2011 மே மாதத்தை எந்த ஒரு ரஜினி ரசிகனாலயும் மறக்க முடியாது. ஜெயிலர் படத்தை ரஜினியோட சினிமா கம்பேக்னு சொல்ற 2K கிட்ஸ்க்கு ரஜினி ரியல் லைஃப் கம்பேக்கா மறுபிறவி எடுத்துவந்த அந்த சம்பவத்தைத் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல. ரஜினி நாள்கணக்குல ஐ.சி.யூல இருக்காரு,ட்ரீட்மெண்டுக்காக சிங்கப்பூர் போறாருனு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வந்து ஒவ்வொரு ரஜினி ரசிகனையும் தூங்க விடாம செஞ்ச நாட்கள் அது. 2011-ல ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் போன டைம்ல என்னெல்லாம் நடந்ததுங்குறதைத்தான் இந்த வீடியோல ரீவைண்ட் பண்ணப்போறோம்.
ஏப்ரல் 2011-ல தோனி கேப்டன்சில இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்குது. மும்பைல நடந்த அந்த மேட்ச்சை ரஜினியும் நேர்ல போய் பார்த்தாரு. அங்க இருந்துதான் பிரச்னை ஆரம்பிச்சதா அப்போ வந்த புலனாய்வு மேகசீன்கள் சொல்லுது. அங்க நான் வெஜ் சாப்பிட்டதுதான் அவருக்கு முதல்ல ஃபுட் பாய்சன் வர்றதுக்குக் காரணம்னு சொன்னாங்க. அடிக்கடி அவருக்கு கை, கால்கள்ல வீக்கம், வயிற்றுவலினு கொஞ்சம் கொஞ்சமா உடல்நிலை ஒத்துழைக்காம போகுது. எந்திரன் படம் உலகலெவல்ல ஹிட் ஆகியிருந்த டைம் அது. அடுத்ததா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல ராணா படம் அறிவிக்கப்படுது. தீபிகா படுகோன் ஹீரோயின். ஏப்ரல் 29-ம் தேதி ராணா படத்தோட பூஜை நடக்குது. அந்த நிகழ்ச்சிலயே ரஜினி ரொம்ப டல்லாதான் இருக்காரு. வழக்கமான உற்சாகம் அவர்கிட்ட இல்லை. சீக்கிரமே வீட்டுக்கு வந்தவரு அப்படியே மயங்கி விழ அவசர அவசரமா மயிலாப்பூர்ல இருக்குற இசபெல்லா ஹாஸ்பிடல்ல சேர்க்குறாங்க. அப்போ முதல்வரா இருந்த கலைஞர் கருணாநிதி நேர்லயே போய் பார்க்குறாரு. அவருக்கு ஒண்ணுமில்ல ஃபுட் பாய்சன்தான், பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லப்படுது. ஆனா படத்தோட பூஜை அன்னைக்கு ஹாஸ்பிடல்ல படுத்துட்டா செண்டிமெண்டா நல்லாருக்குதுனு அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகிடுறாரு ரஜினி. அப்போ ரஜினிக்கு 61 வயசு. அதனால வழக்கமா வர்ற பிரச்னைதான்னு ரஜினி ரசிகர்கள் சமாதானம் ஆனாங்க.
சில நாட்கள்லயே திரும்ப வாந்தி, காய்ச்சல்னு மறுபடியும் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுறாரு. இந்த முறை ஐ.சி.யூல அட்மிட் ஆகுறாருனு தெரிஞ்சதும் தமிழ்நாடே பரபரப்பாகுது. அங்க இருந்தும் சில நாட்கள்ல திரும்புனவரு மே 14-ம் தேதி மூணாவது முறையா ராமச்சந்திரா மருத்துவமனைல அனுமதிக்கப்பட்டாருனு செய்தி வந்தப்போதான் தலைவருக்கு ரொம்ப சீரியஸ் போல மொத்த ரசிகர்களும் கலங்கிப் போறாங்க. நாளுக்கு நாள் ரஜினியோட உடல்நிலை பத்தின செய்திகளும் வதந்திகளும் அதிகமாகிட்டே போகுது. ஒரு நாள் கிட்னி ஃபெயிலியர்னு நியூஸ் வருது, அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகப்போறாங்க, லண்டன் கூட்டிப் போகப்போறாங்கனு ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. கடைசியா ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர்ல இருக்குற மவுண்ட் எலிசபெத் ஹாஸ்பிடல் போறாருனு கன்ஃபார்ம் ஆகுது. அப்போதான் ரஜினியோட ஒரு வாய்ஸ் நோட் ரிலீஸ் ஆகுது.
“ஹலோ! நான் ரஜினிகாந்த் பேசறேன்… எவ்வளவு சீக்கிரம் திரும்பி வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா… பணம் வாங்கறேன்… ஆக்ட் பண்றேன். இதுக்கே நீங்க இவ்வளவு அன்பு காட்டுறீங்கன்னா, உங்களுக்கு நான் என்ன கொடுக்கிறது? நீங்க எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் நடந்துக்கிறேன் கண்ணா… சீக்கிரமே வந்துடுறேன்”
தழுதழுக்குற குரல்ல வந்த ரஜினியோட அந்த வாய்ஸ் நோட்டை கேட்ட ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் கண்ணீர் முட்டி நின்னுச்சு. அப்போ இதோட உண்மைத் தன்மையை செக் பண்றதுக்கு இவ்ளோ இண்டர்நெட் வசதி இல்லைங்குறதால இது உண்மையா இல்லை எதுவும் மிமிக்ரி பண்றாங்களானு வேற டவுட்டு. ஆனாலும் தலைவர் வாய்ஸ் நோட் அனுப்புறாருனோ பிரச்னை எதோ பெருசுதான் போலனு ஒவ்வொரு ரஜினி ரசிகருமே ஃபீல் பண்ணாங்க.
ரஜினிக்கு சிங்கப்பூர்ல சிகிச்சை நடந்த நேரத்துல இங்க தமிழ்நாட்டுல ரசிகர்கள் காவடி எடுக்குறது, தீச்சட்டி எடுக்குறது, அலகு குத்திறதுனு தன்னோட தலைவனைக் காப்பாத்த தன்னால என்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செஞ்சிட்டு இருந்தாங்க. இயக்குநர்கள் சங்கம் சார்பா கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது. ரஜினி ரசிகரா இல்லாதவங்ககூட ரஜினி திரும்பி வரணும்னு மனசார வேண்டுனாங்க. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போறதா செய்திகள் வந்தது. ஆனா அதுக்கான தேவைகளே இல்லாம சீக்கிரமே குணமானாரு ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 45 நாட்கள் சிகிச்சை முடிச்சு பழைய ரஜினியா சிங்கம் மாதிரி சென்னை வந்து இறங்குனாரு ரஜினி. அன்னைக்கு வந்த நியூஸ்களை பார்த்தவங்களுக்கு நல்லாத் தெரியும் ஏர்போர்ட்ல ரஜினி என்ட்ரிக்கு இன்னைக்கு ஜெயிலர் FDFS-க்கு என்ன மாதிரி செலிபிரேசன் இருந்ததோ அந்தளவுக்கு இருந்தது. சந்திரமுகி ஆடியோ லாஞ்ச்ல ‘யானை விழுந்தா எந்திரிக்க லேட் ஆகும்… நான் குதிரை’ அப்படினு சொல்லிருப்பாரு. அதை உண்மையாக்குற விதமா குதிரை மாதிரி திரும்பி வந்த ரஜினியை பார்க்க அவ்ளோ ஹேப்பியா இருந்தது. ரஜினியே தனக்கு இது மறுபிறவினு சொல்ற அளவுக்கு இருந்த அந்த இரண்டு மாசம் ஒவ்வொரு ரஜினி ஃபேனுக்கும் ரொம்ப எமோசனலான காலகட்டமா இருந்தது.
சில சுவாரஸ்யத் தகவல்கள்:
- ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனைல இருந்தப்போ ஆட்சி மாற்றம் வந்து ஜெயலலிதா முதல்வராகுறாங்க. அந்த பதவியேற்பு விழாவுக்கு அப்போதைய குஜராத் முதல்வரா இருந்த மோடி ரஜினியை மருத்துவமனைல போய் சந்திக்குறாரு. “அவர் இங்க வெகேசனுக்குதான் வந்திருக்காரு. சீக்கிரமே திரும்ப பிஸியாகிடுவாரு”னு சிரிச்சுக்கிட்டே பேட்டி கொடுத்தாரு மோடி.
- தமிழிசை சௌந்தரராஜன் அவர்களோட கணவர் சௌந்தரராஜன்தான் ராமகிருஷ்ணா மருத்துவமனையில ரஜினிக்கு சிகிச்சை அளிச்சவர். தமிழிசை மகன் ஆட்டோகிராஃப் கேட்டபோது பேப்பர் எதுவும் இல்லாததால் அவருடைய கையில் ‘காட் இஸ் கிரேட்!’னு எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்.
- சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஹாஸ்பிடல் பல விவிஐபிகளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த ஹாஸ்பிடல். அமிதாப் பச்சன் ரெகமண்டேசன்லதான் அங்க போனாங்கனு சொல்றாங்க.
- ‘ராணா’ படம் பல மாறுதல்களோட திரும்ப பண்றதா இருந்தது ஆனா அதோடு டிராப் ஆனது. ஒரு ரெஸ்ட்டுக்குப் பிறகு ரஜினி நடித்த அனிமேஷன் படம்தான் ‘கோச்சடையான்’. ராணா படம் வந்திருந்தா அதுக்கப்பறம் வந்த பாகுபலிக்கு மிகப்பெரிய சவாலா இருந்திருக்கும்னு இப்போவும் சொல்வாங்க.
- ரஜினியைச் சந்திக்க சிங்கப்பூர் மருத்துவமனைக்குப் போன கமலுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம். இதை வருத்தத்துடன் ரஜினியிடம் போனில் சொல்ல ‘சென்னை வந்ததும் முதல்ல உங்களை வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னாராம் ரஜினி. நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் வந்திருந்த போது ரஜினியும் கமலும் சேர்ந்து சுத்திய இடங்களையெல்லாம் நினைத்து மகிழ்ந்தாராம் ரஜினி.
- ‘இந்த விஞ்ஞான உலகத்தில்கூட எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா… தலையான்னு தீர்மானிப்பது ஆண்டவன் வேலை!” – குணமடைந்ததும் ரஜினி தன் கைப்பட எழுதிய கடிதத்தில் சொன்ன வரிகள்.
- சிங்கப்பூர்ல ரஜினி சிகிச்சைல இருந்தப்போ அவங்களை பெர்சனல் கேர் எடுத்து பார்த்துக்கிட்டது காதல் மன்னன் படத்தோட ஹீரோயின் மானு. சிங்கப்பூர் ஹாஸ்பிடல்ல திடீர்னு இட்லி சாப்பிடணும்னு தோணினா மானுதான் ஏற்பாடு செய்து தருவாராம். அதனால்தான் சென்னை திரும்பியதும் ‘இனி மானுவோட சேர்த்து எனக்கு மூன்று மகள்கள்’னு நெகிழ்ச்சியோட நன்றி சொன்னாரு ரஜினி.