ரமணா படத்தை பிளாக்பஸ்டராக்கிய 4 காரணங்கள்!

ஏ.ஆர்.முருகதாஸோட இயக்கத்துல அவரோட இரண்டாவது படமா, கேப்டன் விஜயகாந்த் நடிப்புல 2002 தீபாவளிக்கு வெளியான படம்தான் ரமணா. அந்த வருச தீபாவளிக்கு பகவதி, வில்லன், காதல் அழிவதில்லை, சொல்ல மறந்த கதை போன்ற பல படங்களோட வெளியான இந்தப் படம்தான் வசூல்ரீதியாக
மட்டுமல்லாமல் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைக் குவிச்சுது. சிம்மாசனம், வாஞ்சிநாதன், நரசிம்மா, ராஜ்ஜியம் என வரிசையாக விஜயகாந்த் தோல்விப்படங்களா தந்துக்கிட்டிருந்த நேரத்துல, தீனா படம் தந்த ஒரு இளம் இயக்குநரோட கேப்டன் கைகோர்த்திருக்கிறார் அப்படிங்கிற செய்தியே கேப்டன்
ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைச்சுது. அதுமட்டுமில்ல, அந்த டைம்ல சிங்கப்பூர், மலேசியாவுல நடிகர் சங்கம் சார்பா கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துக்கிட்டிருந்துச்சு. அந்த கலைநிகழ்ச்சிகள் நடந்த மேடையின் பேக்டிராப்ல, ரமணா பட போஸ்டர்கள் தெரியுற மாதிரி அவர்கள் செய்த புரோமோசன்
வேலைகள் படம் ரிலீஸுக்கு ரெடியாகுறதுக்கு முன்னாடியே கிராமங்கள்வரைக்கும் படத்தை பத்தி ரீச் ஆகியிருந்துச்சு. சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், அக்ஷய் குமார்னு பிற மொழி சூப்பர் ஸ்டார்களையும் வெகுவா கவர்ந்து அவங்க மொழியில ரீமேக் பண்ண வைக்கிற அளவுக்கு பெரும் வெற்றியடைஞ்ச ரமணா
படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்கு காரணமா இருந்த 4 முக்கிய காரணங்கள் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநரா இருந்தப்பவே அவரோட அப்பா இறந்துட்டாரு. இறந்துபோன தன்னோட அப்பாவுக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வாங்க முருகதாஸ் முயற்சி பண்ணப்போ அவருக்கு நடந்த அலைகழிப்புகள்தான் ரமணா படக்கதையின் தொடக்கப்புள்ளி. இப்படி அவர் தன்னோட சொந்த லைஃப் எமோஷனல்ல இருந்து எடுத்த கதையும் அதுக்கு அவர் அமைச்ச புத்திசாலித்தனமான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பில்லரா அமைஞ்சுது. படத்துல வர்ற ஹாஸ்பிட்டல் சீக்குவென்ஸ் ஒண்னு போதும் முருகதாஸ் யாருன்னு சொல்றதுக்கு.

விஜயகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்
விஜயகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ்

இது எல்லாத்தையும் விட, விஜயகாந்த்ங்கிற ஒரு மாஸ் பவரை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில ஹேண்டில் பண்ணலாம்னு இந்தப் படம் மூலமா மத்த டைரக்டர்ஸூக்கு ஒரு மினி கிளாஸே எடுத்திருப்பார் முருகதாஸ். லாங் ஜெர்கின் போட்டுக்க்கிட்டு,கையில துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக பறந்து பறந்து சுட்டுக்கிட்டிருந்த விஜயகாந்துக்கு, காட்டன் சட்டை போட்டுவிட்டு, எந்த சூழ்நிலையிலும் அதிர்ந்துகூட பேசாத, அனைவரும் ரசிக்கும்படியான விஜயகாந்தா வேறொரு பரிணாமத்தில் அவரைக் காட்டியதில் இருக்கு முருகதாஸின் பார்வை. இத்தனைக்கும் இந்தப் படத்தில் விஜயகாந்த், வெறும் 30- க்கும் குறைவான நாட்களில் 20-க்கும் குறைவான காட்சிகளில் மட்டும்தான் நடிச்சுக்கொடுத்திருக்கார். ஆனா படத்துல, அவர் இல்லாத சீன்கள்லயும் அவரைப் பத்தி எல்லோரும் பேசுற மாதிரி ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய அடர்த்தியான எழுத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமா அமைஞ்சுது.

விஜயகாந்த்

அந்த டைம்ல விஜயகாந்த்க்கு கதை சொல்லனும்னா , அவர் தரப்புல இருந்து மூணு கண்டீசன் சொல்லப்படுமாம், அதுல ஒண்ணு நெகட்டிவ் கிளைமேக்ஸ் இருக்கக்கூடாதுங்கிறது. விஜயகாந்துக்கு முருகதாஸ் கதை சொல்லனும்னு அப்ரோச் பண்ணப்போ முதல் கட்டத்துலயே அவரோட தரப்பு ஆட்கள் மூலமா இந்த மூணு கண்டீசனையும் முருகதாஸ்கிட்ட சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டு ஜெர்க் ஆன முருகதாஸ், வெளியில அதைக் காட்டிக்காம, இந்த மூணு கண்டீசனுக்கும் ஓகேன்னு பொய் சொல்லிட்டுதான் விஜயகாந்துக்கு கதை சொல்லப்போயிருக்காரு. உள்ளுக்குள்ள ஒரு பயத்தோடவே, கிளைமேக்ஸ் வரைக்கும் கேட்டுட்டு கேப்டன் நம்மள என்ன சொல்லப்போறாரோங்கிற பயத்துலயேதான் முருகதாஸ் சொல்லி
முடிச்சிருக்காரு. ஆனா மொத்த கதையையும் உன்னிப்பா கேட்டு முடிச்ச விஜயகாந்த், இந்த கதைக்கு இதுதான்பா சரியான கிளைமேக்ஸ், நான் பண்றேன்னு சொல்லியிருக்காரு. அந்த அளவுக்கு ஏ.அர்.முருகதாஸ் உருவாக்குன கதையை மிகச்சரியா உள்வாங்கிக்கிட்டு நடிச்சு கொடுத்திருப்பார் நம்ம கேப்டன்.
அதுமட்டுமல்ல இப்படியான ஒரு வெயிட்டான மேட்டரை சொல்றதுக்கு ஏத்த ஸ்கிரீன் பிரெசன்ஸ் இயல்பிலேயே அவருக்கு இருந்ததும் படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருந்துச்சு. மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தைங்கிற அவரோட மாடுலேசன்லாம் வேற யாராலயும் இவ்வளவு வீரியமா பண்ணியிருக்கமுடியுமான்னு தெரியலை.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இப்போ காமெடியா பாக்குற புள்ளி விவரம் காட்சியெல்லாம் அப்போ தியேட்டர்கள்ல சில்லறைய சிதறவிட்ட காட்சிகள். இந்தப் படத்தையொட்டி ஒரு சுவாரஸ்யமான வதந்தி ஒண்ணு அப்போ கிளம்பியிருந்துச்சு. அதுக்கு காரணம் ஒரு போஸ்டர். விஜயகாந்தோட பழைய ஃபோட்டோ ஒண்ணை லைட்டா மாடிஃபை பண்ணி ப்ளாக் வொயிட்ல போஸ்டர் ஒண்ணு ரெடி புரோமோசனுக்கு பயன்படுத்தியிருந்தாங்க. இதைப் பாத்த நம்ம ஆளுங்க, ரமணா
படத்துல விஜயகாந்த் 16 வயசு பையனா ஒரு கேரக்டர் நடிக்கிறார்னு கிளப்பிவிட, அது ரசிகர்கள் மத்தியில மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்துச்சு. ஆனா அந்த வதந்திக்கு ஓரளவு நியாயம் சேர்க்குற வகையில ப்ளாஷ்பேக் போர்சன்கள்ல மட்டும் விஜயகாந்த் தன்னோட 80ஸ் ஸ்டைலனா சைடு வாகு எடுத்து சீவியிருக்குற ஸ்டைல்ல நடிச்சிருப்பாரு. இதுதான் பின்னாடி சிவாஜி படத்துல ரஜினி தன்னோட விண்டேஜ் ஸ்டைல்ல சைடு வாகு எடுத்து நடிச்சதுக்கும் இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு.

யூகிசேது கேரக்டர்

இன்னைக்கும் கோலிவுட் சினிமா டிஸ்கசன்கள்ல, ரமணா யூகி சேது மாதிரி ஒரு கேரக்டர்னு பேசிக்கிட்டுதான் இருந்தாங்க, அந்த அளவுக்கு இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில மட்டுமில்லாம, கிரியேட்டர்ஸ் மத்தியிலயும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துனுச்சுன்னு சொல்லலாம். சாதாரணமான இடத்துல இருக்குற ஒரு அதிபுத்திசாலி கேரக்டருக்கு ஒரு சரியான ரெஃபரன்ஸா இன்னைக்கும் இந்த கேரக்டர் பேசப்பட்டுக்கிட்டிருக்கு.

யூகிசேது
யூகிசேது

விஜயகாந்துக்கு ஈக்குவலா பல இடங்கள்ல இந்த கேரக்டர் கிளாப்ஸ் வாங்கும். இத்தனைக்கும் இந்த கேரக்டர், ஊருக்கு நல்லது பண்ற ஹீரோவ பிடிச்சுக்கொடுக்குறதுக்கு நெருங்கிக்கிட்டிருக்கும், ஆனாலும் அதை ரசிக்கும்படி முருகதாஸோட எழுத்தும் யூகிசேதுவோட நடிப்பும் சேர்ந்து அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கும். ஒரு சீன்ல யூகி சேதுன்னு தெரியாம அவரோட உயர் அதிகாரிகள் கதவை திறந்து விடுற மாதிரி ஒரு ஷாட் வரும், அப்போ அடிச்சாங்க பாருங்க தியேட்டர்ல கிளாப்ஸ். செம்ம மொமண்ட் அது. இன்னொரு விஷயம் என்னன்னா இந்த ரோலுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் முதல்ல அணுகுனது மாதவனைதான். ஏனோ அவர் நடிக்க ஆர்வம் காட்டாததால அதுக்கப்புறம் யூகி சேதுவை முருகதாஸ் தேர்ந்தெடுத்தார். இப்படி யூகிசேதுக்குன்னே காத்திருந்து கிடைச்ச இந்த கேரக்டர் படத்தோட வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம்னு சொல்லலாம்.

வசனங்கள்

இப்படியொரு வெயிட்டான கதையில வெயிட்டான ஒரு ஹீரோ நடிக்கும்போது வசனங்கள் எவ்வளவு வெயிட்டா இருக்கணும். அதுக்கு எந்த விதத்துலயும் குறைவைக்காம ஏ.ஆர்.முருகதாஸின் பேனா செம்மையா வேலைபார்த்திருக்கும். “ஆளுங்கட்சிக்காரங்கமேல கைவைச்சா ஆளுங்கட்சிகாரங்க திருப்பி அடிப்பாங்க, எதிர்கட்சிக்காரங்கமேல கைவைச்சா எதிர்கட்சிக்காரங்க திருப்பி அடிப்பாங்க, ஆனா ஸ்டூடன்ஸ்மேல கைவைச்சா ஒட்டு மொத்த தமிழ்நாடே திருப்பி அடிக்கும்” “தவறுகளோட ஆரம்பம் மன்னிப்பு, தவறுகளின் முடிவு தண்டனை” “தொண்டனை தப்பா பயன்படுத்திக்கிட்ட தலைவன் இருக்கலாம். ஆனா தலைவனை தப்பா பயன்படுத்திக்கிட்ட தொண்டன் இருக்கமுடியாது”

Also Read – `மகாநடிகன்’ ரஜினியின் அடையாளம்.. முள்ளும் மலரும் ஏன் ஸ்பெஷல் – 3 காரணங்கள்!

“மரண தண்டனை தீர்ப்பு எழுதுனதும் பேனாவை உடைக்கிறதில்லையா, நான் தீர்ப்பு எழுதுன பேனா உடைஞ்சே ஆகனும்” மாதிரியான சீரியஸ் வசனங்கள் தொடங்கி, “யாருய்யா அவரு எனக்கே பார்க்கணும்போல இருக்கு” “இங்க அடிச்சா அங்க வலிக்கும்” மாதிரியான மீம் டெம்ப்ளேட் வசனங்கள்வரைக்கும் இன்னைக்கும் காரம் குறையாம இருக்கும்படி முருகதாஸ் எழுதுன ஷார்ப் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம். இன்னைக்கும் ரமணா பட பாணியில்னு நியூஸ் பேப்பர்கள்ல வர்ற அளவுக்கு தமிழர்களின் வாழ்வியல்ல கலந்துபோன ஒரு விஷயமா ரமணா படம் ஆகியிருக்கு. விஜயகாந்தோட சினிமா கரியர்ல, ரமணாதான் அவரோட கடைசி ப்ராப்பர் ப்ளாக்பஸ்டர் படம்னு சொல்லலாம். விஜயகாந்தையோ அவரோட அரசியல்
செயல்பாடுகளையோ எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு சொல்றவங்ககூட இருக்கலாம், ஆனா எனக்கு ரமணா படத்தை பிடிக்காதுன்னு சொல்றவங்க தமிழ்நாட்டுல இருக்கமுடியாது. அதுதான் இந்தப் படத்தோட மிகப்பெரிய வெற்றி.

1 thought on “ரமணா படத்தை பிளாக்பஸ்டராக்கிய 4 காரணங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top