கடந்த ஆண்டு பல ஃபாஸ்ட் பீட் பாடல்கள் மாஸ் ஹிட்டடித்து பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் அதிரடிக்க.. சில மெலோடி பாடல்கள் இரவு நேரங்களில் நம் ஹெட்போன்களில் கசிந்துக்கொண்டிருந்தது. அவ்வாறு கடந்த ஆண்டில் ஹிட்டடித்த டாப் 10 மெலோடிகள் பற்றி இங்கே.
‘அந்த கண்ண பாத்தாக்கா..’ (மாஸ்டர்)
யுவனின் கிறக்கமான குரலும் விஜய்யை மனதில் வைத்து விக்னேஷ் சிவன் எழுதிய வரிகளும் இந்த மெலோடி பாடலுக்கு கூடுதல் ஸ்பெஷலாக அமைந்துப்போனது. அனிருத் இசையில் உருவான ‘மாஸ்டர்’ ஆல்பத்தில் மற்ற பாடல்கள் எல்லாம் இதைவிட அதிகமாக ஹிட்டடித்திருந்தாலும் இந்தப் பாடலை ரசிப்பதற்கென்றே ஒரு தனி கூட்டம் எப்போதும் இருக்கும்.
‘என் இனிய தனிமையே’ (டெடி)
இமான் இசையில் மதன் கார்க்கி வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய இந்தப் பாடல் கடந்த ஆண்டின் சைலண்ட் ஹிட். தனிமையில் உலவும் ஒரு இளைஞனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த பாடல் திருமணம் ஆகாத பல இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக மாறிப்போனது
‘தட்டான் தட்டான்’ – கர்ணன்
சந்தோஷ் நாராயணன் இசையில் யுகபாரதி வரிகளில் படத்தின் ஹீரோ தனுஷே பாடி ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற சுகமான பாடல் இது. கூடவே பாடலின் இடையிசையில் வரும் மீனாட்சி இளையராஜாவின் குரலும் பாடலுக்கு இன்னும் இதம் சேர்த்திருக்கும்.
‘தல கோதும்’ – ஜெய்பீம்
‘ஜெய்பீம்’ படம் பார்த்த யாராக இருந்தாலும், ‘கொஞ்சம் பக்கம்தான்..பக்கம்தான்’ என வயது வித்தியாசமின்றி அனைவரையும் முணுமுணுக்கவைத்த பாடல் இது. ஷான் ரோல்டன் இசையில் இயக்குநர் ராஜூ முருகன் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த மெலோடி ஒரு மென்மையான எனர்ஜிட்டிக் பாடல்.
‘சார சாரக்காத்தே’ – அண்ணாத்த
‘அண்னாத்த’ படத்தை ஒட்டுமொத்தமாக வெறுப்பவராக இருந்தாலும்கூட, இந்த பாடலில் சித் ஸ்ரீராம் குரலில் வரும் ‘திந்தக்கு தகிட.. திந்தக்கு தகிட..’வை வெறுத்திடமுடியாது. யுகபாரதி வரிகளில் சித்ஸ்ரீராம் – ஷ்ரேயா கோஷல் கூட்டணி இணைந்து பாடிய இந்த மெலோடி நிச்சயம் ஒரு நல்ல பாடல்தான்.
‘காத்தாடு காத்தானேன்’ – ஜெயில்
கபிலனின் கவித்துவமான வரிகளில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய இந்தப் பாடல் ஒரு சுகமான மெலோடி. தனுஷூக்கு இணையாக நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தன் அழகான குரலால் பாடலுக்கு மென்மை சேர்த்திருப்பார்
‘ஸோ..பேபி’ – டாக்டர்
இந்தப் பாடலை ஒரு முழுமையான மெலோடி என சொல்லிவிட முடியாது என்றாலும் பாடலின் பெரும்பகுதியில் ஒரு மெலொடிக்கான கூறுகள் அதிகம் இருப்பதால் இந்தப் பாடலையும் இந்த லிஸ்டில் சேர்ப்பதில் தவறில்லை. படம் வெளிவருவதற்கு முன்பே பாடலின் வரிகள் அனைவருக்கும் மனப்பாடம் ஆகும் அளவுக்கு பெரும் ஹிட்டான ஒரு பாடல் இது. சிவகார்த்திகேயனின் ரொமாண்டிக் வரிகளுக்கு அனிருத்தின் புதுமையான இசையும் குரலும் மிகப்பெரும் பலமாக அமைந்தன.
‘யாரையும் இவ்ளோ அழகா பாக்கல’ – சுல்தான்
இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் விவேகா வரிகளில் உருவான இந்தப் பாடலின் ஸ்பெஷல் சிம்புவின் குரல். பாடலுக்குத் தேவையான அத்தனை எனர்ஜியையும் தன் குரல் மூலம் அழகாகக் கடத்தியிருப்பார் சிம்பு.
‘இதுவும் கடந்துபோகும்’ – நெற்றிக்கண்
கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் ஆடியோவாக வெளியானபோதே பலரின் கவனத்தையும் ஈர்த்தது இந்தப் பாடல். காரணம் கார்த்திக் நேத்தாவின் ஆறுதலான வரிகள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு சித் ஸ்ரீராம் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ என இருவருமே தனித்தனி வெர்சன் தந்திருப்பார்கள். இரண்டுமே அழகுதான்.
‘நேத்து’ – ஜெகமே தந்திரம்
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பொயட்டு’ தனுஷ் எழுதி பாடகர் தனுஷ் பாடிய பாடல் இது. படம் வெளியாவதற்கு முன்னே பலரின் மனதில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனாலும் பாடல் மிகப்பெரிய ஹிட்.
Also Read – கோலிவுட் 2021: தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்கள்!