டி.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் 1981ம் ஆண்டு மே 20-ம் தேதி வெளியான படம் `ரயில் பயணங்களில்..’. 80ஸ் காதலர்கள் இந்தப் படத்தை ஏன் கொண்டாடினார்கள் தெரியுமா?
`வசந்த அழைப்புகள்’ படத்துக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்குநராக அவதாரம் எடுத்த படம் ரயில் பயணங்களில். ஹீரோவாக ஸ்ரீநாத்தும் நாயகியாக ஜோதியும் அட்டகாசப்படுத்தியிருப்பார்கள். வில்லனாக ராஜீவ் வசனங்களில் மிரட்டியிருப்பார்.

கதை
பிரபலமான பாடகரான ஹீரோ ஸ்ரீநாத் மீது எழுத்தாளராக இருக்கும் ஹீரோயின் ஜோதிக்குத் தீராத காதல். ஹீரோவின் பாடல் நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுவார் ஹீரோயின். நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, பரஸ்பரம் காதல் இருந்தும் அதை இருவரும் சொல்லிக்கொள்ளாமலே இருக்கிறார். ஸ்ரீநாத்துக்கு அவரது தாய் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கவே, மறுபுறம் ஹீரோயின் ஜோதி எதிர்பாராமால் ராஜீவை மணக்க வேண்டிய சூழல் வருகிறது.
திருமணத்துக்குப் பிறகு தனது மனைவி பாடகரான ஹீரோவை மானசீகமாகக் காதலித்த விவகாரம் ராஜீவுக்குத் தெரியவரவே, சொற்களால் அர்ச்சனை செய்கிறார். இருவருக்கும் இடையே ஒத்துவராத நிலையில், ராஜீவ் விவாகரத்துக்கே தயாராகிறார். மறுபுறம், ஹீரோயினை மனதில் சுமந்துகொண்டு திரியும் ஹீரோ தேவதாஸ் அவதாரம் எடுக்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தைக் கழித்து வரும் ஹீரோவுக்கு, எழுத்தாளர் பெண்மணி ஒருவர் மூலம் ஹீரோயினின் அவஸ்தை தெரியவருகிறது. இதனால், ஜோதியின் கணவர் ராஜீவை சந்தித்துப் பேசுகிறார் ஸ்ரீநாத். அதன்பின்னர் என்ன நடந்த எதிர்பாரா ட்விஸ்டுடன் படத்துக்கு டி.ஆர் சுபம் போட்டிருப்பார்.
பாடல்கள், வசனம்

டி.ஆர் இசையில், படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பட்டி – தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. வசந்தம் பாடிவர...’,
அட யாரோ பின்பாட்டுப் பாட..’, நூலும் இல்லை.. வாலும் இல்லை.. வானில் பட்டம் விடுவேனா..’,
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்’ போன்ற பாடல்கள் ஹிட்டடித்தனர். அதேபோல், ஹீரோயினின் கேரக்டர் பெயரிலேயே ஹீரோ பாடும், `அமைதிக்குப் பெயர்தான் சாந்தி… அந்த அலைகளில் ஏதடி சாந்தி’ பாடல் 80ஸ் சூப் பாய்ஸின் ஆல்டைம் பேவரைட் பாடலாக இருந்தது.
டி.ராஜேந்திரின் அடுக்குமொழி வசனங்களுக்குத் தியேட்டர்களில் விசில் பறந்தது. படத்தின் ரீச்சுக்கு வசனங்களும் முக்கிய காரணம். ஒரு சில சாம்பிள்கள்..
- கைல விலங்கு மாட்டீட்டாங்கனு கவலைப்படுறியா?.. ஒரு விலங்குகிட்ட இப்படி மாட்டிக்கிட்டோம்னு கவலைப்படுறியா?
மாப்பிள்ளை உன்னை சந்தோஷமா வைச்சிருக்காராமா... அடிக்கடி போன் பண்ணுமா’..
அடிக்கு அடிதான்மா போன் பண்றேன்’- இனிமே பாடலில் என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம். வழிதான் சொல்ல முடியும் வலியைச் சொல்லத் தெரியல…
உனக்கு நல்ல வழிதான் சொல்ல வந்திருக்கேன்...’
எந்த வழியும் சொல்ல வேணாம். வந்த வழியே போனா போதும்’
தொடாத காதல்
ஹீரோயினைத் தொடாமலேயே காதல் செய்யும் ஹீரோ கேரக்டர்கள் டி.ஆரின் பிரத்யேக பாணி. அதேபோல்தான், இந்தப் படத்திலும். சொல்லப்போனால், `இதயம்’ முரளி வகையறா படங்களுக்கு முன்னோடியாக இந்தப் படத்தைச் சொல்வார்கள். 80ஸ் காதலர்கள் இந்தப் படத்தில் வரும் ஹீரோ ஸ்ரீநாத்தாகவும், ஜோதியாகவும் தங்களைப் பாவித்துக் கொண்டு படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தார்கள்.
நிஜ வாழ்வில் ஹீரோவின் சோக முடிவு!
ரயில் பயணங்களில் படத்தின் ஹீரோ ஸ்ரீநாத், இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் கடந்த 2010ம் ஆண்டு மோகன்லால் நடித்த சிகார் படத்தின் ஷூட்டிங்குக்காக எர்ணாகுளத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரியை மணந்த ஸ்ரீநாத், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தார்.
Also Read – பாலு மகேந்திராவைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? ஒரு சின்ன டெஸ்ட்..!
0 Comments