக இருக்கும். ஆனால், அந்தக் கேரக்டர்தான் நம்மை படம் முழுக்க மகிழ்விக்கும். சார்லி சாப்ளின் கேரக்டர்களும் அப்படித்தானே.

அப்புறம், நம்மளை சுத்தி க்ரைஸிஸ் நிறைய கட்டங்கட்டிட்டு இருக்கும்போது, சில படங்கள் பார்த்தா ஒருவித உத்வேகம் கிடைக்கும். அப்படியான படமாகவும் ‘சூது கவ்வும்’ படத்தை நாம பார்க்கலாம். இதுல வர்ற எல்லா கேரக்டர்களுமே க்ரைஸிஸ் மேனேஜ்மென்டை ரொம்ப கூலா ஹேண்டில் பண்றதை கவனிக்கலாம். ஆட்டோல போகும்போது டேப் கீழே விழுந்து நொறுங்குற இடம் எல்லாம் எவ்ளோ பெரிய க்ரைஸிஸ்? – இந்த மாதிரி நிறைய சீன்ஸ் இருக்கு படத்துல.

சூது கவ்வும் டயலாக்ஸ்… சில சாம்பிள் மட்டும் சொல்றேன்… மீதியை நீங்களே கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க. சினிமாவை வசனங்கள் மூலமாவும் எங்கேஜிங்கா ரசிகர்களுக்கு ட்ரீட் தர முடியும்னு நிரூபிச்ச படம். அந்த அளவுக்கு புகுந்து விளையாடியிருப்பார் நலன்.

Also Read – ‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் .. ஏன் – 4 காரணங்கள்!

”இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!”

”சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!”

”ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!”

”டெய்லி 18 டீ குடிக்கிறான்… இவனைக் கடத்த பிளான் எதுவும் போடத் தேவையில்லை. ஒரு டீக்கடை போட்டா போதும்!”

”நாளைக்கு சண்டே… நாங்க வொர்க்பண்ண மாட்டோம். திங்கட்கிழமை பணத்தை வாங்கிக்கிறோம்!”

இப்படியான வசனங்கள் தியேட்டரை குலுங்க குலுங்க சிரிக்க வெச்சுது. இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த நேரத்தில் தங்கள் கஷ்டங்களையும் உலகையும் மறந்த சுகானுபவம் பெற்றார்கள் என்றால், அது மிகையே ஆகாது.

‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவில் ஒருவிதமான பாய்ச்சல்னா, ‘காதலும் கடந்து போகும்’ வேற லெவல் பாய்ச்சல்னுதான் சொல்லணும். வெளிநாட்டுப் படங்களை அடிச்சா தெரியாவா போவுதுன்னு பல கதைகளும் பல காட்சிகளும் சுடுவோருக்கு மத்தியில், 2010-ல் வெளியான ‘மை டியர் டெஸ்பிராடோ’ என்கிற கொரிய திரைப்படத்தின் உரிமையை விலை கொடுத்து வாங்கி, அதை அதிகாரபூர்வமாகத் தமிழில் கச்சிதமாக ரீமேக் செய்தார் நலன். 2016-ல் வெளிவந்த இந்தப் படம், இன்றளவும் நம் மக்களின் ஃபேவரிட் பட்டியலில் நீடிக்கிறது என்றால், அதுதான் நலன் திரைக்கதையின் மாயவித்தை.

இந்தப் படம் வெளிவந்தப்ப ‘சூது கவ்வும்’ மாதிரி பரபரப்பா இல்லை. ரொம்ப ஸ்லோவா போவுதுன்னு சொன்னாங்க. அப்படி சொன்னவங்களையே பல தடவை பார்க்கவெச்சு, ‘ஸ்லோ’க்கும் ‘போரிங்’குக்குமான வித்தியாசத்தைப் புரியவைச்சுது ‘ககபோ’.

சினிமா கற்கும் மாணவர்களுக்கு, ‘ஒரு நல்ல படைப்பை ரீமேக் செய்வது எப்படி?’ன்ற பாடத்தை வைக்கணும்னா, அதுக்கு உதாரணமா ‘ககபோ’வை நிச்சயம் வைக்கலாம். அசல் படைப்பின் ஜீவனை பிசகாமல் அப்படியே எடுத்து, நம் வாழ்வியலுக்கு ஏற்ற உடலில் புகுத்தி, நம் ரசிகர்களுக்கு தங்கள் மண்ணில் நிகழும் அசல் கதையைக் காணும் அனுபவத்தைக் கடத்தியிருப்பார் நலன்.

ஒரு லோக்கல் கவுன்சிலர்கூட இருக்கும் ஒரு அடியாள்… சிறுநகரில் இருந்து தனியாக பெருநகரில் வேலை தேடும் பெண்… இந்த இருவருக்கும் இடையே உருவாகும் ஓர் உறவை காதலைக் கடந்து காட்டிய படைப்புதான் ‘காதலும் கடந்து போகும்’. பார் ஓனர், அடியாட்கள், போலீஸ் நெட்வொர்க் ஒருபக்கம், பொறியியல் படித்தவர்கள், ஐடி ஊழியர்களின் பிரச்சினை இன்னொரு பக்கம்னு திரைக்கதைக்குள் பல விஷயங்களை பிசிறு இல்லாம கலக்கியிருப்பாரு.

நம்மில் பலருக்குள் ஒளிந்திருக்கும் ஒருவனைத்தான் கதிராக வடித்திருப்பார் நலன். வெளியுலகத்துக்கு கெத்தா இருக்கணும்னு நினைப்போம். ஆனால், இயல்பான மனிதர்களாதான் வாழ்வோம். இருந்தும், நமக்குள்ள ஆழமான காதல் இருக்கு. அதை ரொம்ப சாதாரணமாதான் வெளிப்படுத்துறோம். கதிரும் அப்படித்தான் உணர்வுகளை ரொம்ப இயல்பா காட்டிக்கிறான். எந்த இடத்துல லவ்வுன்ற வார்த்தையே இல்லை.

ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டு வரைக்கும் கெத்து காட்டும் இடங்களில் எல்லாம் பல்பு வாங்கினாலும் கெத்தை விடாத கதிர், அந்த பாரில் அடி வாங்கிவிட்டு, கெத்தாக சிகரெட் பத்த வைத்து சீறிக் கிளம்பும் இடமாகட்டும், தன்னை அடித்தவர்களை ஸ்கெட்ச்சுப் போட்டு அடிக்கப் போகும் இடமாகட்டும் செம்ம மாஸா இருக்கும்.

காதலும் கடந்து போகும்

இப்படி கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கெத்தாளராக வலம் வரும் அதே ரவுடிதான், தன் தோழிக்கு வேலை கிடைப்பதற்காக தன் தன்மானத்தை முற்றிலும் துறக்கும் விதமாக அந்த இன்டர்வ்யூ சீனில் நடந்துகொள்வார். அந்த இடத்தில் நம்மை வைத்து யோசிக்க முடியாத அளவுக்கு அன்பு வெளிப்பாட்டின் எக்ஸ்ட்ரீம் அது. இன்னொரு பக்கம் தன் சிஷ்யனா வர்ற மணிகண்டன் கேரக்டரை திரும்பிப் போயிடுன்னு அட்வைஸ் பண்ற இடமெல்லாம் அற்புதமானது.

“நான் ஒரு பழமொழி சொல்றேன்… கொஞ்சம் பழசாத்தான் இருக்கும்”

“அடியாள்னா அடியும் வாங்கணும்… நீ கொஞ்சம் அதிகமா வாங்குவபோல”

“நாயா… நானா..?” போன்ற டயலாக்ஸும், அந்த டயலாக்ஸ் வர்ற இடங்களுமே டிபிக்கல் நலன் பாணி எழுத்துக்கு சான்றுகள்.

அதேமாதிரி, ஹீரோயின்கள்னாலே இப்படியெல்லாம் குணாதிசயங்கள், தோற்றம், பாடிலேங்குவேஜ் இருக்கும்ன்ற பல க்ளீஷேக்களைக் கிள்ளியெறிந்திருப்பார் நலன்.

அதிகாலையில் தூங்கியெழுந்து தெருவில் இறங்கி குப்பைப் போடும் ஹீரோயினைக் காட்டியது எல்லாம் தமிழ் சினிமாவுக்கே ஐ-ஓபனிங். அதேபோல், எதிர்வீட்டு ரவுடி நண்பருடன் நாயகி யாழினி மது அருந்தும் காட்சி அமைத்த விதம் எவ்வித நெருடலும் இல்லாத அட்டகாசமான பதிவு.

காதலென்பது நொடிக்கு நூறு தடவை லவ் யூ சொல்றது இல்லை. தன் காதலை உயர்த்துவதற்காக தன்னைத் தாழ்த்திக்கொள்ளவும் தயங்காத பக்குவம் காதல் என்றும் சொன்ன ‘காதலும் கடந்து போகும்’ காலத்தால் அழியாத காவியம் என்றால் அதுவும் மிகையல்ல. நலன் தனது இரண்டு படங்களிலுமே பாடல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருப்பதை கவனிக்கலாம். உலக சினிமாவின் தாக்கம் அதிகரித்த பிறகு, சினிமாவில் பாடல் தேவையான்ற கேள்வி வருதேன்னு கேட்டப்ப நலன் சொன்ன பதில் இருக்கே. அது இன்னும் செம்ம.

“ஏன் நிறுத்தணும். பாட்டு நம்ம சினிமாவோ தனித்துவங்கள்ல ஒண்ணு. நான் தியேட்டருக்குப் போறப்ப இந்த மாதிரி பாடல்களை எஞ்சாய் பண்றேன். அதையே நானும் கொடுக்குறேன். இது நம்ம சினிமா. நாம என்ன வேணுன்னாலும் பண்ணலாம். அதை எப்படி பண்றோம், அதோட ரிசல்ட் என்னன்றதுதான் முக்கியம். ‘சூதுகவ்வும்’ படத்துல ‘காசு பணம் துட்டு…’, காகபோ-வுல ‘காகபோ…’ பாட்டெல்லாம் அப்படி நான் ரசிச்சு வெச்சதுதான். பாடல் இல்லாம படம் எடுத்தா ஓகேதான். ஆனா, ஒரு நல்ல சினிமாவுக்கு பாடல்கள் இருக்கக் கூடாதுன்றதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது”ன்னு அவர் சொன்னது ரொம்பவே சரிதான்.

Better late than never-னு சொல்வாங்க. இரண்டு அட்டகாசமான படங்களைக் கொடுத்துட்டு இவ்ளோ கேப் எடுத்துட்டு வந்தாலும், நலன் இனி கொடுக்கப் போற படம் நிச்சயம் நமக்கு புது அனுபவமாதான் இருக்கும்னு முழுமையா நம்பலாம். சூது கவ்வும் பார்த்துட்டு, அதோட சாயல் இல்லாம காதலும் கடந்து போகும் கொடுத்தவர், அந்த ரெண்டு சாயலும் இல்லாம ஃப்ரெஷ்ஷான சம்பவங்களை நிகழ்த்துவார்னும் எதிர்பார்க்கலாம். அதுக்கு அவர் ஒரு முறை சொன்ன ஸ்டேட்மென்ட்தான் நம்பிக்கை தருது.

“என்னோட படங்களைப் பார்க்க முன்முடிவோட தியேட்டருக்கு ரசிகர்கள் வர்றதை விரும்பவில்லை. இப்படித்தான் இருக்கும்னு கணிக்கிற அளவுக்கு ஒரே மாதிரியான படங்கள் தர்றதுல என்ன இருக்கு? எனக்கு எல்லா விதமான ஜானர்லயும் படம் பண்ண பிடிக்கும். அதைத்தான் ‘சூது கவ்வும்’ படத்துக்கு அப்புறம் ரோம்-காம் ட்ரை பண்ணினேன்” என்பதுதான் அந்த ஸ்டேட்மென்ட்.

காத்திருப்போம். அதுவரை நலன் குமாரசாமி படங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச அம்சங்கள், காட்சிகள், வசனங்களை கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top