நாயகன் - கமல்

ரிலீஸுக்கு முன்பே `நாயகன்’ படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன்..!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு படங்களில் குறிப்பிடத்தக்கது `நாயகன்’.  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படம், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது எனலாம். அப்படிப்பட்ட ‘நாயகன்’ படத்தை, ரிலீஸுக்கு முன்பே பார்த்த ரஜினி என்ன செய்தார் தெரியுமா..?

நாயகன் - கமல்
நாயகன் – கமல்

1987-ஆம் ஆண்டு தீபாவளி அப்போதைய சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு தீபாவளியாகத்தான் இருக்க முடியும். கமல் நடித்த ‘நாயகன்’ படமும் ரஜினி நடித்த ‘மனிதன்’ படமும் ஒரே நாளில் வெளியான தீபாவளி அது. ‘மௌன ராகம்’ என்ற ஹிட் மூலம் தன் மீது வெளிச்சம் ஈர்த்த மணி ரத்னம், எல்லோரையும் கவர்ந்ததுபோல கமலையும் கவர்ந்தார். விளைவு, கமலே மணிரத்னத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு படம் இயக்கக் கோரிக்கை விடுத்தார். அந்தப் படம்தான் ‘நாயகன்’. ஏ.வி.எம் தயாரிப்பில் ரஜினியின் ஆஸ்தான கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமனுடன் ‘வேலைக்காரன்’ ஹிட்டுக்குப் பிறகு இணைந்து பணியாற்றிய படம் ‘மனிதன்’. ஆக, இந்த இரண்டு படங்களுமே அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே டெம்ப்டேசனைக் கூட்டிக்கொண்டேதான் வந்தது.

நாயகன் - கமல் - மணிரத்னம்
நாயகன் – கமல் – மணிரத்னம்

இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, இரண்டு படங்களும் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு தீபாவளிக்கு வெளியாவது என முடிவானது. அதற்கான அறிவிப்புகளும் வெளியானது. ரசிகர்களும் யாருக்கு வெற்றி என பார்த்துவிடலாம் என நகம் கடிக்கத் தொடங்கினர். இதற்கிடையில் ரஜினி கமலுக்குமிடையே வெளியேதான்  அனல் பறக்கும் தொழில் போட்டி என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாயிற்றே. அந்த வகையில் கமல், தனிப்பட்ட வகையில் ரஜினியை அழைத்து  ‘நாயகன்’ படத்தைப் போட்டு காண்பித்தார். படத்தைப் பார்த்த ரஜினி மிரண்டுதான் போனார். படத்தின் திரைக்கதையையும் கமலின் நடிப்பையும் ஒப்பனையும்  பார்த்து அசந்துபோனார். மேலும் இவையெல்லாம் பற்றி கமலிடம் மணிக்கணக்கில் மனம் விட்டு பேசி வாழ்த்திவிட்டு கிளம்பினார் ரஜினி.

மனிதன் - ரஜினி
மனிதன் – ரஜினி

பிரிவியூ தியேட்டரிலிருந்து கிளம்பிய ரஜினி நேராக சென்ற இடம் பஞ்சு அருணாச்சலம் வீட்டுக்கு. அங்கு போன ரஜினி.. தான் ‘நாயகன்’ படத்தை பார்த்ததாகவும் அந்தப் படத்தின் தரத்திற்கு ‘மனிதன்’ போட்டியிட்டு சமாளிப்பது கடினம் என்றும் சொல்லி, ‘மனிதன்’ ரிலீஸை ஒரு மாதம் தள்ளிவைக்கமுடியுமா என ஏ.வி.எம் நிறுவனத்திடம் நீங்கள்தான் பேசவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிருக்கிறார். ஆனால், பஞ்சு அருணாச்சலமோ பதட்டமே படாமல், “ தரத்துல வேணும்னா ‘நாயகன்’ ஒருபடி கூட இருக்கலாம். ஆனா ‘மனிதன்’ படம் தப்பு பண்னாது. என்ன நம்பு’ என தைரியம் தந்திருக்கிறார்.

அப்போது அவர் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள்தான் மேற்கொண்டு ‘மனிதன்’ படம் அந்த வருட தீபாவளிக்கு வெளியாக காரணமாக அமைந்தது. பஞ்சு அருணாச்சலம் கணித்ததுபோலவே ‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல் `மனிதன்’ படமும் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிவாகை சூடியது.

Also Read – ரஜினி நடிக்க அட்லீ இயக்கவிருந்த `காப்பான்’ கதை… சுவாரஸ்ய பின்னணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top