பால்ய காலத்துல கேட்டு ரசிச்ச பாடல்கள்… என்னய்யா இப்படிலாம் எழுதி வைச்சிருக்கீங்க?

செவ்விதழ் வருடும்போது, தேகத்தங்கம் உருகுமே, உலகின் ஓசை அடங்கும்போது , உயிரின் ஓசை தொடங்குமே… நெஞ்சினிலே நெஞ்சினிலே! – இந்தப் பாட்டைக் கேட்டுட்டு இருந்தேன். வெயிட்ட மினிட்னு மைண்ட் சொல்லி, வரிகளை திருப்பி கேக்கும்போது, ஓ மை காட்னு தோணிச்சு. இந்த மாதிரி நமக்கு புடிச்ச, சின்ன வயசுல கேட்டு வளர்ந்த பாடல்களையெல்லாம் திரும்ப கேட்கும்போது, யோவ்… லிரிசிஸ்ட்களா என்னென்ன எழுதி வைச்சிருக்கீங்கனு வாயப்பொளந்து கேட்டுட்டு இருந்தேன். தமிழ்ல வந்த ஐட்டம் சாங்க்ஸ்லகூட இந்த அளவுக்கு டபுள் மீனிங் வராதே… நீங்க காதல் பாட்டுன்ற பேருல கண்ணா, பின்னானு எழுதி வைச்சிருக்கீங்களே… சரி, இன்னைக்கு நாம ஃபீல்குட்னு நினைச்சு இன்னைக்கும் ஹம் பண்ற சில பாடல்களுக்குள்ள ஒளிஞ்சு இருக்குற டபுள் மீனிங் வரிகளைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஸ்கூல்ல படிக்கும்போது சில பாட்டுலாம் கேட்டு மெய்மறந்து போயிருப்போம். அந்த லிரிக்ஸ்லாம் திடீர்னு நம்ம மைண்டுக்கு வந்து சுத்தி நிறைய பேர் இருக்கும்போது சத்தமா பாடுவோம். அப்போ, பக்கத்துல பெரியவங்க இருந்தாங்கன்னா பொடதிலயே ஒண்ணு போட்டு. என்ன கருமத்தை பாடுற? எங்க இருந்து இதெல்லாம் கேக்குற?னு திட்டுவாங்க. அவங்க ஏன் அடிச்சாங்கனு அப்போ புரியலை. ஆனால், அந்தப் பாட்டையெல்லாம் இப்போ கேட்டா ஏன் அடிச்சாங்கனு புரியுது. ஒல்லியா இருக்குறவங்களைப் பார்த்தா நமக்கு டக்னு நியாபகம் வர்றது ‘ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி’ பாட்டுதான். சிங்கம்புலி இயக்கத்துல அஜித் நடிப்புல இந்தப் படம் 2002-ல வெளியாச்சு. இந்தப் படத்துலதான் அந்தப் பாட்டு வரும். தேவா மியூசிக் போட்ட இந்தப் பாட்டை வைரமுத்துதான் எழுதியிருக்காரு. இந்தப் பாட்டுல, “பழுத்தாச்சு நெஞ்சாம் பழம் பழுத்தாச்சு, அணில் கிட்ட குடுத்தாச்சு”னு ஒரு லைன் வரும். உங்களுக்கே புரிஞ்சிருக்கும். இதுக்கு என்ன ரியாக்ட் பண்றதுனு தெரியலை. அதனால, அப்படியே கட் பண்ணி அடுத்த பாட்டுக்கு போய்டுவோம்.

கவிஞர்களோட திறமையே என்ன தெரியுமா? எதையும் ஸ்ட்ரெயிட்டா சொல்ல மாட்டாங்க. ஆனால், அவங்க சொல்றதை வீட்டுக்குப்போய் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தாதான் புரியும். அப்படி இன்னொரு பாட்டுதான் ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’. எனக்கு சின்ன வயசுல இந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும். ஹாரிஸ் மாம்ஸ் மியூசிக், விக்ரம், ஷங்கர்னு அந்தக் கூட்டணியே பிரம்மாண்டமா இருக்கும். காதலியை வர்ணிச்சுப் பாடுறது தான் அந்தப் பாட்டு. வைரமுத்துதான் இதுக்கும் லிரிக்ஸ். இந்தப் பாட்டுல, “சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு, அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு”னு ஒரு லைன் வரும். யோவ், என்னையா நல்லா பாடிட்டு இருந்த திடீர்னு இப்படிலாம் சொல்றனு தோணும். அப்புறம் பாட்டுக்கு இடைல இடைல ஓலா கம்பெனியை புரொமோட் பண்ற மாதிரியான லைன்ஸ்லாம் வரும். அதேமாதிரி, ‘ஐயங்காரு வீட்டு அழகே’ பாட்டுலயும் வைரமுத்து வேறலெவல் தக்லைஃப் பண்ணிருப்பாப்புல. “வான்மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும். ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்”னு எழுதியிருப்பாரு. இதுதெரியாம இந்தப் பாட்டை கத்திலாம் பாடியிருக்கனே. என்ன நினைச்சிருப்பாங்க?!

ஷங்கரோட பெஸ்ட் படங்கள்ல ஒண்ணு, ஜீன்ஸ். இப்பவும் இந்தப் படத்தைப் பார்த்தா ஒரு ஃபீல்குட் ஃபீலிங் கிடைக்கும். இந்தப் படத்துல வந்த எல்லாப் பாட்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஏ.ஆர்.ரஹ்மான் மாஸ் பண்ணியிருப்பாரு, ஒவ்வொரு பாட்டுலயும். அந்த ஆல்பத்துல ‘அன்பே அன்பே கொல்லாதே’ பாட்டு வரும். ஹரிஹரனும் அனுராதா ஸ்ரீராமும் உருகி உருகி பாடியிருப்பாங்க. வழக்கம்போல வைரமுத்துதான் இந்தப் பாட்டுக்கும் லிரிக்ஸ் எழுதியிருக்காரு. பாட்டு நடுவுல, “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன். அடடா பிரம்மன் கஞ்சனடி. சற்றே நிமிர்ந்தேன். தலை சுற்றிப் போனேன். ஆஹா, அவனே வள்ளலடி”னு ஒரு வரி எழுதியிருப்பாரு. மனுஷன் என்னாமா ஃபீல் பண்ணி எழுதியிருக்காரு பாருங்க. இந்தப் படத்துல மற்றப் பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்காரு. அதேபடத்துல கண்ணோடு காண்பதெல்லாம், வாராயோ தோழி, எனக்கே எனக்கா இந்தப் பாட்டுலயெல்லாம் வரிகள் செமயா எழுதியிருப்பாரு. எல்லா எக்ஸ்ட்ரீமுக்கும் போய்தான் மனுஷன் பாட்டு எழுதுவாருபோல.

விஜய் நடிப்புல வெளிவந்த ஷாஜகான் படம் இன்னைக்கும் நிறைய பேருக்கு ஃபேவரைட். இயக்குநர் ரவி டைரக்ட் பண்ண இந்தப் படத்துக்கு மணி ஷர்மா மியூசிக் போட்ருக்காரு. இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் வைரமுத்துதான் எழுதியிருக்காரு. ஆல்பமாவே செம ஆல்பம். மெல்லினமே மெல்லினமே, மின்னலைப் பிடித்து, அச்சச்சோ புன்னகையெல்லாம் இன்னைக்கும் என்னோட பிளே லிஸ்ட்டை ரூல் பண்ணுது. தலைவன் வைரமுத்து ‘மின்னலைப் பிடித்து’ பாட்டுல கற்பனைகளை சும்மா அள்ளி தெளிச்சிருப்பாரு. “அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று, உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம், அடைந்து ராகங்கள் ஆகின்றதே” வரிகளை கேட்டுட்டு என்னமா எழுதியிருக்காருனு தோணும். அப்படியே அடுத்த சில லைன்கள்ல சம்பவம் பண்ணியிருப்பாரு. “உலக மலா்கள் பறித்து பறித்து, இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து , பெண்மை சமைத்து விட்டான்”னு எழுதியிருப்பாரு. சரி அதோட விடுவாருனு பார்த்தா, “தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட, மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட, ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே”னு அடுத்து எழுதி வைச்சிருப்பாரு. ரைட்டு நடத்துங்கனு தோணும். இருந்தாலும் இந்தப் பாட்டு வைரமுத்து எழுதுனதுல ஒன் ஆஃப்தி பெஸ்ட்.

ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து – ஷங்கர், மணிரத்னம் கூட்டணில வந்த பெரும்பாலான பாடல்கள் இப்படிதான் இருக்கும். இல்லை, இல்லை வைரமுத்து எழுதுன மோட்டிவேஷன் சாங்ஸைத் தவிர எல்லாமே இப்படிதான் இருக்கும். இதெல்லாம் சின்ன எக்ஸ்ம்பிள்ஸ்தான். சொல்லவே முடியாத பல வரிகள் இருக்கு. அதையெல்லாம் நீங்களே கேளுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top