`லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கரியரின் 6 முக்கியமான டர்னிங் பாயிண்ட்ஸ்!

வழக்கமாக, ஹீரோயின்களின் சினிமா கரியர் எப்படி இருக்கும் என்றால், முதலில் அறிமுகமாவார்கள்.. அடுத்த சில ஆண்டுகளோ பல ஆண்டுகளோ கொடிகட்டி பறப்பார்கள். அப்படியே மார்க்கெட் மெல்ல டல்லடிக்கத் தொடங்குகையில் திருமணம் செய்துகொண்டு போய்விடுவார்கள். பிறகு, சிலர் லேட்டாக செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்குவார்கள் அல்லது ஒதுங்கியது ஒதுங்கியதாகவே இருக்கட்டும் என குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வார்கள். ஆனால், இந்த டெம்ப்ளேட் எதிலுமே சிக்காமல் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை தன்னுடைய கரியரின் சரிவை நோக்கி சென்று மீண்டும் மீண்டும் உச்சத்தைத் தொட்டவர் நயன்தாரா. இவரது ஆச்சர்யமான சினிமா கரியரின் முக்கியமான ஆறு திருப்பங்கள் பற்றி இங்கே.

திருப்பம்-1

ஐயா
ஐயா

காலேஜ் படித்துக்கொண்டே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நயன்தாரா புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு கண்ணில் பட்டு அவர் இயக்கிய ‘மனசினக்கரே’ படத்தில் 19 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவந்த  நயன்தாராவின் படங்களை பார்த்த இயக்குநர் பி.வாசுவின் மனைவி தனது கணவர் அடுத்து ரஜினியை இயக்கவிருக்கும் படத்துக்கு அவரை சஜ்ஜஸ்ட் செய்திருக்கிறார். அப்படி அவருக்கு கிடைத்ததுதான் ‘சந்திரமுகி’ பட வாய்ப்பு. இதற்கிடையே நயன்தாராவின் மலையாளப் படங்களைப் பார்த்த இயக்குநர் ஹரி, தனது ‘ஐயா’ படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படம் ‘சந்திரமுகி’ ஷூட்டிங்கில் இருக்கும்போதே வெளியானாலும் அதன்பிறகு வந்த ‘சந்திரமுகி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிதான் நயன்தாரா எனும் பெயரைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

திருப்பம்-2

வல்லவன்
வல்லவன்

ஒரு அழகான இளம் ஹீரோயின் என்ற அளவில் பிரபல்யமடைந்திருந்த நயன்தாராவை சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தமிழ்நாட்டின் ஹாட் செலிப்ரிட்டியாக அவரை மாற்றியது. அந்த நேரத்தில் என்னதான் அவர் பரபரப்பான ஒரு ஹீரோயினாக இருந்தாலும் சிம்புவுடனான காதல் பிரேக்கப், அதிக உடல் எடை என மிகவும் மோசமான காலகட்டத்தில் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் அப்போது ரசிகர்கள் நயன்தாராவின் உடல்வாகை வைத்து கடுமையாகக் கிண்டலடிக்கவேத் தொடங்கியிருந்தார்கள்.

திருப்பம் – 3

பில்லா
பில்லா

இனி நயன்தாரா அவ்வளவுதான் என அனவரும் தப்புக்கணக்கு போட்டிருந்த நேரத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ படத்தில் தடாலடியாக தனது  உடல் எடையைக் குறைத்துத் தோன்றி சர்ப்பரைஸ் கொடுத்தார் நயன். போதாக்குறைக்கு அந்தப் படத்தில் அவர் நடித்த டூ-பீஸ் காட்சியும் அணிந்த விதவிதமான ஸ்டைலீஷ் காஸ்டியூம்களும் ரிஸ்க் எடுத்து நடித்த ஆக்சன் காட்சிகளும் அன்றைய இளைஞர்களின் கனவு நாயகியாக நயன்தாராவை ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

திருப்பம் -4

வில்லு
வில்லு

ஸ்லிம் ஃபிட்டாக மாறிப்போன நயன்தாரா தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பரபரப்பாக நடித்துவந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் 2009- ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த ‘வில்லு’ படத்தில் நடித்தார் நயன். அப்போது அவருக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் இரு பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்ற அளவில் நிற்காமல் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் எதிர்ப்புக்குரல்களையும் கிளப்பியது. அந்த எதிர்ப்புகளையும் மீறி, பிரபுதேவாவை நிச்சயம் கரம் பிடிப்பதென முடிவெடுத்த நயன், தெலுங்கில் சீதையாக நடித்த ‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

திருப்பம்-5

ராஜா ராணி
ராஜா ராணி

இவ்வளவு கடும் எதிர்ப்புகளை மீறி பிரபுதேவாவை திருமணம் செய்வது நல்லதா என யோசித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என தெரியாத நிலையில் பிரபுதேவாவுடனான காதல் உறவிலிருந்து விலகிக்கொண்டார் நயன். அந்த நேரத்தில் படங்கள் எதுவும் நடிக்காமல் சில காலம் சைலண்டாக இருந்த நயன்தாரா மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்த படம்தான் ‘ராஜா ராணி’. அந்தப் படம் மூலம் தோற்ற அளவிலும் நடிப்பிலும் அடுத்தக் கட்டத்தை எட்டியிருந்தார் நயன்.

திருப்பம்-6

அறம்
அறம்

‘ராஜா ராணி’ படம் மூலம் கம்பேக் கொடுத்த நயன்தாரா, தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ போன்ற பெரிய ஹீரோ அல்லது பெரிய பேனர் படங்களில் நடிக்கத் தொடங்கி, நம்பர் ஒன் ஹீரோயினாகவும் தனக்கென ஒரு பிஸினெஸ் இருக்கும்படியும் பார்த்துக்கொண்டார். அந்த சூழ்நிலையில் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவிய படம்தான் ‘மாயா’. வேறு எந்தவித மார்க்கெட் வேல்யூவும் இல்லாமல் நயன்தாரா எனும் பெயரும் அசத்தலான கதையும் ‘மாயா’ படத்தை வெற்றிப்படமாக மாத்திடவே திரையுலகே ஆச்சர்யப்பட்டுப்போனது. இனி இதுதான் நம்ம ரூட்டு என முடிவெடுத்த நயன், இடையில் ஸ்டார் ஹீரோக்கள் படத்தில் சாதாரண ஹீரோயினாக நடித்துவந்தாலும் இன்னொருபக்கம் ‘டோரா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களில் நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து தனக்கென தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

Also Read – STR-ன் வெறித்தனமான ரசிகர்… யார் இந்த `கூல்’ சுரேஷ்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top