முதல் மரியாதை

சிவாஜியின் மலைச்சாமி ரோல்… ராதாவின் துணிச்சல் – `முதல் மரியாதை’-யை 80ஸ் கிட்ஸ் ஏன் கொண்டாடினார்கள்?

பாரதிராஜாவின் கரியர் பெஸ்ட் படமா இந்த ‘முதல் மரியாதை’ எனத் தேடிப்பார்த்தால், தமிழ் சினிமாவில் வந்த கிராமத்து படங்களிலேயே பெஸ்ட் என ரிசல்ட் தரக்கூடிய அளவுக்கு பெருமை வாய்ந்தது இந்தப் படம்.  

விக் இல்லாத சிவாஜியின் கேஷூவல் லுக், ராதாவின் ஸ்பெஷல் சிரிப்பு, வடிவுக்கரசியின் பழமொழிகள், அந்த நிலாவத்தான் கையிலப் புடிச்சேன் பாட்டு, ஜனகராஜின் சந்தேகக் காமெடி என இந்தப் படம் தரும் நினைவுகள் கொஞ்சம் நஞ்சமா?!

தொடர் தோல்வியில் இருந்த பாரதிராஜா, எதையுமே நம்பாமல், தன்னுடைய ஆஸ்தான கதாசிரியர்களில் ஒருவரான ஆர்.செல்வராஜ் சொன்ன கதையை மட்டுமே நம்பி, பெரும் ரிஸ்க் எடுத்து சொந்தப் படமாகத் தொடங்கிய படம்தான் ‘முதல் மரியாதை’.. ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவஸ்கிக்கும் அவரது உதவியாளர் அண்ணாவுக்கும் இடையே இருந்த உறவும், எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற சிறுகதையும் தந்த பாதிப்பில் இந்த கதையை உருவாக்கினார் ஆர்.செல்வராஜ்.

முதல் மரியாதை

கதை யார் வேணும்னாலும் எழுதியிருக்கலாம்,  ஆனா, திரையில் அது என் படமாகத்தான் வந்து நிற்கும் என சொல்லி அடிப்பது மாஸ்டர் டைரக்டர் பாரதிராஜாவின் வழக்கம்.. அந்த அளவுக்கு திரையை ஆளக்கூடிய ஆளுமைமிக்க இயக்கத்தை இந்தப் படத்திலும் தவறாமல் தந்திருப்பார் பாரதிராஜா. நரைமுடியில் மணிமாலை, இளவட்டக் கல், ராதாவை கோழிக் கூடையில் கவிழ்த்து போடுவது, சிவாஜியும் ராதாவும் ஆற்றில் மீன் பிடித்தல், சந்தையில் ஆட்டை அதிக விலைக்கு விற்பது, சத்யராஜின் சர்ப்பரைஸ் எண்ட்ரி, உணர்ச்சிபூர்வமான கிளைமேக்ஸ் இதெல்லாம் பாரதிராஜாவைத் தவிர யாரால் இப்படி கவித்துவமாக காட்சிப்படுத்தமுடியும்..? ரஞ்சனி ஆற்றில் முங்கி இறந்துவிட, அங்கிருந்து தொடங்கி ஊர்க்காரர்கள் வந்து அவரது உடலைக் கைப்பற்றி இறுதிச்சடங்கு செய்வதுவரை உள்ள விஷயங்களை, மிகச்சுருக்கமாக, அதேசமயம்  மூட் கெடாமல் செம்ம ஸ்டைலாக அந்த காட்சிகளை படமாக்கி எடிட் செய்து அசத்திய விதம் ஒன்றே போதும் இந்தப் படத்தில் அவரது ஆளுமை என்னவென்பதற்கு. அதுமட்டுமில்லாமல், பாரதிராஜா என்றாலே முதலில் நினைவுக்கு வரக்கூடிய ‘என் இனிய தமிழ்மக்களே’ என அவர் தன் பேச்சைத் தொடங்கும் விதமும் இந்தப் படத்திலிருந்துதான் தொடங்கியது.

மலைச்சாமி ரோலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை முதலில் மனதில் வைத்திருந்த பாரதிராஜா. கடைசி நேரத்தில்தான் சிவாஜியிடம் சென்றிருக்கிறார். சிவாஜியின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமா, வீட்டுக்குள் புழுக்கம், வெளியில் குறும்பு என இரட்டை மனநிலைகொண்ட கேரக்டர் அவருக்கு.  வடிவுக்கரசியின் ஜாடை மாடை பேச்சுக்களுக்கு வருத்தப்படுவதாகட்டும், ராதாவுடன் வாஞ்சையுடன் பழகுவதாகட்டும், ஊர் பெண்களைக் கிண்டல் பண்ணுவதாகட்டும், ஊர் தலைவராக கம்பீரம் காட்டுவதாகட்டும், கோடங்கி சத்தத்துக்கு மருகுவதாகட்டும் என்று `நல்ல வேஷம்தான் வெளுத்துவாங்குறேன்’ என வெளுத்து வாங்கியிருப்பார் சிவாஜி. அதிலும் ராதா வீட்டில் அயிரை மீன் குழம்பை சாப்பிடுவார் பாருங்கள். பார்க்கும் நமக்கு வாய் புளிக்கும். 

எந்த ஒரு முன்னணி ஹீரோயினும் நடிக்கத் தயங்கும் ரோலில் தைரியமாக ராதா. ஜாக்கெட் இல்லாத காஸ்டியூம், துளிகூட மேக்கப் கிடையாது, விளக்குமாற்றில் அடி வாங்குவது மாதிரியான காட்சிகள் என இந்தப் படத்திற்கு ராதாவின் அர்ப்பணிப்பு அளப்பரியது. இந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது ராதிகாதான். ஆனால். அப்போது அவர் `சிப்பிக்குள் முத்து’ படத்தில் பிஸியாக இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம். ஆனாலும், ராதாவுக்கு டப்பிங் பேசி இப்படத்தில் தன் இருப்பை தக்கவைத்துக்கொண்டார் ராதிகா.

இவையெல்லாம் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் இளையராஜா வேறு. ‘அந்த நிலாவத்தான்..’, ‘ வெட்டி வேரு வாசம்’ போன்ற முத்தான பாடல்களாகட்டும், கதையின் ஒத்திசைவாகப் பயணிக்கும் பிண்ணனி இசையாகட்டும், படம் முழுக்க ராஜாவின் ராஜாங்கம்தான். படம் முழுவதும் வரும் குயிலின் கூவல் போன்ற அந்த மெல்லிசையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியுமா..? 

இந்தப் படம் வெளியாகி 36 ஆண்டுகள் என்ன, இன்னும் 300 ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் மனதில் முதல் மரியாதை இந்தப் படத்துக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Also Read : ஓடிபிடிச்சு விளையாடுறது இப்போ இன்டர்நேஷனல் கேம்! #WorldChaseTag

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top