சிற்பி இசையமைச்ச பாடல்களா இது..!?

இளையராஜா பீக்ல இருந்த சமயத்தில் ஹிட்டான எல்லா பாடல்களுக்கும் இளையராஜாதான் இசை என நினைத்தவர்கள் பலர். அப்படி எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் எல்லாம் ஹிட்டான சமயத்தில் இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்த பல பாடல்களை இன்று வரை எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவில் சிற்பி இசையமைத்த க்ளாசிக்கான பாடல்கள் என்னென்ன என்பதைத்தான் பார்க்கப்போகிறோம்.

விக்ரமன் இயக்கத்தில் ஜெயராம் நடித்த கோகுலம் படம்தான் சிற்பியை முதன்முதலாகக் கவனிக்க வைத்த படம். அதில் வந்த, `செவ்வந்தி பூவெடுத்தேன்’ பாடலை இன்றுவரைக்கும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அதன்பிறகு விக்ரமன் இயக்கத்திலேயே நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் ஏலேலங்கிளியே பாடலும் பூங்குயில் ராகமே பாடலும் பெரிதாக பேசப்பட்டது. 

தமிழ் சினிமாவின் ஒன் ஆஃப் தி ட்ரெண்ட் செட்டரான நாட்டமை படத்திற்கும் சிற்பிதான் இசை. அதில் வந்த கொட்ட பாக்கும் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது. விக்ரமன் – சிற்பி கூட்டணி போல், சுந்தர்.சி – சிற்பி கூட்டணியும் மிக முக்கியமானது என்றே சொல்லலாம். உள்ளத்தை அள்ளித்தா படத்தின் அழகிய லைலா பாடலை இப்போ வரைக்கும் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதேப்போல் மேட்டுக்குடி படத்தின் அடி யாராது, வெல்வட்டா வெல்வட்டா, அன்புள்ள மன்னவனே என அந்த ஆல்பம் முழுக்கவே ஹிட்.

ராமராஜன் நடித்த அம்மன் கோயில் வாசலிலே படத்தின் அம்மன் கோயில் வாசலிலே என்கிற பாடல் ஒலிக்காமல் இன்றுவரைக்கும் எந்த அம்மன் கோயில் விழாக்களும் முடிவுக்கு வராது. லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தரபுருஷன் படத்தின் மருத அழகரோ பாடல் இன்றும் கிராமப்புறங்களில் ஒலிக்கும். நந்தினி படத்தில் மானூத்து ஓடையில என்கிற பாடலை மணிவண்ணனைப் பாட வைத்திருப்பார்.

பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தின் காதலின் ஃபார்முலா, கங்கா கெளரி படத்தில் காதல் சொல்ல வந்தேன், தேடினேன் வந்தது படத்தில் ஆப்ஸ் மலைக்காற்று, ஜானகிராமன் படத்தில் பொட்டு மேல பொட்டு வச்சு, பூச்சுடவா படத்தில் காதல் காதல் காதல் – நீ இல்லை, கண்ணன் வருவான் படத்தில் காற்றுக்கு பூக்கள் சொந்தம் – வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் உனக்கென உனக்கென, குங்குமப்பொட்டு கவுண்டர் படத்தில் பூவும் காற்றும், வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் – எங்கே அந்த வெண்ணிலா, கோடம்பாக்கம் படத்தின் ரகசியமானது காதல் என தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்திருக்கிறார் சிற்பி.

மூவேந்தர் படத்தில் குமுதம் போல் பாடலில் எல்லா தமிழ் பத்திரிகைகளின் பெயர்களும் வருவதைப் போல் எழுதியிருப்பார்கள். இதே படத்தில் நான் வானவில்லையே பார்த்தேன் பாடலும் ஹிட். மூன்றாவது முறையாக சிற்பி, விக்ரமுடன் இணைந்த படம்தான் சூர்யா நடித்த உன்னை நினைத்து. இந்தப் படத்தில் என்னை தாலாட்டும் சங்கீதம், சில் சில் சில் சில்லல்லா, யார் அந்த தேவதை, பொம்பளைங்க காதலைத்தான் என அந்த ஆல்பம் முழுக்கவே ஹிட்டாக கொடுத்த சிற்பி, அந்த ஆண்டிற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்றார்.

இந்த வீடியோ பார்த்ததற்குப் பிறகு, ‘இந்தப் பாட்டு சிற்பிதான் இசையமைச்சிருக்காரா’னு நீங்க வியந்த பாடல்கள் இருந்தால் அதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க; சிற்பி பாடல்களில் உங்களுக்கு எது ஃபேவரைட் என்பதையும் கமெண்ட் பண்ணுங்க.

Also Read – பேரன்பின் ஆதி ஊற்று… மிஸ் யூ நா.முத்துக்குமார்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top