Kovai Sarala

கோவை சரளா-வை தமிழ் சினிமாவின் `வெற்றிடம்’ விழுங்கியது எப்படி?

கோவை சரளா… 80ஸ் கிட்ஸ்ல இருந்து 2கே கிட்ஸ் வரைக்கும் அறிமுகமே தேவைப்படாதவர். 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்து வருபவர். இப்போது ‘செம்பி’ மூலமாக நம்மைக் கலங்கடித்திருப்பவர். கோவை மொழி வழக்கு, பாடி லேங்குவேஜ் தொடங்கி குடும்ப வன்முறைக்கு எதிரான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே…’ புரட்சியின் முன்னோடியாக இருந்தது வரை அவரை பத்தி பேச நிறைய நிறைய இருக்கு. ஒரு நகைச்சுவை நடிகரா தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. ஈடு செய்ய முடியாதது. ஆனால், கரியர் வைஸும் சரி, பர்சனலாவும் சரி, அவருக்கு தமிழ் சினிமா கொடுத்த லாபங்களை விட நஷ்டங்கள்தான் அதிகம். தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடத்தால் விழுங்கப்பட்டவர். அது எப்படின்றதை லாஜிக்கா அனலைஸ் பண்றதுக்கு முன்னாடி, அவரோட சினிமா கரியரை ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு வந்துடுவோம்.

கோவையில் இயக்குநர் பாக்யராஜ் வீட்டுக்குப் பக்கத்துலதான் கோவை சரளா வீடு. ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சத்துல இருந்தே பரிச்சயமானவர். 1983… பாக்யராஜ் பீக்ல இருந்தப்ப ‘முந்தானை முடிச்சு’ படத்துல ஒரு ரோல் கொடுத்திருக்கார். அந்தப் படத்துல வர்ற ரொம்பவும் பாப்புலரான முருங்கைக்காய் சீன்லயும் கோவை சரளா வருவாங்க. அடுத்த வருஷமே ‘வைதேகிக் காத்திருந்தாள்’ல கவுண்டமணிக்கு ஜோடியா மக்களோட கவனத்தை ஈர்த்தாங்க.

Kovai Sarala
Kovai Sarala

அதன்பிறகு, திருப்புமுனையாக இருந்தது பாக்யராஜின் ‘சின்னவீடு’. அப்பதான் டீன் ஏஜை கடந்து வந்த கோவை சரளா, பாக்யராஜோட அம்மா ரோல்ல, வயசனாவங்களா நடிச்சிருப்பாங்க. சில காட்சிகளை மத்த எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி, ஆடியன்ஸ்கிட்ட அப்ளாஸ் வாங்குற அளவுக்கு அதுல செம்மயா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. அந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு கோவை சரளா ரொம்பவே தயங்கி இருக்காங்க. இருக்காத பின்ன… சினிமா முன்னணி நடிகையா எப்படியாவது வந்து புகழ்பெறணும்னு சின்ன வயசுலயே கனவோட வந்தவங்களை, என்ட்ரி ஆன ரெண்டே வருஷத்துல அம்மா கேரக்டர் பண்ண சொன்னா எப்படி? 

“இதோ பார்… சினிமால எல்லா கேரக்டர் ரோல்லயும் தயங்காம பண்ணி, நம்ம டேலன்ட்டை வெளிப்படுத்துற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்”னு பாக்யராஜ் அப்ப சொன்ன அந்த அட்வைஸ்தான் இன்னிக்கு தமிழ் சினிமா வரலாற்றை எழுதினா, அதுல தவிர்க்க முடியாத திரைக் கலைஞரா கோவை சரளாவை கொண்டு வந்து விட்ருக்கு. இதை அவங்களே மறுக்காம சொல்வாங்க.

அப்புறம் மறுபடியும் கவுண்டமணிக்கு ஜோடியாக கம்ல்ஹாசனின் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் தன்னோட அக்மார்க் கோவை மொழி வழக்குல பேசி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்தாங்க. 

80ஸ், 90ஸ்ல கவுண்டமணி – செந்தில் – கோவை சரளா காம்பினேஷன் கொடிகட்டி பறந்துச்சுன்னே சொல்லலாம். அதோட உச்சம்தான் ‘கரகாட்டக்காரன்’. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கோவை சரளாவுக்கும் அந்தப் படத்தோட காமெடிதான் ஆல்டைம் ஃபேவரிட்.  “என்ன இங்க சத்தம்… என்ன இங்க சத்தம்”… “என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்டாக… தஞ்சாவூர் பார்ட்டியில கூப்டாக… அங்கெல்லாம் போகாம என் கெரகம்… இங்க வந்து மாட்டிக்கிட்டேன்”ன்னு அவர் பேசின டயலாக் எல்லாம் அதகளம். 

கவுண்டமணி – செந்தில் Era முடிஞ்சு, விவேக் – வடிவேலு காலக்கட்டம் வந்தப்பயும் தன்னோட இடத்துல இருந்து டவுன் ஆகாம, அடுத்தடுத்து மேல வந்தவங்க கோவை சரளா.

விவேக்குடன் ஜோடி சேர்ந்த பல படங்கள்ல இவங்களோட பெர்ஃபார்மன்ஸ் அல்டிமேட்டா வந்திருக்கும். ‘ஷாஜகான்’ல ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’னு தனக்கே உரிய மாடுலேஷன்ல கோவை சரளா சொன்னதை இன்னிக்கு வரைக்கும் நாம யூஸ் பண்றோம். ‘அலைபாயுதே’ல வர்ற ‘சினேகிதனே…’ பாட்டை நாம முணுமுணுக்க ஆரம்பிச்சா, நம்மளையே அறியாம கோவை சரளா பாடிய ‘சிநேகிதனை… சிநேகிதனை… ர்ர்ரகசிய சிநேகிதனைய்ய்ய்ய்…’னு பாடத் தோணும். இந்த மாதிரி விவேக் – கோவை சரளா காம்பினேஷனும் நிறைய நிறைய.

‘வடிவேலு’வோட, அவருக்கு நிகரா ஸ்க்ரீன்ல கோவை சரளா ஸ்கோர் பண்ண படங்களும் எக்கச்சக்கம். குறிப்பாக, வீ.சேகர் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம் என பல படங்களில் கோவை சரளா பிரித்து மேய்ந்திருப்பார். வெறும் நகைச்சுவை நடிகையாக மட்டும் அல்லாமல், தமிழகச் சூழலில் நடுத்தர, ஏழை – எளிய குடும்பங்களில் பெண்கள் படும் துயரங்களை தனது அலட்சியமான நடிப்பால் கடத்தியிருப்பார். கோவை சரளாவின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தியவரும், அதற்கேற்ப நல்ல வாய்ப்புகளையும் தந்தது வி.சேகர்தான். கோவை சரளாவின் ஆஸ்தான இயக்குநர்களில அவர் முக்கியமானவர். அதேபோல ராம.நாரயணன் படங்களிலும் கோவை சரளாவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இவர் படங்களில் கோவை சரளா பட்டையக் கிளப்பிய படம் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’. 

இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பதிவுப் பண்ணியாகணும். வி.சேகரின் ‘காலம் மாறிப் போச்சு’ படத்துல கணவர் வடிவேலுவை மனைவி கோவை சரளா அடி பின்னியெடுப்பாங்க. அதுதான் இன்னிக்கு நாம கொண்டாடுற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’க்கு எல்லாம் முன்னோடி. குடும்ப வன்முறை எதிர்கொள்வதற்கான அடியா அது விழுந்தாலும், அதையே வடிவேலு தன்னோட ஆயுதமா ஆக்கிக்கிட்டார். அங்கிருந்துதான் வடிவேலு தன்னை பிற கேரக்டர்களை அடிக்கவைத்து ஸ்கோர் பண்ற ட்ரெண்டு ஆரம்பமாச்சு.

இதுக்கு இடையிலதான் கோவை சரளாவின் மாஸ்டர் பீஸ் படமான ‘சதிலீலாவதி’ வந்துச்சு. சமீபத்துல கூட ‘செம்பி’ பத்தி கமல் பேசும்போது, ‘கோவை சரளா ஒரு நடிப்பு ராட்சசி’னு சொன்னதா தகவல். அந்த ஸ்டேட்மென்ட் ‘சதிலீலாவதி’ எக்ஸ்பீரியன்ஸால மட்டும் இல்லை. அதுக்கு முன்னாடியே கமல்ஹாசன் ரியலைஸ் பண்ண விஷயம்தான். அதனாலதான், சதிலீலாவதி படத்துல கோவை சரளாவை அவர் கொண்டு வந்ததே.

அந்தப் படத்துல கமல்ஹாசனோ ஆக்‌ஷனுக்கு மக்கள் சிரிச்சதைவிட, கோவை சரளாவின் ரியாக்‌ஷனுக்கு சிரிச்சதுதான் அதிகம். பிரேக் பிடிக்கைலைன்னு கமல் சொல்லும், ‘பிரேக்கு கூட பிடிக்கலை’ன்னு ரியாக்ட் பண்ணுவாங்க பாருங்க… அது… சான்சே இல்லை. 

Kovai Sarala
Kovai Sarala

“கோவை மொழி வழக்குன்னு முடிவு பண்ண உடனே, நாயகியை நானே முடிவு பண்ணிட்டேன். அதுல பாலு மகேந்திராவுக்கு ரொம்ப வருத்தம். கோவை சரளாவின் திறமை அப்ப பலருக்கும் தெரியாது. எனக்கு தெரியும். அவர் சதிலீலாவது படத்துக்குள் வந்தது தான் எனக்கு ஸ்ப்ரிங் போர்டு மாதிரி அமைஞ்சுது. ‘சதிலீலாவதி’ படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால், அதுல ஐம்பது சதவீதம் கோவை சரளாவுக்குக் கொடுக்கலாம்”னு கமல்ஹாசன் ஒரு பேட்டில ஓப்பனா சொல்லியிருக்காரு. இதைவிட கோவை சரளாவின் திறமைக்கு வேற என்ன சர்ட்டிஃபிகேட் வேணும்?

வடிவேலுவோட பீக் பீரியட் முடிஞ்சப்புறம் கூட, தில்லு முல்லு, காஞ்சனா சீரிஸ், அரண்மனை சீரிஸ்னு இன்னும் அதிகமாவே மக்களை மகிழ்விச்சுட்டு வர்றாங்க கோவை சரளா.

வடிவேலுவோட டயலாக் உண்மையிலேயே பொருந்திப் போறது கோவை சரளாவுக்குதான்… ஆம், கோவை சரளாவுக்கு எண்டே கிடையாது!

சரி, இப்போ நாம மெயின் மேட்டருக்கு வருவோம்.

ஆச்சி மனோரமா காமெடி டிராக்ல இருந்து விலகி, குணச்சித்திரம் பக்கம் முழுசா ஒதுங்கினப்போ, தமிழ் சினிமாவில் நகைச்சுவை பெண் நடிகருக்கு ஒரு பெரிய வெற்றிடம் டீஃபால்டாக வந்தது. 80ஸ் ஆரம்பம் தொடங்கி இன்னிக்கு வரைக்கும் அந்த வெற்றிடத்தை நிரப்பிட்டு வர்றாங்க கோவை சரளா. அது வெற்றிடத்தை நிரப்ப வேற யாரும் வரலை. யாரும் வரலைன்னு சொல்றதை விட யாருமே கோவை சரளாவுக்கு இணையா இல்லைவே இல்லைன்னுதான் சொல்லணும். அதனாலெயே தமிழ் சினிமா அந்த வெற்றிடத்தை ஃபில் பண்ணிக்க காலம் காலமா கோவை சரளாவை யூஸ் பண்ணிகிச்சு. இதனால, கோவை சரளாவின் திறமையைப் பத்தி நல்லா தெரிஞ்சும், ‘சதிலீலாவதி’ படத்துக்கு அப்புறம் கூட, அவருக்கு முக்கியத்துவம் தர்ற மாதிரியோ, ப்ரொட்டகனிஸ்டாவோ எதுவுமே அவருக்கு அமையலை.

நாகேஷ், சந்திரபாபு தொடங்கி கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு வரை தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை ஆண் நடிகர்கள் தங்களை நிரூபிச்சப்புறம் ஹீரோவாவும் நடிச்சிருக்காங்க. மனோரமாவுக்கு கூட முக்கியத்துவம் அளிக்கக் கூடிய பல கேரக்டர் ரோல் கிடைச்சுது. ஆனால், இதுவரைக்கும் கோவை சரளா மாதிரியான ஒரு திறமையான நடிகரை தமிழ் சினிமா காமெடிக்கு மட்டும் யூஸ் பண்ணிகிச்சே தவிர, ஒரு ப்ரொட்டகானிஸ்ட் ரோல் கூட தரலைன்றது எவ்ளோ பெரிய துரோகம்?!

ஆனால், கோவை சரளாவுக்கோ தமிழ் சினிமா மேல இருக்குற டெடிகேஷன் லெவல் அப்படின்றது நம்மால கற்பனை செஞ்சி கூட பார்க்க முடியாத ஒண்ணு.

ஒரு தடவை அவங்ககிட்ட சிங்கிளாவே இருக்கீங்களேன்னு கேட்டப்ப, “லவ்லாம் பண்ணியிருந்தா இந்நேரம் திருமணம் செய்திருப்பேன். காலில் விழுந்தாவது தாலி கட்டுயான்னு கேட்டிருப்பேன். சின்ன வயசுல இருந்தே சாதிக்கணும்னு வெறி மட்டும் இருந்துச்சு. குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி என்னோட பார்வை பார்வை எல்லாம் ஒரே பக்கமாக இருந்தது”ன்னு சொல்றாங்க. அந்தப் பார்வை, சினிமா மீதானது மட்டும்தான்!

இவ்ளோ நாள் காத்திருப்புக்கு சின்னதா காம்பென்ஸ்சேட் பண்ற மாதிரி இப்போ ‘செம்பி’ல வீரத்தாயி கதாபாத்திரம் கோவை சரளாவுக்கு கிடைச்சிருக்கு. படத்துக்கு மிக்ஸட் ரிவ்யூ கிடைச்சுட்டு இருந்தாலும் கூட, ஆல்மோஸ்ட் ஒரு ப்ரொட்டாகனிஸ்டா கோவை சரளா பின்னியெடுத்து இருக்காங்க. ரசிகர்களை கலங்கடிக்கிற அளவுக்கு பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்காங்க. அவங்களோட பெஸ்டுல இது முக்கியமான ஒண்ணு.

இன்னும் கூட கோவை சரளா ஆக்டிவாவும் அட்டகாசமாகவும் இருக்காங்கன்றதால, இனியாவது தமிழ் சினிமா தன்னோட குற்ற உணர்வை போக்கிக்கிற அளவுக்கு அவருக்கு இனிமேலும் நிறைய ஸ்கோப் இருக்கிற படங்களை தரவைக்கும்னு நம்புவோம். 

டெய்லி ஏதோ ஒரு டிவிலயோ, யூடியூப் வீடியோவுலயோ, ரீல்ஸ்லயோ கோவை சரளாவை கடந்துட்டுப் போறோம். அவங்களோட ஜர்னியை ஆழமா பார்க்கும்போதுதான் நமக்கே ப்ப்பா… எப்படிடா இதெல்லாம்ன்ற பிரமிப்பு வருது.

உண்மையச் சொல்லணும்னா, இந்த வீடியோ ஸ்டோரி பண்ணதுக்கு காரணமா இருந்ததே புகழ்பெற்ற தென்னிந்திய நடிகையான ஜெயசுதா சொன்ன ஒரு ஸ்டேட்மென்ட்தான். 

“நடிகை கங்கனா ரனாவத்துக்கு சில வருடங்களுக்கு முன்னாடி பத்மஸ்ரீ விருது கொடுத்தாங்க. அவர் சிறந்த நடிகைதான். அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, அவர் வெறும் 10 படங்களில் நடித்த நிலையிலேயே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கு. ஆனால், தென்னிந்தியாவில் எக்கச்சக்க படங்களில் நடித்த பலரும் மத்திய அரசால் அங்கீகரிக்கபடவே இல்லை. 44 படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என என்று கின்னஸில் இடம்பிடித்திருக்கும் நடிகை விஜய நிர்மலாவுக்கு கூட இந்த மாதிரி முக்கியமான அங்கீகாரம் கிடைக்கலை”னு வருத்தத்தொட சொன்னாங்க.

அவர் அப்படி சொன்னப்புறம், அந்த மாதிரி பல வருஷமா ஃபீல்டுல திறமைகளைக் கொட்டியும் தேச அளவுல உரிய அங்கீகாரம் கிடைக்கத் தகுதி இருந்தும், அது கிடைக்காத யாராவது பெண் கலைஞர்கள் இருக்காங்கலானு தமிழ் சினிமால தேடினப்போ, நம் கண்முன்னே வந்த முதல் கலைஞர்…

கோவை சரளா!

2 thoughts on “கோவை சரளா-வை தமிழ் சினிமாவின் `வெற்றிடம்’ விழுங்கியது எப்படி?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top