டைரக்டர் டூ ஆக்டர்… வாழ்வையே மாற்றிய ஜர்னி!

டைரக்டர் டூ ஆக்டர் | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்றாலும் மிகச்சில இயக்குநர்கள் ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருக்கிறார். சினிமாதான் எல்லாமே என முடிவு செய்த அவர்கள், தங்கள் கரியரே மாறினாலும் சினிமாவில் பயணிப்பதை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான 4 பேரைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.

டைரக்டர் டூ ஆக்டர்

மாரிமுத்து

Marimuthu
Marimuthu

சீரியல் ஒன்றில் ட்ரோன் கேமராக்களையும் மணமகள் நடனத்தைப் பற்றியும் விமர்சித்துப் பேசியதால் டிரெண்டானர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார். பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய் படம் மூலம் இயக்குநர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார். ஊழல் போலீஸாக அந்த கேரக்டரில் மாரிமுத்து அதகளம் செய்யவே, அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. நிமிர்ந்து நில், கொம்பன் தொடங்கி சமீபத்தில் ரிலீஸான விக்ரம் வரையில் குணச்சித்திர நடிகராக கோலிவுட்டில் தனித்த அடையாளம் பதித்துவிட்டார் மாரிமுத்து.

இ.ராம்தாஸ்

Ramadoss
Ramadoss

வசூல் ராஜா ஹாஸ்பிடல் அட்டண்டரை நியாபகம் இருக்கா… மெடிக்கல் காலேஜ் அட்மிஷனுக்காக கமல் அண்ட் கோ ஹாஸ்பிட்டலுக்குப் போகவே, இதைக் கேள்விப்பட்டு, `நானும் இப்படித்தான்’னு சொல்லி அட்டண்டர் ராம்தாஸ் பேசுற டயலாக் அவ்வளவு ரியலா இருக்கும். இப்படித்தான் நடிகராகத் தடம் பதித்தார் இயக்குநர் இ.ராம்தாஸ். வசூல் ராஜா படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே 5 படங்களுக்கும் மேல் இயக்கியவர் ராம்தாஸ். மணிவண்ணனின் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட இவர், 1986-ல் மோகன், சீதா நடித்த ஆயிரம் மலர்களே மலருங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையிலும் படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு ராமராஜன் – கௌதமியை வைத்து ராஜாராஜாதான் படத்தை எடுத்தார். புகழ்பெற்ற இளையராஜா பாடல்களான பூமேடையோ.. பொன் வீணையோ, மாமரத்துக் குயிலு போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பெற்றவை. அதன்பிறகு பெரிய நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ராவணன் மற்றும் வாழ்க ஜனநாயகம் என மன்சூர் அலிகானை வைத்து இரண்டு படங்களை எடுத்தார். அதேபோல், 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சுயம்வரம் படத்தில் பாண்டியராஜன் – கஸ்தூரி போர்ஷனை இயக்கிய ராம்தாஸ், 15 படங்களுக்கு மேல் திரைக்கதையிலும் பணிபுரிந்திருக்கிறார். 2004-ல் வெளியான வசூல் ராஜா இவரை நடிகராகவும் அடையாளம் காட்டவே ஆக்டிங் ஜர்னியையே வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறார். தர்மதுரை, விக்ரம் வேதா, அறம் தொடங்கி சமீபத்தில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் வரை வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் இ.ராம்தாஸ்.

Also Read – ‘பேய் படத்துக்கு இன்னொரு டிரெண்ட் செட்டர்..’ – `டிமான்ட்டி காலனி!

அஜித், விஜய் படங்களை இயக்கிய முக்கியமான இரண்டு இயக்குநர்கள் இன்றைக்கு டைரக்‌ஷனையே விட்டுட்டு குணச்சித்திர, காமெடி வேடங்களில் தமிழ் சினிமாவில் கலக்கிட்டு இருக்காங்க… அவங்க யாரு… என்னென்ன படங்கள்னு பார்க்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

சிங்கம் புலி

Singam Puli
Singam Puli

மாயாண்டி குடும்பத்தார் மாயாண்டி விருமாண்டி கேரக்டரை நம்மால் மறக்கமுடியுமா… அதேமாதிரி, தேசிங்கு ராஜா பந்தி சீன்ல பாயாசம் எங்கடா டயலாக்கும், குறுக்க இந்த கௌசிக் வந்தா டயலாக்கும் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்க மீம் மெட்டீரியல்கள். மதுரை மண்ணின் மைந்தராகவே பல படங்களில் நடித்து நம்மைக் கலகலப்பூட்டி வரும் சிங்கம்புலி காமெடி நடிகர் மட்டுமில்லீங்க, இயக்குநரும் கூட.. சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது அஜித்தின் நம்பிக்கையைப் பெற்ற அவர், முதலில் இயக்கியதே அஜித்தைத்தான். 2002-ல் வெளியான ரெட் படம் மூலம் இயக்குநரான அவர், அதன்பிறகு 2005-ல் சூர்யா ஜோதிகா நடித்த மாயாவி படத்தையும் இயக்கினார். அவர் தனது கரியரில் இயக்கிய இரண்டு படங்களுமே உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கியவை. 2009-ல் நான் கடவுள் படத்தை எடுத்த பாலா, பிச்சைக்காரர் கேங் மெம்பர் குய்யன் கேரக்டரை சிங்கம் புலிக்குக் கொடுத்து நடிகராக அறிமுகப்படுத்தினார். சிங்கம் புலியின் யுனீக்கான வாய்ஸும், அவர் கொடுத்த கவுண்டர்களும் நல்லாவே வொர்க் அவுட் ஆகவே, ஒரு காமெடியான தமிழ் சினிமாவில் பயணிக்கத் தொடங்கினார். 2009 தொடங்கி 2022 வரை 70-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நம்ம கௌசிக். டைரக்டர் டூ ஆக்டர் ஜர்னில தனக்குக் கொடுக்கப்படும் காமெடி கேரக்டர்களை ரொம்பவே ரசித்துப் பண்ணுகிறாராம் சிங்கம்புலி.

அழகம் பெருமாள்

Azhagam Perumal
Azhagam Perumal

மணிரத்னம் புரடக்‌ஷன் ஹவுஸான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் அவரைத் தவிர வேறொரு இயக்குநராக முதல் படம் இயக்கிய பெருமை கொண்டவர் அழகம் பெருமாள். பிலிம் இன்ஸ்டிடியூட் கோல்டு மெடலிஸ்டான இவர், இஸ்ரோ வேலை அழைப்பாணையைக் கிழித்துப் போட்டுவிட்டு மணிரத்னம் பட்டறையில் பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு முதல் படமாக வந்திருக்க வேண்டிய படம் விஜய் – சிம்ரன் நடித்த உதயா படம். படத்துக்கான வேலைகளை 1999-லேயே தொடங்கியிருந்தாலும் படம் வெளியானது 2004-ல்தான். இடையில், தன்னுடைய குருநாதர் மணிரத்னம் தயாரிப்பிலேயே 2001-ல் மாதவன் – ஜோதிகா நடித்த டும் டும் டும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். அதன்பிறகு ஸ்ரீகாந்த் – மீரா ஜாஸ்மின் நடித்த ஜூட் படத்தை இயக்கினார். இயக்குநராக இவரை அறிமுகப்படுத்திய மணிரத்னமே, அலைபாயுதே ஹவுஸ் ஓனர் கேரக்டர் மூலம் வாய்ப்புக் கொடுத்தார். நடிகராக இரண்டாவது படமான புதுப்பேட்டையில் அரசியல்வாதி தமிழ்ச்செல்வனாக அதகளம் பண்ணியிருப்பார். கற்றது தமிழ் டீச்சர், ஆயிரத்தில் ஒருவன் மிலிட்டரி ஆபிஸர், நீர்ப்பறவை சர்ச் ஃபாதர் தொடங்கி சமீபத்தில் வெளியான அனல் மேல் பனித்துளி வரை ஒரு நடிகராக சக்ஸஸ்ஃபுல் கரியரைக் கொண்டிருக்கிறார். டைரக்டர் டூ ஆக்டர் ஜர்னில வெற்றிகரமாக வலம் வர்றார்.

இப்படி இயக்குநர்களாகத் தனது கரியரைத் தொடங்கினாலும் நடிப்பில் ஜொலித்து ஒரு நடிகராக வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள் இந்த 4 பேரும்…. இவங்க வரிசைல யாரையாவது நான் சொல்லாம விட்டிருந்தா அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top