பிரேம்ஜினு சொன்னதும், `என்ன கொடும சார் இது’னு அவர் பேசின வசனம்தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதில் சிலர் அந்த வசனத்தை வெச்சே அவரை கலாய்க்கவும் செய்வீங்க. அவரை கலாய்க்கிறதுக்கு முன்னாடி அவர் வெறும் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவில் என்னென்ன விஷயங்கள் பண்ணியிருக்கார்னு தெரிஞ்சுக்கோங்க மக்களே.
-
1 ராப்பர்
இப்போ தமிழ் சினிமா பாடல்களில் ராப் எழுதி பாட பல ராப் பாடகர்கள் இருந்தாலும் 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிரேம்ஜி ஒருவர்தான் இருந்தார் என்கிற தகவலே உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் முதல் முதலில் நடிகர் விஜயுடன் சேர்ந்துதான் ராப் பாடியிருக்கிறார் என்றால் பல பேர் நம்பவே மாட்டீங்க. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம். `வேலை’ங்கிற படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய், நாசர், பிரேம்ஜி சேர்ந்து பாடிய பாடல்தான் காலத்துக்கேத்த கானாங்கிற பாடல். இதில்தான் முதன்முதலில் ராப் இசையை பயன்படுத்தியிருப்பார்கள். அதை பாடி துவங்கி வைத்தது பிரேம்ஜி. அதன் பிறகு 12பி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆனந்தம் என்கிற பாடலும் பிரேம்ஜி பாடினார். தமிழ் சினிமா மட்டுமில்லாது தெலுங்கிலும் பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் படங்களுக்கு ராப் பாடியிருக்கிறார். அப்படி அவர் மணி சர்மா இசையில் குடும்பா சங்கர் படத்துல பாடுன பாட்டு பின்னர் தமிழில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்ற பாடலாக ரீமேக் செய்யப்பட்ட போதும் அதில் ராப் பாடினார் பிரேம்ஜி. இன்று தமிழில் பல ராப் பாடகர்கள் உருவாக பிரேம்ஜியும் ஒரு இன்ஸ்ப்ரேஷன்ஜி.
-
2 இசையமைப்பாளர்
பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜா, அப்பா கங்கை அமரன், அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா வரிசையில் அவர்களின் குடும்பத்தில் இருந்து உருவான ஐந்தாவது இசையமைப்பாளர்தான் பிரேம்ஜி. தோழா (கார்த்தி, நாகார்ஜூனா நடிச்ச தோழா இல்ல), ஜெய் நடிச்ச அதே நேரம் அதே இடம், ஜாம்பி, ஆர்.கே.நகர், பார்ட்டி என பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். யுவனுக்கும் பிரேம்ஜிக்கும் இடையே பல வருடங்களாக ஒரு டீலிங் போயிட்டு இருக்கு. அது என்னன்னா, பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை என்றால் அந்தப் படத்திற்கு பிரேம்ஜிதான் இசையமைப்பார். அவர் நடிக்கிறார் என்றால் யுவன் இசையமைப்பார். சென்னை 28 படத்தில் இருந்து மாநாடு வரைக்கும் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பார்ட்டி படத்தில் மட்டும் பிரேம்ஜி நடிக்காததால் அதற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மன்மதலீலை என்கிற படத்திலும் பிரேம்ஜி நடிக்காததால் அதற்கும் இசையமைத்திருக்கிறார். அதே மாதிரி வெங்கட் பிரபு அவரது படத்தோட ஜானருக்கு ஏற்றமாதிரிதான் போஸ்டரில் அவரோட பெயரையும் போடுவார். உதாரணத்திற்கு மங்காத்தா படத்தில் எ வெங்கட் பிரபு கேம், கோவா படத்திற்கு எ வெங்கட் பிரபு ஹாலிடே. அதே போலத்தான் பிரேம்ஜியும் தான் இசையமைக்கிற படத்திற்கு ஏற்றமாதிரி அவரோட பெயரையும் போடுறார். ஆர்.கே. நகர் படத்துல இசை சுனாமி, ஜாம்பி படத்துல இசை காட்டேரி, பார்ட்டி படத்துல இசை டக்கீலா, மன்மதலீலை படத்துல இசை ப்ளேபாய்னு போட்டிருக்கார்.
-
3 நடிகர்
பிரேம்ஜி அவரது அண்ணனின் இயக்கத்தில் நடித்த சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களில் அவருக்கு நல்ல, நல்ல கதாபாத்திரங்களாக கொடுத்து அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால், பிரேம்ஜி அவர் அண்ணன் படத்தில் மட்டுமே நடிப்பார் என்கிற பேச்சும் உருவாகிவிட்டது. ஆனால், அவரது அண்ணன் படம் இல்லாமல் பிற இயக்குநர்கள் படத்தில் பிரேம்ஜி நல்ல, நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார். முதன்முதலில் வல்லவன் படத்தில்தான் பிரேம்ஜி என்று ஒரு கேரக்டரை உருவாக்கி நடிக்க வைத்தார் சிம்பு. அதேபோல், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ராஜாவும் சேட்டை படத்தில் ஆர்.கண்ணனும் பிரேம்ஜிக்கு நல்ல கேரக்டர்களை கொடுத்திருக்கிறார்கள். அதே போல் கதையின் நாயகனாகவும் பிரேம்ஜி நடித்திருக்கிறார். மாங்கா என்கிற படத்தில் ஹீரோவாகவும் சிம்பா என்கிற படத்தில் சிம்பாவாகவும் நடித்திருக்கிறார்.
0 Comments