வருமான வரிக்கு வட்டி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். என்ன நடந்தது?
சூர்யா வழக்கின் பின்னணி
நடிகர் சூர்யா 2007-08, 2008-09 ஆண்டுகளுக்கு வருமான வரியாக ரூ.3.11 கோடி செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், வட்டி கணக்கீடு மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் மேற்கொள்ளப்பட்டது என்று கூறி வருமான வரிக்கு வட்டி வசூலிக்க மட்டும் தடை கோரி நீதிமன்றத்தை அணுகினார் நடிகர் சூர்யா. 2018-ல் நடிகர் சூர்யா தொடர்ந்திருந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவு என்ன சொல்கிறது?
விசாரணையின்போது வருமான வரித் துறை சார்பில், வரி மதிப்பீடு செய்ய நடிகர் சூர்யா தரப்பு ஒத்துழைக்காததாலேயே கணக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக வாதிடப்பட்டது. இதனால், வரிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரும் உரிமை நடிகர் சூர்யா தரப்புக்கு இல்லை என்று வருமான வரித்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கு முன்பாக காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் இதே நீதிபதி தலைமையிலான அமர்வுதான் விசாரித்தது. நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதேபோல், தனுஷ் தரப்பில் 50% வரி செலுத்திய நிலையில், மீதமுள்ள வரியையும் செலுத்துவதாகக் கூறி வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது. அப்போதும் கறாராகக் கருத்துத் தெரிவித்திருந்தது நீதிமன்றம்.
சூர்யா தரப்பு மேல்முறையீடு
இந்தநிலையில், வருமான வரி செலுத்திவிட்டதாகவும் வரிக்கு வட்டி வசூலிக்கத் தடை கோரியே வழக்குத் தொடரப்பட்டதாகவும் நடிகர் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும், இந்த வழக்கில் வெற்றியடைந்தால் ரூ.56,00,000 திரும்பக் கிடைக்கும் என்றும் சூர்யா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
Also Read – கொரோனா முன்னெச்சரிக்கைக்காக அஜித் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?