நாடோடிகள்

‘சசி, பரணி ரோலின் முதல் சாய்ஸ் இவர்கள்தான்’  – நாடோடிகளின் சுவரஸ்ய கதை இது!

2009- ம் வருடம் ஒரு மேஜிக் நடந்தது. வெறும் 15 பேர் மட்டும் முக்கிய கதாபாத்திரங்கள். அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்த முடியும். அதையும் விறுவிறுப்பு குறையாமல் எடுக்க முடியும் என்று நிரூபித்த படம்தான் நாடோடிகள்.
கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்  தலையில் மிளகாய் அரைக்கும் வெத்துவேட்டு மாஸ் ஹீரோக்கள் தேவையில்லை. கதை, திரைக்கதைதான் நிஜ ஹீரோ. அதைக் கொடுக்கவேண்டிய விதத்தில் கலந்துகொடுத்தால், எந்தப் படத்தையும் ரசிகர்களின் ஆதரவோடும், பெரும் வசூலோடும் ஜெயிக்க வைக்கலாம் என்று சுப்ரமணியத்துக்குப் பின்னர் மீண்டும் நிரூபித்துக்  காட்டியது சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி. நாடோடிகள் படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

ஒன்லைன் கதை!

‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ இதுதான் படத்தின் ஒன்லைன். நண்பனின்  காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் போராடும் நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளையும், அந்தக் காதலர்கள் நன்றி மறந்து நண்பர்களுக்கு துரோகம் செய்தால் நண்பர்களின் எதிர்வினை என்ன என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருந்தது, நாடோடிகள் சினிமா. நட்பை ஏக உயரத்தில் ஏற்றி வைத்திருந்த இந்தப்படம், மலிந்து கிடக்கும் போலி  காதல்களையும் தோலுரித்துக் காட்டியத.

7 வருஷமாக காத்திருந்த கதை!

இயக்குநர் சமுத்திரக்கனி 2003-ம் வருடம் நாடோடிகள் கதையை தயார் செய்துவிட்டார். பல தயாரிப்பாளர்களைச் சந்தித்து கதை சொல்கிறார். ஆனால், யாருமே படத்தை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் அந்தக் கதையை கிடப்பில் போட்டு சீரியல் இயக்கம் பக்கம் திரும்பிவிட்டார். இடையில் சுப்ரமணியபுரம் படத்துக்காக கமிட்டான சீரியல்களை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டார். சுப்ரமணியபுரம் படம் முடிந்து அடுத்தது என்னவென யோசித்தவர் நாடோடிகள் கதையை தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் தேடும் படலத்தை தொடர்ந்தார். சரியான தயாரிப்பாளர் அமையாத விரக்தியில் சுப்ரமணியபுரம் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலையில் இருந்த இயக்குநர் சசிக்குமாரை சந்தித்தார். “நான் சுப்ரணியபுரம் படம் எடுத்துருக்கேன். என் மேல நம்பிக்கை இருக்குல்ல. அப்புடின்னா சொல்லுங்க, நானே தயாரிக்கிறேன்” என சசிக்குமார் கேட்க. இரண்டேகால் மணிநேர கதையாக சமுத்திரகனி சொல்லி முடிக்க, சசிக்குமார் ‘படம் பண்ணலாம்’ என்றார்.

தயாரிப்பாளர் நடிகரான தருணம்!

“இதுல இருக்குறதை அப்படியே எடுத்தா படத்தை தயாரிக்கிறேன். பின்னாடி ஜெய் இருக்கார் அவர்கிட்ட கதை சொல்லிடுங்க, ஆரம்பிச்சிடலாம்” என்று சசிக்குமார் சொல்ல, சமுத்திரகனி ஜெய்யிடம் கதையை சொல்ல, ‘சார், நான் ரெண்டு படம் கமிட் பண்ணிருக்கேன். அது முடிச்சிட்டுதான் வரணும்’ என முட்டுக்கட்டை போட, பேக் டூ பெவிலியன் வந்து சசியிடம் ‘பேசாம நீயே நடிச்சிரு சகோ’ என்று சமுத்திரகனி சசியிடம் கேட்க, ‘ஏங்க நானே இப்பதான் சுப்ரமணியபுரம் நடிச்சேன். அது இன்னும் ரிலீஸ்கூட ஆகலை. என்ன மக்கள் ஏத்துப்பாங்களானு தெரியலை’ என்று மறுக்க, ‘நீ நடிக்கணும்’ என்று சொல்லி சம்மதிக்க வைக்கிறார், சமுத்திர கனி. ‘நீ ஹீரோவா பண்ணு, வேற கம்பெனிக்கு இந்த கதையை சொல்லி ஓகே வாங்கிட்டு வர்றேன்’ என சமுத்திரகனி கிளம்புகிறார்.

கதையே கேட்காத மைக்கேல் ராயப்பன்!

சமுத்திரகனியிடம் அவரது மலேசிய நண்பர் ராஜாமணி ‘மைக்கேல் ராயப்பன்னு ஒரு தயாரிப்பாளர் இருக்கார். நல்ல படங்களை பண்ணனும்னு நினைக்கிறார். உங்ககிட்ட கதை இருந்தா சொல்ல முடியுமா” என்று கேட்க, “நாடோடிகள்னு ஒரு கதை இருக்கு. அதை சொல்றேன்” என சொல்ல, அடுத்த நாள் காலை 10 மணிக்கு வரச் சொல்லிவிட்டார் மைக்கேல் ராயப்பன். ஆனால், 9.50-க்கே சென்று கதவைத் தட்டியிருக்கிறார் சமுத்திரகனி. கதவை சமுத்திரகனி திறக்கும்போதே “படம் பண்ணலாம். ஏற்பாட்டை பண்ணுங்க’ என மைக்கேல் ராயப்பன் சொல்ல, அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ‘சார், கதையே கேட்கலையே’ எனக் கேட்க ‘சொன்ன நேரத்துக்கு என்கிட்ட முன்னாடியே வந்தது நீங்க மட்டும்தான். அந்த பர்பெக்‌ஷனுக்காகத்தான் சொல்றேன். வேலையை ஆரம்பிங்க” என்று கொடியசைக்க நாடோடிகள் டேக்ஆப் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதி பிரச்னை!

படத்தை நன்றாக கவனித்துப் பார்த்தால், கதை முதல் அரை மணிநேரத்தில் 40 கி.மீ வேகம், இரண்டாம் அரை மணிநேரம் 80 கி.மீ வேகம் என நகரும். மூன்றாவது அரை மணிநேரம் (இடைவேளைக் காட்சி வரை) கண்ட்ரோல் இல்லாத காரின் வேகத்தில் படம் பறக்கும். அதனாலோ என்னவோ, இரண்டாம் பாதி கதை மெதுவாக நகரும் ஒரு உணர்வைக் கொடுத்தது.

கேமரா & இசை!

கற்றது தமிழ், சுப்ரமணியபுரத்தில் அசத்தியிருந்த எஸ்.ஆர்.கதிர் இதில் ஒருபடி மேலே போய் தன் ஒளிப்பதிவால் பரபரப்பை பற்ற வைத்திருந்தார். கட்டி முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேசன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் காட்டியிருந்தது. இந்த படத்தின் உயிர்நாடி ‘சம்போ சிவ சம்போ’  பாடல்தான். இந்த பாடல் இல்லாமல் வெறும் பிஜிம் மட்டும் இருந்திருந்தால் விறுவிறுப்பு இருந்திருக்குமா என்றால் சந்தேகம்தான். மற்றபடி, ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’, ‘யக்கா யக்கா’ என கமர்சியல் பேக்கேஜ் கலந்தது கண்களுக்கு விருந்தாக திரையில் ஜொலித்தது. படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்றது சுந்தர் சி.பாபுவின் இசை.

எதார்த்த கேரெக்டர்கள்!

 இயக்குநர் சசிகுமார் நகைச்சுவை, எமோஷன், ஆக்சன் என கலந்து கட்டி நடித்திருந்தார். சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு இருந்தது. குறிப்பாக ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் செல்லும்போது சசிகுமாரின் முகபாவனைகள் எக்ஸ்பிரஷன்களின் உச்சம். காதலர்களை பஸ் ஏற்றிவிட்டு தனது செயினை அறுத்து வழிச்செலவுக்காக கொடுக்கும் காட்சிகள் அன்றைக்கு வைரல் மெட்டீரியலானது. அடுத்ததாக இரண்டாம் நாயகனுக்கு இணையான காட்சிகள் நடிகர் பரணிக்கு, காமெடி, செண்டிமெண்ட் என இவரும் வெளுத்து வாங்கியிருப்பார். இந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தவர், இயக்குநர் சமுத்திரகனிதான். சசிக்குமார் ‘நீங்க சுப்ரமணிய புரத்துல பெரிய வில்லனா நடிச்சீங்க. உடனே டிரான்ஸ்பர்மேஷன் வேணாம்’ எனச் சொல்ல, அதற்குப் பின்னர்தான் பரணி உள்ளே வந்தார். சமுத்திரகனியின் மேனரிசம் பரணி கேரெக்டரில் பிரதிபலித்திருக்கும். அதேபோல விஜய் வசந்த், சின்னமணி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலரும் கதைக்கு தேவையான இடத்தில் தன் நடிப்பைக் கொடுத்து தாங்கி பிடித்திருப்பார்கள்.

“நான் மெசேஜ் சொல்றேன். அதையும் சீரியஸ் மோடில்தான் சொல்வேன்” என்று சமுத்திரகனி சத்தியம் செய்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் என்றுகூட சொல்லலாம். இப்படத்தை இப்போது பார்க்கும்போது, அதற்குப் பின்னர்தான் யாரோ ஒருவர் ‘மெசேஜ்க்கு சீரியஸ் மோட் மட்டும் போதும்’ என்றுசொல்லிக் கொடுத்து மடை மாற்றியிருக்கிறாரோ என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

Also Read – மனசை லேசாக்கும் ஃபீல் குட் விளம்பரங்கள்!

1 thought on “‘சசி, பரணி ரோலின் முதல் சாய்ஸ் இவர்கள்தான்’  – நாடோடிகளின் சுவரஸ்ய கதை இது!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top