பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது படம் சாதிய படிநிலைகளை அறுத்து எரிவது குறித்து வெளிப்படையாகப் பேசி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வேதம் புதிது

தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி திருப்பியதில் முக்கியமான பங்காற்றியவர் இயக்குநர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில், 16 வயதினிலே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன்பின்னர், கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம் என வெரைட்டி விருந்து படைத்த பாரதிராஜா இயக்கி 1987 டிசம்பர் 27-ம் தேதி வெளியான படம் வேதம் புதிது’. இந்தப் படத்தில் பாலுத் தேவராக சத்யராஜ் கலக்கியிருப்பார். இதுவரை அவர் ஏற்றிருந்த கேரக்டர்களில் முதல் ஐந்து சிறந்த கேரக்டர்களுள் நிச்சயம்பாலுத் தேவரு’-க்கு ஒரு இடம் இருக்கும் எனலாம்.
Also Read:
சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கும் சாதிய படிநிலைகளை சாடி, அவை சமூகத்தைப் பிரிக்கவே பயன்படும் என்று பொட்டில் அடித்தாற்போல் நேரடியாகப் பேசிய படம். சாதி பற்றி பேசியதால், படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்தே வெளியானது. சாதியப் படிநிலைகளுக்குள் ஊறிக் கிடக்கும் கிராமத்துப் பெரியவர் பாலு, தனது கிராமத்தில் இருக்கும் சாதியப் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். நாடக ஆசிரியர் கண்ணன் எழுதிய ஜாதிகள் இல்லையடி பாப்பா’ நாடகத்தைத் தழுவி பாரதிராஜா இந்தப் படத்தை எடுத்திருந்தார். படத்துக்கான வசனங்களையும் கண்ணனே எழுதியிருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.பாலுங்கிறது உங்க பேரு.. தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா…’, `பல்லக்குத் தூங்குறவங்களுக்குக் கால் வலிக்காதா..’ உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெற்றன.
எம்.ஜி.ஆரின் அக்கறை

படத்தின் ஷூட்டிங் முடிந்து வெளியாகத் தயாராக இருந்த நேரம் அது. படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைக் குழுவினர், படத்தில் எந்த கட்டும் சொல்லவில்லையாம். ஆனால், படத்தையே வெளியிட முடியாது என்று கை விரித்திருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குநர் பாரதிராஜாவும் படக்குழுவும் திகைத்து நின்றிருந்த நேரத்தில், அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்திருக்கிறது. பாரதிராஜாவிடம், உங்களுடைய படத்துக்கு ஏதோ பிரச்னையாமே’ என்று அக்கறையாக விசாரித்திருக்கிறார். அத்தோடுஉங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உரிமையோடு சொல்லியிருக்கிறார்.
ஏ.வி.எம் தியேட்டரில் சத்யராஜைத் தனது அருகில் அமரவைத்துக் கொண்டு படம் முழுவதையும் பார்த்த எம்.ஜி.ஆர், படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அத்தோடு, காபி, டீ, பலகாரம் என தனது வீட்டில் இருந்து அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தாராம் எம்.ஜி.ஆர். படம் முடிந்ததும், சத்யராஜின் கையை முத்தமிட்டு பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அத்தோடு பாரதிராஜாவிடம், `ரிலீஸ் தேதியை நீ அறிவித்து விடு; படம் ரிலீஸாகும்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன்பிறகு 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர் கடைசியாகப் பார்த்த திரைப்படம் என்று வேதம் புதிது கருதப்படுகிறது. அவர் மறைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 27-ல் வேதம்புதிது படம் ரிலீஸானது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது.
Also Read – VK Ramasamy: வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 `நச்’ காரணங்கள்!
0 Comments