2021-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ரஜினி முதல் வசந்த் ரவிவரை பலரும் தங்களது ஏரியவைல் கலக்கியிருக்க, அவர்களில் டாப் 10 பற்றி இங்கே.
ரஜினிகாந்த்
‘வயது வெறும் நம்பர்’ எனும் சொலவடைக்கு நம் கண் முன்னே இருக்கும் ஒரு உதாரணம் ரஜினிதான். 70 வயதில் அவர் ‘அண்ணாத்த.. அண்ணாத்த..’ என போட்ட ஸ்டெப்ஸ் ஆகட்டும், ‘பட்டூ..பட்ட்டூ’ என ரொமான்ஸ் கொஞ்சலாகட்டும் கல்கத்தாவுக்கே காப்பு கட்டி மாஸ் காட்டுவதாகட்டும் என என்றுமே நான்தான் தமிழ் சினிமாவின் அண்ணாத்த என மீண்டும் நிரூபித்திருந்தார் ரஜினி.
விஜய்
வழக்கமான தன்னுடைய கதாப்பாத்திர தொனிகளிலிருந்து வெளியில் வர விஜய் எடுத்த பெருமுயற்சி ‘மாஸ்டர்’ ஜேடி கதாப்பாத்திரம். குடிக்கிற.. வேலைக்கு ஒழுங்காக செல்லாத.. தவறுகளை செய்கிற.. செய்த தவறுகளிலிருந்து பாடங்களை கற்கிற என ஒரு எதார்த்த ஹீரோவாக விஜய் தன்னை ‘மாஸ்டர்’ படத்தில் முன்னுருத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
சூர்யா
கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்வேன் என சூர்யா மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் ‘ஜெய்பீம்’. ஒரு தயாரிப்பாளராக சூர்யா நினைத்திருந்தால் அந்தக் கதையில் தனக்கேற்ப எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திருக்கமுடியும் என்றபோதிலும் இயக்குநரின் முழு உரிமைகளுக்குக் கட்டுப்பட்டு அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கும் பாங்கு மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பாடம்.
தனுஷ்
ஒரு நடிகன் என்பவனுக்கு சட்டையை கழட்டி மாட்டுவதுபோல தான் ஏற்கும் பாத்திரங்களில் நுழைந்து வெளியே வரத் தெரிந்திருக்கவேண்டும். அதை எப்போதுமே சிறப்பாக செய்யும் தனுஷ் கடந்த ஆண்டிலும் வெகு சிறப்பாகவே செய்திருந்தார். ‘கர்ணன்’.’ஜெகமே தந்திரம்’, ‘கலாட்டா கல்யாணம்’ என கடந்த ஆண்டு வெளியான இந்த மூன்று படத்திலும் அந்தக் கதைக்குத் தேவையான வெவ்வேறு விதமான நடிப்பை வழங்கி அசத்தியிருப்பார் தனுஷ். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் அழுதுகொண்டே ‘பீடி இருக்கா’ எனக் கேட்பாரே.. மறக்கமுடியுமா?
சிம்பு
‘இனி அவ்ளோதான்’ என ஒட்டுமொத்த தமிழகமே கை கழுவிவிட்ட நிலையில் இருந்த சிம்பு, தனது விடாமுயற்சியாலும் இயக்குநரின் சொல் பேச்சுக் கேட்டு நடித்த ‘மாநாடு’ படம் மூலமும் வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் தனக்கான இடத்தில் வந்து சேர்ந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு பர்ஃபெக்ட் சிம்புவை திரையில் பார்த்ததும் தமிழ்நாடே கொண்டாடித் தீர்த்தது.
ஆர்யா
ஒரு படத்துக்காக இதற்கு மேல் ஒருவரால் உழைத்திட முடியாது என சக நடிகர்களே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ‘சார்பட்டா’ படத்துக்காக தன்னுடைய உழைப்பை வாரி வழங்கியிருந்தார் ஆர்யா. முறைப்படி பாக்ஸிங் நுணுக்கங்களைக் கற்று, உடம்பை ஏற்றி இறக்கி என ஆர்யாவின் உழைப்பு காலம் கடந்து பேசப்படும்.
சிவகார்த்திகேயன்
தன்னுடைய ஆஸ்தான தோஸ்துகளான சூரி, சதீஷுடன் சேர்ந்து ஒன்லைனர் காமெடிகளை செய்துவந்த சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படம் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். இறுக்கமான முகத்துடன் மகேஷ்பாபுத்தனமாக அவர் பேசி நடிக்கும் ஸ்டைல் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் நிச்சயம் புதுசு.
ஜி.வி.பிரகாஷ்
படம் முன்னே பின்னே இருந்தாலும் அந்தப் படத்திற்கான பாத்திரமாக பொருந்திப் போக இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ், ‘பேச்சுலர்’, ‘வெயில்’ என அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களிலுமே இரண்டு எக்ஸ்ட்ரீம் தரப்பு ஹீரோவாக நடித்து அந்த கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்திருந்தார் ஜி.வி. முந்தைய படங்களை ஒப்பிடும்போது ஜி.வி.பிரகாஷின் இந்த முன்னேற்றமே நிச்சயம் பாராட்டுதலுக்குரியதுதான்.
வசந்த் ரவி
‘ராக்கி’ படத்தில் வரும் ரத்தம் தெறிக்க தெறிக்க கொலைகளை செய்யும் ராக்கி எனும் கேங்க்ஸ்டர் ரோலுக்கு தோற்ற அளவிலேயே கனக்கச்சிதமாக பொருந்திப்போயிருந்தார் வசந்த் ரவி. நடிப்பில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் மெனக்கெட்டால் அவர் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம்.
ஹரீஷ் கல்யாண்
சென்ற வருடத்தின் சாக்லேட் பாய் சார்தான். ‘ஓ மணப் பெண்ணே’ படம் மூலம் சத்தமே இல்லாமல் இன்னும் பல பெண் ரசிகைகளை தன்னுடைய கணக்கில் ஏற்றிக்கொண்ட ஹரீஷ் கல்யாண், ‘கசடதபற’ படத்தின் மூலம் அடுத்த லெவல் செல்லவும் முயன்றிருப்பார். அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லையென்றாலும் முயற்சிக்கு பாராட்டுகள்.
Also Read –