பொன்னியின் செல்வன் நாவலின் கதை நாயகன் அருள்மொழிவர்மர் alias பொன்னியின் செல்வன் கேரக்டருக்கும், பாகுபலி நாயகன் அமரேந்திர பாகுபலி கேரக்டருக்கும் இடையே இருக்கும் 5 ஒற்றுமைகளைப் பத்திதான் நாம பார்க்கப் போறோம்.
யானை காதலர்கள்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் இரண்டாவது பாகத்தில்தான் அருள்மொழிவர்மரின் அறிமுகம் இருக்கும். இலங்கையில் நடக்கும் போரின்போது சிங்கள மன்னன் இருக்கும் பகுதிக்கே யானைப் பாகனாகப் போவது, யானையில் நீண்டதூரம் பயணிப்பது என யானைகளின் காதலராகவே அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பக்கம் பாகுபலியில் பார்த்தால், மகிழ்மதியின் எல்லையிலேயே உங்களை பிரமாண்ட யானை சிலை வரவேற்கும். தேவசேனா முதல்முறையாக மகிழ்மதி வரும்போது, அவரது படகில் கட்டப்பட்டிருக்கும் கொடி யானை சிலையில் பட்டு உடைந்து விழும். அதேபோல், ராஜமாதா சிவகாமி தலையில் தீச்சட்டி சுமந்து கோயிலை நோக்கி நடந்து செல்கையில் குறுக்கே வரும் மதம்பிடித்த யானையை தேரைக்கொண்டு தடுத்து நிறுத்தியதோடு, மஞ்சள் தூவி அதை சமாதானம் செய்து, அதன் மீதேறி போஸ் கொடுப்பார் சீனியர் பாகுபலி.
போர் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
போர் வியூகங்களை வகுப்பதில் அருள்மொழிவர்மராகட்டும் பாகுபலியாகட்டும் திறமையானவர்கள். சிங்கள மன்னனுடனான போரில் அவன் பதுங்கியிருக்கும் இடத்துக்கே நேரடியாக சென்று அந்த இடத்தை ஆய்வு செய்து, திட்டம் வகுப்பது ஒருபுறம் என்றால், போரால் இலங்கையின் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என, தஞ்சையில் இருந்து வீரர்களுக்கான உணவுப் பொருட்களை வரவழைப்பார்.
காளகேயர்களை வென்ற ஒரே ஆள் என்றால் அது பாகுபலிதான். பிங்கலத் தேவரின் சூழ்ச்சியால் போருக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கிடைக்காத நிலையிலும் திரைசீலைகள், எண்ணெயைப் பயன்படுத்தி எதிர் முகாமைக் கலங்கடிப்பார். அதேபோல், குறைவான வீரர்களை மட்டுமே பயன்படுத்தி ஈட்டி வியூகம் அமைத்து எதிர்ப்படையைக் கலங்கடிப்பார் அமரேந்திர பாகுபலி. அதேபோல், மக்களைப் பிணைக் கைதிகளாக காளகேயர்கள் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காப்பாற்றுவதிலேயே முதல் கவனம் செலுத்துவார்.
ஃபேமிலி சென்டிமென்ட்
சிறு வயதிலேயே தாயை இழந்த அருள்மொழி வர்மர், அக்கா குந்தவையின் பேச்சை மீறி ஒரு இடத்தில் கூட செயல்படுவதை விரும்ப மாட்டார். புயலில் சிக்கி கரையேறுகையில், நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் சகோதரி குந்தவையின் அறிவுரைப்படி நாகை புத்த விஹாரத்தில் தங்கி சிகிச்சையெடுப்பார். திருமண விஷயத்திலும் சகோதரி குந்தவையின் விருப்பப்படியே வானதியையே தேர்வு செய்வார்.
அருள்மொழி வர்மரைப் போலவே தாயை இழந்த அமரேந்திர பாகுபலி, ராஜமாதா சிவகாமியைத் தனது தாயாகவே நினைத்து வாழ்பவர். அவர் போட்ட கோட்டை எந்த இடத்திலும் தாண்டவே மாட்டார். சிவகாமி தேவியும் தான் பெற்றெடுத்த மகனுக்கு இணையாக, ஏன் அதற்கு அதிகமாகவே பாகுபலி மீது பாசம் கொண்டவராக இருப்பார்.
தேடிவந்த அரியணை
அருள்மொழி வர்மரும் சரி அமரேந்திர பாகுபலியும் சரி, அரியணை ஏறும் வம்சத்தில் பிறந்தவர்கள் இல்லை. அருள்மொழிவர்மரின் தந்தை சுந்தரச் சோழரின் அண்ணன் குடும்பமே வழிவழியாக சோழ சிம்மாசனத்தை அலங்கரித்து வந்தவர்கள். மதுராந்தகச் சோழர் இளவயது பிராயம் கொண்டவராக இருந்ததால், அரியணை ஏறுவார் சுந்தரச் சோழர். குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்த பிறகு, மதுராந்தகர் சிறிதுகாலம் அரசுபுரிந்த பிறகே அருள்மொழி வர்மர் அரியணை ஏறுவார்.
பாகுபலியின் கதையும் இதுவே. அவரது தந்தை மகாராஜா விக்ரம் தேவாவின் மூத்த சகோதரான பிங்கலத் தேவர் உடல் ஊனமுற்ற நிலையில், அவர் சிம்மாசனத்தை அலங்கரிப்பார். ஆனால், அவர் அமரரான பிறகு முறைப்படி தனது மகன் பல்வாள்தேவனுக்கே அரியணை உரிமை என பிங்கலத் தேவர் வாதிடுவார். ஆனால், ராஜமாதா சிவகாமி தேவியின் சாய்ஸ் அமரேந்திர பாகுபலியாகவே இருப்பார். இப்படி அரியணைகள் இவர்கள் இருவரையும் தேடி வந்திருக்கும்.
பெருவாரியான மக்களின் ஆதரவு
நாட்டுக் குடிகளின் ஏகோபித்த ஆதரவும் அன்பும் பெற்றவரே பேரரசராகத் திகழ முடியும் என்பதை வரலாற்றில் பல இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அருள்மொழி வர்மரும் பாகுபலியும் மக்கள் மனதில் குடிகொண்டவர்கள். சுந்தரச் சோழர் நோயில் படுத்திருக்கும் நிலையில், அருள்மொழி வர்மரை புயல் கொண்டதாக வெளியாகும் தகவலால் சோழ நாட்டில் புயல் வீசும் நிலை ஏற்படும். அப்போது, நாகை புத்த விஹாரத்தில் சிகிச்சை பெற்று வந்த அருள்மொழி வர்மர் திடீரென மக்கள் முன் தோன்றி குழப்பங்களைத் தீர்ப்பார். அங்கிருந்து மக்கள் புடை சூழ தஞ்சைக்கு யானையிலேயே பயணிப்பார். வரும் வழியெங்கிலும் மக்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும் என்று கல்கி வர்ணித்திருப்பார்.
அமரேந்திர பாகுபலி மகிழ்மதி மக்கள் கொண்டாடும் ஹீரோவாக இருப்பார். இக்கட்டான சூழலால் அவர் தளபதியாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில், பேரரசர் பல்வாள் தேவனை விட மக்கள் பாகுபலியையே அதிகம் கொண்டாடுவார்கள். பாகுபலி பதவியேற்ற பிறகு மக்களும் வீரர்களும் எழுப்பும் ஓசையில் மன்னரின் குடை சரிந்து விழும் நிலையே அதற்குச் சாட்சி. ஒரு கட்டத்தில் கோட்டையில் இருந்து வெளியேற்றப்படும் பாகுபலியை மக்கள், தங்களின் கடவுளாகவே பாவித்து அரவணைப்பார்கள்.
இதுதவிர பொன்னியின் செல்வன் நாவலுக்கும் பாகுபலி படத்துக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கு. பொன்னி எனப்படும் காவிரி நதி தீரத்தில் விழுந்துவிடும் அருள்மொழி வர்மரை மந்தாகினி தேவி கைகளில் ஏந்தி காப்பாற்றுவார். இதனாலேயே அவர் ’பொன்னியின் செல்வன்’ என்று பெயர் பெறுவார். பாகுபலி படத்தில், அரண்மனையில் இருந்து தப்பித்து படகில் ஏறும்போது காயமடையும் ராஜமாதா சிவகாமி தேவி, அமரேந்திர பாகுபலியின் மகன் மகேந்திர பாகுபலியை ஒற்றைக் கையில் ஏந்தியபடி காப்பாற்றுவார்.
Also Read – ‘கே.ஜி.எஃப் மட்டுமா… எங்க கிட்டயும் இருக்கு!’ – தமிழ் சினிமாவின் எவர்கிரீன் மாஸ் சீன்கள்