கைதி படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் எடுக்க கொல்லம் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியம் பிக்சர்ஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது?
மாநகரம்’ படம் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த வித்தியாசமான திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு பணியாற்றும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. அடுத்ததாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தை எடுத்த அவர், தனது குருநாதராகக் கருதும் கமல்ஹாசனை வைத்து
விக்ரம்’ படத்துக்கான வாய்ப்பையும் பெற்றார்.
கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் கைதி படம் ரீமேக் செய்யப்படவும் இருக்கிறது. இந்த சூழலில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கைதி படம் தன்னுடைய கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ராஜீவ் ரஞ்சன் கொல்லம் நீதிமன்றத்தில் அளித்திருக்கும் மனுவில், `நான் 2000-ம் ஆண்டில் சென்னை புழல் சிறையில் கைதியாக இருந்தேன். அப்போது என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதை ஒன்றை எழுதினேன். அதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபுவிடம் கடந்த 2017-ல் கொடுத்தேன். அவருக்குக் கதை பிடித்துப் போகவே, படமாக எடுக்கலாம் என்று கூறி எனக்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். ஆனால், நான் சொன்ன கதையின் ஒரு பகுதியை கைதி படமாக எடுத்திருக்கிறார்கள். இதனால், எனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு இப்போது வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு, தான் கைதி படத்தைப் பார்க்கவில்லை என்றும், தற்போதைய லாக்டவுன் நிலையில்தான் அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததாக ராஜீவ் ரஞ்சன் பதிலளித்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த கொல்லம் நீதிமன்றம், கைதி இரண்டாவது பாகம் எடுக்கவும் ரீமேக் செய்யவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், கைதி கதையை ஒரு நிஜ கைதியிடமிருந்து சுட்டிருக்கிறார்கள்’ போன்ற வகையில் செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தில்,
எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம், கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
Also Read – ரஜினி – விஜய், ரஜினி -அஜித், கமல் – விஜய்… நட்பும் அரசியலும்..!