தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் படம் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா.. அப்போ இந்த 5 படங்களும் உங்களுக்குப் பிடிக்க நிறையவே வாய்ப்பிருக்கு..
1995 கொடியன்குலம் கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கொரோனா சூழலால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான கர்ணன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் ரிவ்யூவே கிடைத்தது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசிய கர்ணன், வெற்றிகரமானவனாக வலம் வந்தான். தனுஷின் நடிப்பும் மாரி செல்வராஜின் இயக்கமும் பாராட்டைப் பெற்றன.
கர்னண் படத்துக்கு நீங்கள் ரசிகரென்றால் இந்த 5 படங்களும் உங்களுக்குப் பிடிக்கும்…
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள், ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன் தனக்கான இடத்தை அடைய எப்படி போராட்டத்தை முன்னெடுக்கிறான் என்பதைப் பேசியது. திருநெல்வேலி சட்டக்கல்லூரி மாணவன் பரியன் (கதிர்) வழியாக சமூகத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு படிநிலைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். கடந்த 2018ல் வெளியான இந்தப் படம் மாரி செல்வராஜின் முதல் படமாகும். கதிருடன், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது.
அசுரன்
எழுத்தாளர் பொன்மணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், 2019ல் வெளியானது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷுக்குப் பெற்றுக்கொடுத்த அசுரன் படமும் சாதி படிநிலைகள் பற்றி காத்திரமாகப் பேசியது. இந்தப் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமானார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அசுரன் படமும் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை
கர்ணன் படத்தில் ஈர்த்த தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்தப் படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகியலை அம்மண்ணின் மைந்தர்களின் வாழ்வியல் நிறங்களை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருந்தது. விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அம்மக்கள் வாழ்வு முறையை அதன் நிறை, குறைகளோடு சொன்ன விதம் சற்றே ஆவணப்பட சாயலைக் கொடுத்தது. 2018ல் வெளியான இந்தப் படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லெனின் பாரதி இயக்கிய இந்தப் படத்தை நீங்கள் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.
வடசென்னை
இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை, இருவரின் ரசிகர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் – ஆண்ட்ரியா காதல் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல ரீச். தனுஷ் கேரக்டர் பேசப்பட்ட அளவுக்குத் தனது கணவனின் மரணத்துக்காகப் பழிவாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியாவின் சந்திரா கேரக்டரும் வெளிச்சம் பெற்றது. சமுத்திரக்கனி, கிஷோர் குமார், ராதாரவி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.
மெட்ராஸ்
அட்டக்கத்தி படத்துக்குப் பிறகு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய இரண்டாவது படம். இதுவும் வடசென்னை மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைக் காட்டியது. கார்த்தி – கேத்தரீன் தெரா நடித்திருந்த இந்தப் படத்தில் ஒரு சுவர் முக்கியமான இடம் பிடித்திருந்தது. சுவருக்காக நடக்கும் அரசியல், அதன் சாதியரீதியிலான பின்னணி என போல்டாகப் பேசியிருந்தது மெட்ராஸின் கதைக்களம். கிராமப்புற சாதிய அரசியலை எத்தனையோ படங்கள் பேசியிருந்த நிலையில், நகர்ப்புற தலித் அரசியலைப் பேசியது மெட்ராஸ். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நீங்கள் பார்க்க முடியும்.
இந்த லிஸ்ட்ல வேறெந்த படத்தை சேர்க்கலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே…
Also Read – சினிமாவின் எந்த ஜானர் உங்களுக்கு செட்டாகும்… கண்டுபிடிக்கலாம் வாங்க!
0 Comments