விஜய் தொடங்கி சிம்புவரை தமிழ் சினிமா ஸ்டார்கள் சூப்பர் கம்பேக் கொடுத்த தருணங்களும் அதற்கு அவர்களுக்கு உதவிய படங்களும் பற்றி இங்கு பார்க்கலாம்.
தனுஷ் – பொல்லாதவன்

நடிக்க ஆரம்பித்த முதல் மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட்டடிக்க, அம்சமாக தொடங்கியது தனுஷின் கரியர். பிறகு யார் கண்பட்டதோ, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘ட்ரீம்ஸ்’,’சுள்ளான்’ என அடுத்தடுத்து ஈவு இரக்கம் பார்க்காமல் ரசிகர்களை வைத்து செய்ய ஆரம்பித்தார். அப்படிப்பட்ட தனுஷுக்கு 2006-ஆம் ஆண்டு வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம்தான் சற்றே ஆசுவாசத்தைத் தந்தது. அதற்கு அடுத்த ஆண்டே விஜய்யின் ‘அழகிய தமிழ்மகன்’, சூர்யாவின் ‘வேல்’ போன்ற படங்களுடன் மோதி ஹிட்டடித்த ‘பொல்லாதவன்’ படம்தான் இன்று நாம் பார்க்கும் தனுஷை நமக்கு அடையாளம் காட்டியது.
நயன்தாரா – பில்லா

வழக்கமான கிளாமர் டால் ஹீரோயினாக நயன்தாரா அறிமுகமாகி அடுத்த சில ஆண்டுகளிலேயே, காதல் தோல்வி, எடை அதிகரிப்பு போன்ற காரணங்களால் டல்லடிக்கத் தொடங்கிவிட்டார். இந்த சூழ்நிலையில் ஒரு சின்ன கேப் எடுத்துக்கொண்டு, உடல் எடையைக் குறைத்து, ரசிக்கும்படியான ஒரு கவர்ச்சித் தோற்றத்தில் அவர் தோன்றிய ‘பில்லா’ படம்தான் அவரை முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் கொண்டுவந்து வைத்தது.
சிம்பு – மாநாடு

சிம்பு பற்றி சொல்லவே வேண்டாம். அத்தனை திறமைகள் இருந்தும் தனக்குத் தானே சில காலம் செய்வினை வைத்துக்கொண்டவர். ‘மாநாடு’ படத்துக்கு முன்பு வசூல், விமர்சனம் என எல்லா ஏரியாவிலும் திருப்திகரமாக இருந்த படம் ‘விடிவி’தான். அதன்பிறகு, அந்தப் படம் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படம் மூலம்தான் சூப்பர் கம்பேக் கொடுத்தார் சிம்பு.
அருண் விஜய் – என்னை அறிந்தால்

விஜய், அஜித் செட் காலத்தில் ஹீரோவாக அறிமுகமான அருண் விஜய்க்கு அத்தனை திறமைகள் இருந்தும் ஏனோ சரியான பிரேக் அமையாமலேயே இருந்துவந்தது. ‘இயற்கை’, ‘பாண்டவர் பூமி’ போன்ற கிளாசிக் படங்களில் நடித்தபோதும் சரி, ‘மாஞ்சா வேலு’, ‘மலை மலை’ போன்ற பக்கா மசாலா படங்களில் நடித்தபோதும் சரி, கிளிக் ஆகாமலேயேதான் இருந்தார். அந்த சூழ்நிலையில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் தனக்கு கிடைத்த விக்டர் பாத்திரத்திற்காக முடி வளர்த்து, உடம்பை இன்னும் இரும்பாக்கி அவர் எடுத்த சிரத்தைகள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது. விளைவு இன்றைய தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகியிருக்கிறது.
சூரரைப் போற்று – சூர்யா

சிம்புவைப்போலதான் சூர்யாவும் ஆனால் என்ன ஒரேயொரு வித்தியாசம் என்றால், சூர்யா மெனக்கெட்டார்.. ஆனால் அவையெல்லாம் வெற்றியைத்தான் ஈட்டவில்லை. 2009 – 2012 காலகட்டங்களில் விஜய், அஜித்துக்கே டஃப் கொடுத்து சூர்யாதான் ஆல்மோஸ்ட் நம்பர் ஒன் என அனைவரையும் பேசவைத்தவர், அடுத்த பல ஆண்டுகளுக்கு வெற்றியின் வெளிச்சம் படாமலேயே இருந்துவந்தார். ‘சிங்கம்-2’ கமர்சியல் ஹிட்டுக்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து ஓடிடி மூலம் சூர்யா மாஸாக கம்பேக் கொடுத்தது ‘சூரரைப் போற்று’ படம் மூலம்தான். அடுத்துவந்த ‘ஜெய்பீம்’ படமும் ஓடிடியில் ஹிட்டடிக்க, இன்று ‘ஓடிடி சூப்பர்ஸ்டார்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார் சூர்யா.
அஜித் – பில்லா

அஜித்தின் கரியரில் மிக மோசமான காலகட்டம் என்றால் அது 2002- 2007 காலகட்டம்தான். அந்த காலகட்டத்தில் அவர் நடித்த, ‘ராஜா’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜி’, ‘ஜனா’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி, ‘ஆழ்வார்’ என ஒண்ணுக்கொண்ணும் சளைத்ததில்லை. அப்படியொரு இக்கட்டனா சூழ்நிலையில்தான் ரஜினியின் ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்து மாஸான ஒரு கம்பேக் கொடுத்தார் அஜித். இன்று நாம் பார்க்கும் அஜித்தின் இமேஜூக்கும் அவரது படங்களுக்கும் ஒரு தவிர்க்கமுடியாத ரெஃபரன்ஸாக இருப்பதும் ‘பில்லா’ படம்தான்.
விஜய் – துப்பாக்கி

அஜித்துக்கு எப்படி ஒரு மோசமான காலகட்டம் இருந்ததோ அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாமல், இன்னும் சொல்லப்போனால் சரியாக அஜித் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதே ஆண்டிலிருந்து விஜய்யின் இருண்டகாலம் ஆரம்பித்தது. ‘அழகிய தமிழ்மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ என அவர் கால் வைத்த எல்லா இடங்களுமே கன்னிவெடியாக இருந்தது. போதாக்குறைக்கு அந்த காலகட்டங்களில்தான் ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். அங்கெல்லாம் விஜய் ரசிகர்களை வைத்து செய்யாத ஆட்களே அப்போது இல்லை. அப்படியொரு நிலைமையில் விஜய்க்கு அமைந்த ‘காவலன்’ படம்தான் ஒரு சிறிய ஒத்தடமாக இருந்தது. அதைத்தொடர்ந்து வெளியான ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ படங்கள் எல்லாம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்காததே அப்போது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதற்கு அடுத்து வெளியான ‘துப்பாக்கி’ படம் மூலம் விட்ட இடத்திலிருந்து தன் கணக்கைத் தொடங்கினார் விஜய். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விஜய் பட ஃபார்முலாக்களுக்கு ஆதாரப்புள்ளியும் ‘துப்பாக்கி’தான்.
Also Read –
0 Comments