தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் கோவை சரளா. தமிழ் மக்களால் எளிதில் மறக்க முடியாத பல படங்களிலும், பல கேரக்டர்களிலும் நடித்து பிரபலமானவர். இவரது திரைபயணத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
-
1 சிநேகிதனே...
கோவை சரளானு சொன்னதும் நமக்கு ஞாபகத்துக்கு வர பல விஷயங்களில் ஷாஜகான் படத்தில் அவங்க பாடுன சிநேகிதனே பாடல் நிச்சயமாக இருக்கும். இந்தப் படத்துக்காக கோவை சரளாவிடம் இயக்குநர் கதையைக் கூறியதும், வித்தியாசமான டோனில் ஒரு பாடலையும் அடிக்கடி பாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். உடனே அவரிடம் கோவை சரளா இந்தப் பாடலை பாடிக்காட்ட, ‘இந்தப் பாட்டு வேணாம் மேடம். இது நல்லா ஹிட்டான பாட்டு. இதை நாம காமெடியா மாத்தி பாடுனா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க’ என சொல்லியிருக்கிறார். ‘ஹிட்டான பாட்டை வெச்சு காமெடி பண்ணுனாதான் மக்களுக்கு பிடிக்கும்’ என கோவை சரளா சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளவேயில்லையாம். அதற்கு, ‘நீங்க இதை படத்துல வைங்க. மக்கள் இதை ஏத்துக்கலைனா நான் சம்பளத்தை திரும்பு தந்துடுறேன்’னு சொல்லியிருக்கிறார் கோவை சரளா. மிகவும் பிடிவாதமாக இருக்கிறாரே என்றுதான் இதை இயக்குநர் படத்தில் வைத்திருக்கிறார். படம் வெளியான பிறகு கோவை சரளா சொல்லியது போலவே மக்களுக்கு இது பிடித்துவிட்டது. இப்போது வரைக்கும் ஒரிஜினல் பாட்டை கேட்பவர்களுக்கு கோவை சரளா பாடிய வெர்ஷனும் ஞாபகத்துக்கு வரும்.
-
2 வயதான கேரக்டர்ஸ்
முந்தாணை முடிச்சு படத்தில் 32 வயது பெண்மணி கேரக்டருக்காக கோவை சரளாவை பாக்யராஜ் ஆடிஷன் செய்தபோது, ‘வயதான கேரக்டர் வேண்டாம் சார். ஒரு படத்தில் அப்படி நடிச்சிட்டால், அடுத்து எல்லா படத்துக்கும் அது மாதிரியே கேரக்டர் வரும்’ என சொல்லியிருக்கார். அதற்கு பாக்யராஜ், ‘இந்த கேரக்டர் நிச்சயமான உனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும். அதற்காகவே நீ நடிக்கலாம்’ என சமாதானம் செய்து நடிக்க வைத்திருக்கிறார். கோவை சரளா நினைத்தது போலவே அடுத்த 25 படங்களில் வயதான கேரக்டரில்தான் கோவை சரளா நடித்திருக்கிறார். அதில் பாக்யராஜிற்கு அம்மாவாக நடித்த சின்னவீடு படமும் ஒன்று.
-
3 காஞ்சனா சீரிஸ்
கோவை சரளாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது காஞ்சனா படம் மூலமாகத்தான். இதுவரைக்கும் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என நான்கு படங்களிலும் நடித்த கோவை சரளா, இந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் நடித்தப்பிறகு 10 நாள்கள் ஓய்வு மட்டுமே எடுப்பாராம். ஏனென்றால், மற்ற படங்களில் நடிக்கும் போது ஒருசில காட்சிகள் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இதில் படம் முழுக்க வரக்கூடிய கதாபாத்திரம். அதுமட்டுமில்லாமல் பேயிடம் அடி வாங்குவது, லாரன்ஸை இடுப்பில் உட்கார வைத்து ஓடுவது, பைப் பிடித்து மாடியில் ஏறுவது என உடல் உழைப்பு இந்தப் படத்தில் அதிகம் இருக்குமாம். அதனால் கண்டிப்பாக 10 நாள்கள் ஓய்வு எடுப்பாராம்.
-
4 ஹீரோயின்
சதிலீலாவதி படத்தில் கோவை சரளா நடித்த பழனி என்கிற கதாபாத்திரம் அவருக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டராகவே இருக்கும். கமல் பல முன்னணி நடிகைகளோடும், பல வேற்று மொழி நடிகைகளோடும் நடித்த சமயத்தில் காமெடி நடிகையோடு ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற அவரது யோசனைக்கு நிச்சயமான எதிர்ப்புகள் வந்திருக்கும். ஆனாலும், இது கோவை சரளா நடித்தால்தான் சரியாக இருக்கும் என நினைத்து அவரை நடிக்க வைத்ததுதான் கோவை சரளாவின் திறமைக்கு கிடைத்த மரியாதை. இன்றுவரைக்கும் பழனிகண்ணு என்றால் அது கோவை சரளாதான்.
-
5 பர்சனல் பக்கம்
கோவை சரளா ஒரு மலையாளி என்றாலும் கோயம்புத்தூரில் வளர்ந்ததால் அவருக்கு கொங்கு தமிழ் நன்றாகவே பரிச்சயம். அதை படத்தில் பயன்படுத்தியதும் பத்திரிகையில் இவரது பெயரை எழுதும் போது வாசகர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக கோவை சரளா என எழுதியிருக்கிறார். அது பிரபலமாக கோவை சரளாவாகவே இருந்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் இளமை காலத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததாலும் இவரது தங்கைகள், தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை ஆளாக்குவதிலேயே கவனமாக இருந்ததாலும் இவரது திருமணத்தைப் பற்றி கோவை சரளா யோசிக்கவேயில்லை. இன்றுவரைக்கும் கோவை சரளா சிங்கிள்தான்.
0 Comments