prasanth

`அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் என்னதான் பிரச்னை?!

பிரசாந்தின் அப்பா தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையோடு ஆரம்பித்திருக்கிறது…

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்த `அந்தாதுன்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கிய நடிகர் பிரசாந்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன், அதனை இயக்குவதற்காக முதலில் அணுகியது கெளதம் மேனனைத்தான். ஆனால், அவருக்கு ஏற்கெனவே சில கமிட்மெண்ட்ஸ் இருந்தால் இயக்குநர் மோகன் ராஜாவிடம் கேட்டிருக்கிறார்.


மோகன் ராஜா பல ரீமேக் படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருந்தாலும், தனி ஒருவன்’ படத்த்துக்குப் பிறகு தான் எழுதிய கதைகளை மட்டுமே படமாக்கும் முயற்சியில் இருந்திருக்கிறார். அப்படி இருந்தவர் பல நிபந்தனைகளைச் சொல்லி இந்தப் படத்தில் கமிட்டானார். ஆனால், தெலுங்கில் சீரஞ்சீவியை வைத்து `லுசிஃபர்’ படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு அவருக்கு வந்ததால், இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.


அதன் பின்னர், பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநர் ஃபெட்ரிக்கை இந்தப் படத்துக்காக கமிட் செய்தார்கள். அவரும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வில் தீவிரமாக இருந்து சிம்ரன், நவரச நாயகன்’ கார்த்திக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என பலரை கமிட் செய்தார். பொன்மகள் வந்தாள் படத்தை முடித்தப்பிறகு `2டி’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகாவை வைத்து தனது அடுத்தபடத்தை ஏற்கெனவே கமிட் செய்திருந்த ஃபெட்ரிக், இந்தப் படம் தொடங்கத் தாமதமானதால் இதில் இருந்து விலகிக்கொண்டார்.


90’ஸில் டாப் ஸ்டாராக இருந்த பிரசாந்த் சமீபகாலமாக நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகாததாலும் `அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தை பெரிதும் நம்பியிருப்பதாலும், கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டு, தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இதுதான் இந்த தாமதத்துக்குக் காரணம் என்கிறார்கள். தற்போது, பிரசாந்தின் அப்பா தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியிருக்கிறது. இந்த வருடத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top