karnan

கர்ணன் பேசும் அரசியல் – வெளியானபின் எதிர்கொண்ட சர்ச்சைகள் என்ன?

கர்ணன் படத்தில் தலை சார்ந்த காட்சிகளை ஆங்காங்கே குறியீடாக வைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜ் – தனுஷ் காம்போவில் வெளியான திரைப்படம் கர்ணன். தன்னை ஒரு சிறந்த இயக்குநராக பரியேறும் பெருமாள் படத்திலேயே நிரூபித்துவிட்டார் மாரி. இவரது அடுத்த படத்தில் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு சினிமா ரசிகனுக்குமே இருந்தது. அந்த வகையில் கர்ணன் பேசிய அரசியலும் அது வெளியான பின் எதிர்கொண்ட சர்ச்சைகளைப் பற்றி பார்க்கலாம்.

கர்ணன் பேசிய அரசியல்

கர்ணனின் கதை 90-களில் நடப்பது. அந்த சமயங்களில் சாதியை வைத்து அரங்கேறிய வன்கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தளவிற்கு நடப்பது, பறப்பது, ஊர்வது என எல்லாவற்றையும் வைத்து சாதி அரசியலும், கலவரங்களும் வெடித்த காலகட்டம். எப்பேற்பட்ட சாதிக் கலவரத்தின் காரணத்தை எடுத்துப் பார்த்தால் இதெல்லாம் ஒரு பிரச்னையா என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை. பேருந்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அமர வேண்டும், உயர் சாதியைச் சேர்ந்த பகுதி மக்களுக்குத்தான் ஊரில் பஸ்ஸ்டாப் அமைக்கப்படும், ஆதிக்கசாதியினரை தலித் சமூகத்தினர் தலை நிமிர்ந்து பார்க்கக்கூடாது, ஆதிக்க சாதியினர்தான் அந்த ஊரின் தலைவராக இருக்க வேண்டும் போன்ற பிற்போக்குதனமான பல சம்பவங்கள் நடந்தது 90-களின் சமயத்தில்தான். இப்படி தென்தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலைகளும் கலவரங்களும் வெடித்துள்ளது. இதை முக்கியக் காரணமாக வைத்துதான் 90-களில் நடக்கும் கதையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கொடியன்குளத்தில் பகுதியில் ஏற்பட்ட சாதிய வன்கொடுமையைப் பற்றித்தான் இதில் பேசியிருப்பார் மாரி.

கர்ணன் – தனுஷ்
  • தனுஷின் இன்ட்ரோவே அவரது தலை கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதேபோல் தலை துண்டிக்கப்பட்டிருக்கும் சிலையைத்தான் சாமியாக வழிபட்டிருக்கொண்டிருப்பார்கள், இறுதியில் க்ளைமாக்ஸ் காட்சிகூட தலை துண்டிக்கப்படுவதில்தான் முடியும். இப்படி தலை சார்ந்த காட்சிகளை ஆங்காங்கே குறியீடாக வைத்திருப்பார் மாரி.
  • படத்தின் வசனங்கள்கூட அவ்வளவு தெளிவு. இன்னும் எத்தன காலத்துக்குத்தான் தலை குனிஞ்சே வாழ்றது. நாங்க தலை நிமிர்ந்துட்டோம். இனிமேல் எங்களோட தலை குனியாது',எங்களோட பிரச்னை என்னன்னே கேட்கமாட்ட… ஆனா உங்களுக்கு எதிர்ல நாங்க தலை குனியாம நிமிர்ந்து போறதுதான் உங்களுக்கு பிரச்னையா இருக்கு?’, `மாடசாமியோட புள்ளைக்கு கர்ணன்னு பேரு வெச்சா உனக்கு என்னயா பிரச்னை’ போன்ற வசனங்களில் அவ்வளவு அர்த்தமும் ஆதங்கமும் அடங்கியிருக்கிறது.
  • பரியேறும் பெருமாள் படத்தில் ஆரம்பத்தில் இருந்து அமைதிகாத்துக்கொண்டிருந்த தலித் இளைஞன், இறுதியில் எழுச்சிகொள்கிறான். இறுதியில் ஒரு ப்ளாக் காபி குடித்துக்கொண்டே `உங்களுக்கு இதுதான் சார் பிரச்னை’ என பக்குவமாய் எடுத்துச் சொல்கிறான். ஆனால், கர்ணனை அப்படி செதுக்கவில்லை. தனது உரிமை இழக்கப்படும்போது கை ஓங்குகிறான், வாள் தூக்குகிறான்.
கர்ணன் – மாரி செல்வராஜ் – தனுஷ்

சர்ச்சை

இந்தப் படத்தின் கதை நகர்வு 97-களில் நடப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கும். அப்போது முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. ஆனால் கொடியன்குளம் சாதி கலவரம் நடந்தது 95-ல். அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. `வரலாற்றை மாற்றியமைத்து படமாக எடுக்கப்பட்டிருக்கிறது, எங்களது ஆட்சியை இழிவுபடுத்துவதுபோல் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது’ என தி.மு.கவைச் சேர்ந்த பலரும் மாரி செல்வராஜை விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர். அப்படி கருணாநிதியின் ஆட்சி காலத்தை விமர்சிப்பது இப்படத்தின் நோக்கமல்ல என்பது இப்படத்தின் ரசிகர்கள் வைக்கும் வாதம். படம் பார்த்த உதயநிதி ஸ்டாலினும் கர்ணனை ஒரு பக்கம் பாராட்டினார். மேற்குறிய வரலாற்று பிழையை சுட்டிக்காட்டி அதை நீக்க சொல்லியிருக்கிறார். படக்குழுவும் இதை ஏற்று 90-களின் பிற்பகுதியிலிருந்து என மாற்றிவிட்டனர். ரெண்டுமே ஒன்றுதான் என்ற எண்ணம் வராமல் இல்லை. அதன் பின்னர் மறுபடியும் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

யாருடைய ஆட்சி காலத்திலும் சாதிக் கலவரங்கள் நடக்காமல் இல்லை. குறிப்பிட்ட ஒரு ஆட்சியை அவமதிப்பு செய்யும் நோக்கமும் மாரி செல்வராஜுக்கு இல்லை என்கிறார்கள் படக்குழுவினர். கொடியன்குளத்தில் நடந்த இந்த சாதிக் கலவரத்தை வைத்து போலீஸார் அந்தக் கிராமத்தையே சூறையாடினர். பலர் படுகாயமடைந்தனர், சிலர் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் ஒரு பேருந்தும் அதன் பெயரும். கட்டபொம்மனின் படைத் தளபதியான சுந்தரலிங்கனாரின் பெயர் அரசு பேருந்துக்கு சூட்டப்பட்டது. சுந்தரலிங்கரானார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவரது பெயர்கொண்ட இந்தப் பேருந்தில் நாங்கள் ஏறமாட்டோம், பேருந்தின் பெயரை மாற்ற வேண்டும் என ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்தனர். இதனால் இருதரப்பு மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. பல மாத காலம் இந்தக் கலவரமானது நடைபெற்றது. பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த போக்குவரத்துக் கழகங்களின் பெயரையும் மாற்றிவிட்டார்.

ஆக, படம் பேசிய அரசியலும், வெளியான பின் நடந்த சர்ச்சைகளும் இதுதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top