ஒரு இயக்குநர் தனது கதையில் இருக்கும் பாடல்களின் சிச்சுவேஷனை பாடலாசிரியர்களிடம் சொல்லி, பாடல்களை வாங்குவதற்கு பதிலாக அவர்களே பாடல்கள் எழுதிய தருணங்களும் தமிழ் சினிமாவில் நடக்கும் ஒன்றுதான். அப்படி இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் இரட்டை குதிரை சவாரி செய்தவர்களைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
-
1 டி.ராஜேந்தர்:
ஒரு படத்தின் அத்தனை வேலைகளையும் சோலோவாக தனது தோளில் போட்டு சுமப்பவர்தான் டி.ஆர். இவர் இயக்கிய முதல் படமான ஒரு தலை ராகம் படத்தில் இருந்து கடைசியாக இயக்கிய வீரசாமி வரைக்கும் அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர். இதுமட்டுமில்லாமல் கிளிஞ்சல், சட்டம் சிரிக்கிறது என அவர் இயக்காத சில படங்களுக்கும் அவர் இசையமைத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 35 படங்களில் இசை - பாடல்களை உருவாக்கிய டி.ஆர், வாசமில்லா மலரிது, அட பொண்ணான மனசே என இன்றுவரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் இருக்கும்படி பல பாடல்களை கொடுத்திருக்கிறார்.
-
2 ஆர்.வி.உதயகுமார்
டி.ஆரைப் போலவே ஆர்.வி.உதயகுமாரும் அவர் முதல் முதலாய் இயக்கிய உரிமை கீதம் படத்திலிருந்து அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் இவர்தான் பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்றும் கிராமப்புறங்களில் தினசரி ஒலிக்கும் பாடல்களாக இவர் எழுதிய பல பாடல்கள் இருக்கின்றன. குறிப்பாக கிழக்கு வாசல் படத்தில் பாடி பறந்தக்கிளி, சின்னக்கவுண்டர் படத்தில் முத்துமணி மாலை, ராஜகுமாரன் படத்தில் என்னவென்று சொல்வதம்மா என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
-
3 கமல்ஹாசன்
கமல்ஹாசன் எழுத்தாளராக பல படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும் அவர் இயக்கிய ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்களிலும் மிக முக்கியமான பாடல்களை எழுதியிருக்கிறார். ஹேராம் படத்தில் ராம்...ராம், நீ பார்த்த பார்வை; விருமாண்டி படத்தில் உன்னவிட; விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாது என அவர் இயக்கிய படங்களில் எழுதிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். இதுமட்டுமில்லாமல் அவர் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தில் கந்தசாமி... மாடசாமி; மன்மதன் அம்பு படத்தில் நீ நீல வானம் என பல புதுமுயற்சி பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
-
4 பேரரசு
ஊர் பெயர்களை படத்தின் டைட்டிலாகவும் இயல்பாக பேசும் வார்த்தைகளை பாடல் வரிகளாகவும் மாற்றி குட்டி டி.ஆர் என பெயரெடுத்தவர்தான் பேரரசு. திருப்பாச்சி படத்தில் கும்புட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா, சிவகாசி படத்தில் அட என்னாத்த சொல்வேனுங்கோ என இவர் எழுதிய பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் இயக்கிய படங்களைத் தவிர வேறு சில படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் மிக முக்கியமான பாடல் வல்லவன் படத்தின் யம்மாடி ஆத்தாடி.
-
5 விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் பாடலாசிரியர் என்றால் அது விக்னேஷ் சிவன்தான், அவர் இயக்கிய போடா போடி, நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் காதல், காமெடி, குத்து என பல வெரட்டிகளில் பாடல்களை எழுதி ஹிட்டடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி வருகிறார். இவர் இயக்கிய படங்களில் எழுதிய கண்ணான கண்ணே, நானா தானா, நான் பிழை ஒரு பக்கம் என்றால் எங்கடி பொறந்த, அதாரு அதாரு, எனக்கென யாரும் இல்லையே, செஞ்சிட்டாளே, வாழ்க்க ஓடி ஓடி என மற்ற படங்களுக்கு எழுதிய பாடல்கள் அனைத்தும் வேற ரகம். விக்னேஷ் சிவன் எழுதும் பாடல்களின் சிறப்பே அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள்தான். அந்தந்த சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் பரவரலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை வைத்து பாடல்களுக்கு மேலும் அழகு சேர்ப்பார்.
0 Comments