4 ‘மில்லியன் டாலர்’ கேள்விகளுக்கு மணிரத்னத்தின்  நறுக் பதில்!

மணிரத்னம் படங்கள்ல ஏன் அடிக்கடி ரயில் காட்சிகள் வருது? ஏன் கம்மியான வசனங்கள் இருக்கு? ஏன் எப்பவும் நிஜமான கதைகளையே எடுக்கிறார் மணிரத்னம்? ஏன் 1992-க்குப் பிறகு எல்லாப் படங்களுக்கும் ரஹ்மான் இசை? இந்த நான்கு கேள்விகளுக்கும் விடை சொல்கிறது இந்த வீடியோ.

ஏன் ரயில் காட்சிகள்?!

அலைபாயுதே
அலைபாயுதே

மணிரத்னம், தன் படங்கள்ல லொக்கேசனையும் ஒரு முக்கியமான கேரக்டரா நினைப்பார். அதுவும் கதை சொல்றதுக்கு ஒரு கருவி என்று சொல்கிறார். ஆனால் ஏன் ரயில், ரயில்வே ஸ்டேஷன்? அலைபாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் ஒரு ரயில் நிலையத்தின் படிக்கட்டில் பேசிக்கொண்டே இறங்கும் காட்சி பலருக்கும் ஃபேவரிட். அந்தக் காட்சியில் ஒரு ஐநூறு பேராவது இவர்கள் இருவரையும் கடந்து போயிருப்பார்கள். ஆனாலும் நம் ஃபோகஸ் அந்த ரெண்டு பேரிடம் இருக்கும். மணிரத்னம் சொல்லும் லாஜிக் இதுதான். அந்த 500 பேருக்கு நடுவுல இந்த ரெண்டு பேரோட கதையை நான் சொல்றேன். அப்படிச் சொல்லும்போதுதான் இந்தக் கூட்டத்துல அவங்க ஏன் ஸ்பெஷல்னு காட்ட முடியும் என்கிறார்.

ஏன் கம்மியான வசனம்?!

பம்பாய்
பம்பாய்

கம்மியான ஒரு வரி வசனங்கள்தான் மணிரத்னம் படங்களின் அடையாளம். இவருடைய வசனத்தில் இன்னொரு ஸ்பெஷலும் இருக்கிறது. மொத்தக் கதையின் சாராம்சத்தையும் ஒரே வசனத்தில் சொல்லிவிடுவார். மௌனராகம் படத்தில் முதலிரவுக்கு முன்  ‘இரண்டு நாள் முன்னை என்னை இப்படி அவரோட அனுப்பிருப்பியா?’ என்று அம்மாவிடம் கேட்பார் ரேவதி. இதுதான் அந்தப் படத்தின் மொத்த கரு. இதுமட்டுமல்ல, ராவணன் படத்தில்  ‘உன் பொண்டாட்டிக்காகவே உன்னை கொல்லலாம்னு தோணுது. அதே பொண்டாட்டிக்காக உன்னை மன்னிச்சுவிடலாம்னு தோணுது’, உயிரே படத்தில் ‘உன்கிட்ட பிடிக்காதது எது தெரியுமா? நான் எவ்ளோதான் தேடினாலும் அதுல உன் மனசு தெரியல’ கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘நாங்க உன்னை தத்தெடுக்கல. நீதான் எங்களை தத்தெடுத்த’ இந்த வசனங்களும் இதே போலத்தான். பம்பாய் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஒருமுறை சொல்லியிருந்தார். ‘எந்த சீனையும் நாலு வசனத்தில முடிச்சிடுவார் மணி,  ஆனா அந்த சீன் நம்மளை ஏதோ பண்ணிடும். பம்பாய் படத்தில வீட்டுக்கு வந்த நாசர் முன்னாடி தயங்கித்தயங்கி நிப்பாங்க மனிஷா. எங்களை பிரிச்சுடமாட்டீங்களேனு அவங்க சொல்ற அந்த ஒரு வசனம்தான் சீன். ஆனா அந்த வசனத்தை மனிஷா சொன்னதுமே என் கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சு’. இப்படி குறைவான வசனங்களில் ஈர்ப்பதுதான் மணி ஸ்டைல்.

ஏன் ரஹ்மான் இசை?

Maniratnam – AR Rahman

ரோஜா படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய எல்லாப் படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை. 30 வருடங்களுக்கும் மேலாக பொன்னியின் செல்வன் வரை தொடர்கிறது இந்த மேஜிக் கூட்டணி. ராஜாவுடன் வேலை பார்ப்பதற்கும் ரஹ்மானிடம் வேலை பார்ப்பதற்குமான வித்தியாசம்தான் அதற்குக் காரணம் என்கிறார் மணிரத்னம். ‘ராஜாவுக்கு ஒரு சுச்சுவேசன் சொன்னால் ஸ்டுடியோவைவிட்டு போகும்போது பாடலோடு வெளியேபோகலாம். ஆனா டியூன் போடும்போது கூடவே இருக்கவேண்டும். அந்த நேரத்தில் நாம சொல்றதுதான் கரெக்சன். அதை மிஸ் பண்ணினா அவ்ளோதான். சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாட்டில் ஒரு போர்க்காட்சி ப்ளான் பண்ணிருந்தேன். இதை ராஜாகிட்டயும் சொல்லிருந்தேன். அந்த பாட்டுக்கு டியூன் போடும்போது ராஜா அதை மிஸ் பண்ணிட்டார். போர்க்காட்சி வரும்னு சொன்னேனே என்று சொல்ல ராஜா ‘அட அது இந்தப் பாட்டுலயா’ என்று சொல்லி டியூனை மாற்றிக்கொடுத்தார். அன்னைக்கு நான் அங்க இருந்ததால இந்த கரெக்சன் உடனே பண்ண முடிஞ்சது. ஆனா ரஹ்மான்கிட்ட எவ்வளவு கரெக்சன் வேணாலும் சொல்லலாம். அதே போல அவரிடம் சிச்சுவேசன் சொல்லி பாடல் கேட்க மாட்டேன். மொத்தக் கதையையும் கேட்டுட்டு அவரே எல்லா டியூனும் போட்டுக்கொடுப்பார். வேணும்ங்குற எடத்துல பயன்படுத்திக்குவேன். படமாக்கினபிறகும் அந்தப் பாடலை விசுவலுக்கு ஏற்ப மெருகேற்றிக்கொடுப்பார்’ என்கிறார். திருடா திருடா படத்தின் மூடுக்கு ராசாத்தி பாட்டு சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஆனாலும் பாட்டு பிடித்ததால் அதற்காக படத்தில் சேர்த்திருந்தார் மணி.

ஏன் உண்மைக் கதை?

நாயகன்
நாயகன்

நாயகன் வரதராஜ முதலியாரின் கதை, குரு அம்பானியின் கதை, இருவர் கலைஞர்-எம்.ஜி.ஆர் கதை, ராவணன் ராமாயணக் கதை, தளபதி மகாபாரதக் கதை, ரோஜா சத்தியவான் சாவித்ரி கதை, இப்போது பொன்னியின் செல்வன்.  இது போக கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், உயிரே, காற்று வெளியிடை படங்கள் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதைகள் என்று எல்லாருக்கும் தெரிந்த கதைகளை வைத்து படமாக்குவது மணிரத்னத்தின் ஸ்டைல். நாயகன் படம் உருவான விதம்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் மணிரத்னத்திடம் ஒரு இந்திப் படத்தின் சிடியைக் கொடுத்து கமல் இதை உங்களை ரீமேக் செய்யச் சொல்வதாகச் சொன்னார். ஆனால், தனக்கு ரீமேக் வராது என்று மறுத்துவிடுகிறார். கமலிடமே இதை நேரில் போய்ச் சொன்னார் மணிரத்னம். வேறு என்ன மாதிரியான படம் பண்ணலாம் என்று கமல் கேட்க, வரதராஜ முதலியார் கதையைப் பண்ணலாமா என்று கேட்ட நொடியே கமலும் ஓகே சொல்லிவிட்டார். நாயகனுக்கு முன் மணிரத்னம் எடுத்த படம் மௌனராகம். மௌனராகம் படத்தின் கதையை ஓகே செய்ய எனக்கு 10 வருடங்கள் ஆனது. ஆனால், நாயகன் 10 நிமிடத்தில் ஓகே ஆனது என்கிறார். எல்லாருக்கும் தெரிந்த கதைகளை சொல்வது ரொம்பவே ஈசியாக இருந்திருக்கிறது. ஆனால் அதையும் புதுமையாகச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார் மணிரத்னம்.

Also Read – சிவாஜி, தர்பார் படங்கள் உருவாகக் காரணம் லிங்குசாமி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top