கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி தமிழ் சினிமா காமெடியில் புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்தது. உலகப் புகழ்பெற்ற அந்த காமெடி கவுண்டமணி – செந்தில் எனும் தவிர்க்க முடியா இரட்டைக் கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.
கவுண்டமணி – செந்தில்
தமிழ் சினிமாவில் பல முக்கியக் கலைஞர்களை அடையாளம் காட்டிய 16 வயதினிலே’ படம்தான் கவுண்டமணி மீதும் வெளிச்சம் படக் காரணமான படம். அந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த ரஜினியின் கூட்டாளியாகத் தோன்றிய கவுண்டமணி உச்சரித்த
பத்தவைச்சிட்டியே பரட்ட’ டயலாக் அவரை லைம் லைட்டில் நிறுத்தியது. அடுத்தடுத்து இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் கவுண்டமணி தவறாமல் இடம்பிடித்தார். அவர் கரியர் கிராஃப் மேலே போய்க்கொண்டிருந்தபோது, வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடிகர் செந்திலுடன் கைகோர்த்து காமெடியில் கலக்கியிருந்தார். இதற்கு முன்பாக பல படங்களில் கவுண்டமணி தனி ஆவர்த்தனம் செய்திருந்தாலும் செந்திலுடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டிகள் காலம் கடந்தும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக மனதில் நிற்பவை.

கரகாட்டக்காரன் தொடங்கி அடுத்தடுத்த படங்களில் இவர்களது பெர்ஃபாமன்ஸ் பெரிதாகப் பேசப்பட்டது. கவுண்டமணி – செந்தில் காமெடிக்காகவே பல படங்கள் வெள்ளிவிழா கண்டன. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’,
நாட்டுல இந்தத் தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா…’, `பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்ற கவுண்டமணி வசனங்களின் ரெஃபரென்ஸுகளை இன்றும் நாம் தினசரி பல இடங்களில் கடக்கிறோம். துணி துவைக்கும் தொழிலாளி தொடங்கி மெக்கானிக், முடி திருத்துபவர் என எல்லா கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கியவர் கவுண்டமணி. அவரது உதவியாளராக, மச்சானாக, பணியாளராக என அந்த கதாபாத்திரத்தோடே படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர் செந்திலுடையதாக இருக்கும்.
கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகளைப் பொறுத்தவரை ஒரே டெம்ப்ளேட்தான். அடிப்பவராக கவுண்டமணி கேரக்டரும் அவரிடம் அடி வாங்குபவராக செந்திலுடைய கேரக்டரும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவர்களின் காமெடி காட்சிகளில் கவுண்டமணியே ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றலாம். கவுண்டமணியை செந்தில் பல இடங்களில் ஓவர் டேக் செய்யும் காட்சிகளையும் நீங்கள் பார்க்க முடியும்.. நான் ஏழாவது பாஸ்ணே... நீங்க பத்தாவது ஃபெயில்ணே’ என்ற ஜென்டில்மேன் காமெடியையும்,
தேங்காய்க்குப் பிறகு என்ன வரும்ணே’ என்ற சின்னக்கவுண்டர் காமெடியையும் உதாரணமாகச் சொல்லலாம். கவுண்டமணிக்கு செந்தில் கொடுத்த கவுண்டர்கள் எதுவும் பெரிதாக சோபிக்கவில்லை. காரணம் கவுண்டமணி ஆதிக்கம் செலுத்துவது போன்ற தோற்றம் எழுந்ததுதான். ரசிகர்களின் மனநிலையும் அதையொட்டியே பயணிக்கவே, செந்திலின் டயலாக்குகள் மீதான வெளிச்சமும் குறைந்தது.

1980களில் தொடங்கி 1990கள் வரை கதாநாயகர்களை விட கவுண்டமணி அதிக ஊதியம் பெற்றதும் இதே காரணத்துக்காகத்தான். எந்தவொரு உச்ச நடிகரையும் கவுண்டரில் விட்டுவைக்காதவர் கவுண்டமணி. இதனாலேயே ரஜினி, அவரை விட செந்திலையே தனது படங்களில் அதிகம் பயன்படுத்தியிருப்பார். இதில், சில படங்கள் விலக்குண்டு. பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த மன்னன் படம் இந்த வகையறாவைச் சேர்ந்தது. அந்தப் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் சேர்ந்து தியேட்டரில் டிக்கெட் வாங்கி விஜயசாந்தியிடம் பல்பு வாங்கும் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அதேபோல், அந்த காலகட்டங்களில் வெளியான பெரும்பாலான படங்கள் கவுண்டமணி – செந்தில், அல்லது கவுண்டமணி, செந்தில் தனித்தனியாக நடித்த படங்களாகவே இருந்தன. கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்களும் உண்டு. ஆனால், செந்திலுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.

செந்திலின் கேரக்டர் வடிவமைப்பு என்பது கவுண்டமணி கேரக்டரோடு எப்போதும் வம்பிழுப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும். கவுண்டமணிக்கு எதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் செந்திலின் கேரக்டர். செந்திலை ரொம்பவே கொடுமைப்படுத்திட்டார் கவுண்டமணி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், செந்தில் கேரக்டரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கவுண்டமணி கேரக்டரை எதாவது ஒரு வகையில் தூண்டிக்கொண்டே இருப்பதுதான் முழுநேரப் பணி. செந்திலின் கேள்விகள் இல்லாமல் கவுண்டமணியின் கவுண்டர்கள் இல்லை என்பதே நிதர்சனம்!
0 Comments