என்.எஸ்.கே

எம்.ஜி.ஆருக்கு முன்னரே ஃபேமஸான மூன்றெழுத்து – என்.எஸ்.கே எனும் மகா கலைஞன்!

வில்லுப்பாட்டு கலைஞர், நாடகக் கலைஞர், காமெடியன், சிந்தனைவாதி, இயக்குநர், தயாரிப்பாளர், வள்ளல் இப்படிப் பன்முகம் கொண்ட என்.எஸ்.கே எனும் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக்கு முன்பே புகழ்பெற்ற மூன்றெழுத்துக் கலைஞன். கலைவாணர் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவு கடந்த மரியாதை பற்றி தெரியுமா? சம்பளமே வாங்காமல் கலைவாணர் குடும்பத்துக்காக அவர் நடித்துக் கொடுத்த படம்… என்.எஸ்.கே, அண்ணாவுக்கு பிரசாரம் செய்தபோது எதிர்த்து நின்ற வேட்பாளரையே அதிகம் புகழ்ந்து பேசினார்.. அதுக்கு என்ன காரணம் தெரியுமா? அவரது கணக்கு வழக்குகளை பரிசோதிக்க வந்த ஐடி ஆபிஸர், நீங்க கிருஷ்ணன் இல்லை; கர்ணன்னு ஏன் புகழ்ந்தார் தெரியுமா…  இப்படி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பத்தின சுவாரஸ்யங்களைப் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

என்.எஸ்.கிருஷ்ணன்

என்.எஸ்.கிருஷ்ணன்
என்.எஸ்.கிருஷ்ணன்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்தான் என்.எஸ்.கே. நாகர்கோவில் ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 9-ல் சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியின் ஏழு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தவர். குடும்ப வறுமையால் நான்காம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பணியைச் செய்தார். காலையில் டென்னிஸ் பந்துகளைப் பொறுக்கும் வேலை, அதன்பின்னர் மளிகைக் கடைகளில் பொட்டலம் மடிக்கும் வேலை, மாலையில் நாடகக் கொட்டகை வேலை என சிறுவன் என்.எஸ்.கேவின் ஆரம்ப நாட்கள் கடுமையாகவே கழிந்தன. ஒரு கட்டத்தில் வில்லுப்பாட்டு கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் உருவெடுத்த என்.எஸ்.கே சிறுவயதில் நாகர்கோவிலுக்கு நாடகம் போடவந்த ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் இருந்து கலைப் பயணத்தைத் தொடங்கினார்.  

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியனாக உயர்ந்தாலும் நாடகத்துறையை இவர் விடவில்லை. சொந்தமாக நாடக கம்பெனி நடத்தியதோடு, நலிந்து வந்த நாடக கம்பெனிகளைக் கரம் கொடுத்து தூக்கிவிடவும் செய்தவர். அப்படியான நாடக கம்பெனிகள் போடும் நாடகங்கள் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தால், என்.எஸ்.கே நடித்த நாடகம் என அந்த நாடகங்கள் மக்கள் மத்தியில் புகழ்பெறத் தொடங்கும். சினிமா வருமானத்தை வைத்துப் பார்த்தால், நாடக வருமானம் ரொம்பவே கம்மிதான். ஆனாலும், அந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டவர் நம்ம கலைவாணர். சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்தவர்.

எம்.ஜி.ஆரை மக்கள் வள்ளல்னு கொண்டாடுவாங்க… ஆனா, அவரே என்.எஸ்.கிருஷ்ணன் பத்தி சொன்னது என்ன தெரியுமா… நீங்க கிருஷ்ணன் இல்லை; கர்ணன்னு ஐ.டி அதிகாரி ஹனுமந்தராவ் ஏன் என்.எஸ்.கேவைப் பார்த்துச் சொன்னாருங்கிறதுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கு.. அது என்னன்னு தெரியுமா? வீடியோவை முழுசா பாருங்க.. அந்த சம்பவங்கள் பத்தி நானே சொல்றேன்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைவாசம் முடிந்து தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கேவும் சுதந்திரத்துக்கு சில மாதங்கள் முன்பு வெளியே வந்தனர். அந்தகால சூப்பர் ஸ்டார்ங்குற அந்தஸ்தோட இருந்த பாகவதாரால அதுக்கு மேல கரியரை கண்டினியூ பண்ண முடியல. ஆனால், அதுக்கப்புறமும் என்.எஸ்.கே தொடர்ந்து நடித்து மக்களிடையே புகழ்பெற்ற நடிகராகவே இருந்தார். இவர் சிறையில் இருந்தபோது, வழக்கு செலவுக்காக மக்களிடம் பணம் திரட்டப்பட்டதோடு, ஒரு படம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பைத்தியக்காரன் என்கிற பெயரில் தயாரான அந்தப் படத்தில் கலைவாணர் குடும்பத்துக்காக நடிகர்கள் பலரும் பணம் எதுவுமே பெறாமல், நடித்துக் கொடுத்தனர். எம்.ஜி.ஆரும் ஒரு ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக கலைவாணரின் மனைவி மதுரம் நடித்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே என்.எஸ்.கே ரிலீஸாகிவிடவே, அந்தப் படத்தில் மதுரத்தை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, என்.எஸ்.கேவுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடித்தார். அந்தப் படத்தில் ’ஜெயிலுக்குப் போய் வந்த..’ என்ற பாடலைத் தன் அனுபவப் பாடலாகப் பாடினார். முன்பைவிட அவரது புகழ் பன்மடங்கு உயரத் தொடங்கியது.

என்.எஸ்.கே - எம்.ஜி.ஆர்
என்.எஸ்.கே – எம்.ஜி.ஆர்

ஆரம்பகாலங்களில் என்.எஸ்.கேவைத் தனது ஆதர்ஸமாகக் கொண்டு அவரை பல ஆலோசனைகளுக்காக நேரில் சந்திப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘’என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்’’ என்று எம்.ஜி.ஆரே ஒரு இடத்தில் கலைவாணரைப் பற்றி குறிப்பிட்டார். சிறைவாசத்துக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார்.

பாடலிலும் நகைச்சுவையைப் புகுத்த முடியும் என புது ஐடியா பிடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த என்.எஸ்.கே, `விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேன்டீ’ பாடலில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை ‘அன்றே கணித்தார்’ பாணியில் பாடியிருப்பார். அதேபோல், பணம் படத்தில், `பணத்தை எங்கே தேடுவேன்’ என்று இவர் பாடிய பாடல் தமிழ் சினிமா கிளாசிக்குளில் ஒன்று. இவர் நடித்த முதல் படமான சதிலீலாவதி படம்தான், தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கலைஞர்களான எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு முதல் படம்.

என்.எஸ்.கிருஷ்ணன்
என்.எஸ்.கிருஷ்ணன்

இவரது படங்களில் இடம்பெறும் காமெடி காட்சிகளுக்குத் தானே வசனம் எழுதிக் கொள்ளும் பழக்கம் கொண்டவர் என்.எஸ்.கே. சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, மது அருந்தாமை என சமூக சீர்திருத்த கருத்துகளை சினிமா மூலம் மக்களிடையே விதைத்தவர். சமகால பிரச்னைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, படங்களில் பயன்படுத்துபவர். ’ஒண்ணுல இருந்து 20வரைக்கும் கொண்டாட்டம்…21-ம் தேதியில இருந்து திண்டாட்டம்’னு முதல் தேதி படத்தில் இவர் நடுத்தர வர்க்கங்கள் படும்பாட்டை இயல்பாகப் பாடியிருப்பார்.

காஞ்சிபுரத்தில் அண்ணா போட்டியிட்டபோது, அவருக்காக பிரசாரம் பண்ணப்போன என்.எஸ்.கே, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டரைப் பயங்கரமா புகழ்ந்து ரொம்ப நேரம் பேசியிருக்காரு.. கூட்டத்துல இருந்தவங்கள்லாம் என்னடா கலைவாணர் இப்படியெல்லாம் பேசுறாரேன்னு கேட்டுட்டு இருந்தப்ப, கடைசியா, ‘’இப்படி திறமையான மருத்துவரை நீங்க சட்டசபைக்கு அனுப்பி வைச்சுட்டா, உங்களுக்கு யார் சேவை செய்வா? அதனால அண்ணாவை ஜெயிக்க வைங்க’னு தன்னோட ஹ்யூமர் டச்சோட முடிச்சு பிரமிக்க வைச்சாராம். அதேமாதிரி, கொடுத்துக் கொடுத்தே சிவந்த கரம் என்.எஸ்.கேவோடது. அதுக்கு ரெண்டு சம்பவங்களை உதாரணமா சொல்லலாம். ஹனுமந்தராவ்ங்குற வருமான வரித்துறை அதிகாரி இவரோட கணக்காளர்கிட்ட, என்னப்பா பல இடங்கள்ல தர்மம், தர்மம்னு போட்டிருக்கீங்கனு கேட்டிருக்காரு. அதுக்கு அவரோட கணக்காளரோ, ஆமாங்க எங்க அய்யா தன்னோட பேர் வெளியே தெரியாம பலருக்கு உதவி செய்றதை வழக்கமா வைச்சிருக்கவர்னு சொல்லிருக்காரு. அவர் சொன்னமாதிரியே அந்த ஐடி அதிகாரி என்.எஸ்.கே கிட்ட தன்னோட அடையாளத்தை மறைச்சுக்கிட்டு மகளோட திருமணத்துக்கு பண உதவி வேணும்னு போய் நின்னுருக்காரு. உடனே, பணத்தை எடுத்து என்.எஸ்.கே கொடுக்கவே பிரமிச்சுப்போன அந்த அதிகாரி, ‘நீங்க கிருஷ்ணன் இல்ல; கர்ணன்’னு சொல்லி நெகிழ்ந்து போயிருக்காரு.

என்.எஸ்.கே சிலை
என்.எஸ்.கே சிலை

தன்னோட சொத்துகள் எல்லாத்தையும் மக்களுக்கே கொடுத்து வாழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். உயிரிழக்கும் தருவாயிலும் உதவிகேட்டவருக்குத் தன்னிடம் இருந்த கடைசி சொத்தான வெள்ளி சொம்பைக் கொடுத்தவர் வள்ளல் ‘என்.எஸ்.கே’. சென்னை மயிலாப்பூரில் இருந்த நடராஜன் கல்விக்கழகம் எனும் அமைப்பு, இவருக்கு கலைவாணர் எனும் பட்டம் சூட்டியது. அந்தப் பட்டத்தைக் கொடுத்தவர் பம்மல் சம்மந்த முதலியார். இவருக்கும் அண்ணாவுக்கும் இடையே இன்னொரு கனெக்டிங் ஃபேக்டர் இருக்கு. நாமக்கல் தாரமங்கலத்தில் அண்ணாவின் சிலையைத் திறந்துவைத்ததுதான் என்.எஸ்.கேவின் கடைசி பொது நிகழ்ச்சி. அதேபோல், என்.எஸ்.கேவின் சிலை திறப்புதான் அண்ணா, கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கலைவாணர், தனது நாற்பத்தொன்பது வயதிலேயே 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் அவரது இடத்தை எந்தவொரு கலைஞனாலும் நிரப்ப முடியவில்லை.

என்.எஸ்.கே-வோட காமெடியைப் பார்த்திருக்கீங்களா… அவரைப் பத்தி முதன்முதலில் எப்போ உங்களுக்குத் தெரியவந்துச்சு… கமெண்ட்ல சொல்லுங்க மக்களே! 

Also Read – வில்லன் டு வாத்தியார் – நடிகர் பசுபதி எழுந்த கதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top