சங்கர் மகாதேவன்

சங்கர் மகாதேவன் மிரட்டிய மாஸான 10 `ஹீரோ இன்ட்ரோ’ சாங்ஸ்!

பாடகர்கள் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ போன்ற சென்ற தலைமுறை பாடகர்களுக்கு  அடுத்து வந்த பாடகர்களில் அதிக அளவில் ஹீரோ இன்ட்ரோ பாடல் பாடியவர் சங்கர் மகாதேவனாகத்தான் இருப்பார். ரஜினி தொடங்கி சிம்பு வரை இவரது குரலில் மாஸ் காட்டாத ஹீரோக்களே இல்லை. அப்படி அவர் பாடிய பல ஹீரோ இன்ட்ரோ பாடல்களில் சிறந்த பத்து பாடல்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

நான் அடிச்சா தாங்கமாட்ட (வேட்டைக்காரன்)

‘நான் அடிச்சா தாங்கமாட்ட.. நாலு மாசம் தூங்கமாட்ட’ என கபிலன் எழுதிய மாஸ் வரிகளுக்கு விஜய்யின் மாஸ் லுக் எந்த அளவு பொருத்தமாக இருக்கிறாரோ அந்த அளவு பாடகரின் குரலிலும் மாஸ் நிறைந்திருக்க வேண்டாமா.. அந்த மாஸை இந்தப் பாடலில் வரும் சங்கர் மகாதேவனின் குரலை மட்டும் தனியே கவனித்துப் பார்த்தால் உணர முடியும்.

அடடா ஆரம்பமே (ஆரம்பம்)

சில கலைஞர்களைத்தான் விஜய் – அஜித், ரஜினி-கமல் போன்ற பாகுபாடையெல்லாம் கடந்து ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அப்படியாக விஜய்க்கு எவ்வளவுக்கு எவ்வளவு இவர் ஹீரோ இண்ட்ரோ ஸாங் பாடி அசத்தியிருக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் அஜித்துக்கும் பாடியிருக்கிறார். அப்படியொரு அசத்தலான பாடல்தான் இது.

டிப்பு டிப்பு (பாபா)

நீண்டகாலம் கழித்து ரஜினிக்கு எஸ்.பி.பி அல்லாத வேறொரு பாடகர் இண்ட்ரோ ஸாங் பாடியது என இந்தப் பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு. எஸ்.பி.பிக்கு எந்தவிதத்திலும் குறை வைக்காமல் செம்மையாகவே பாடியிருப்பார் சங்கர் மகாதேவன். விளைவு ‘காலா’ வரை இந்த கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பிள்ளையார் சுழி (காதல் அழிவதில்லை)

‘பிள்ளையார் சுழி போடுவேன்.. போட்டி போட்டு ஆடுவேன்’ என சிம்பு ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு மாஸான இண்ட்ரோ ஸாங் பாடியிருப்பார்  சங்கர் மகாதேவன். அந்த ராசியினாலோ என்னவோ அடுத்தடுத்து ‘தம்’, ‘அலை’, ‘தொட்டி ஜெயா’, ‘சிலம்பாட்டம்’ என அவருடைய பல படங்களில் தொடர்ந்து இண்ட்ரோ ஸாங் பாடி வருகிறார்  சங்கர் மகாதேவன்.

தெனாலி (தெனாலி)

எத்தனையோ ஹீரோ இண்ட்ரோ பாடல்களை சங்கர் மகாதேவன் பாடியிருந்தாலும் மோஸ்ட் கூலஸ்ட் ஹீரோ இண்ட்ரோ ஸாங் என இந்த ஸாங்கைக் குறிப்பிடலாம். எதற்கெடுத்தாலும்பயப்படும் ஹீரோவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்ம கூலாக உருவான இந்தப் பாடலை செம்ம கூலாகப் பாடி ஜாலி செய்திருப்பார் சங்கர் மகாதேவன்

சண்டக்கோழி (சுள்ளான்)

தனுஷூக்கும் இவரது குரல் பக்காவாக பொருந்தத்தான் செய்தது. சும்மாவே வித்யாசாகர் – சங்கர் மகாதேவன் கூட்டணி பாடல் என்றால் அதிரும். அந்த மேஜிக் இந்தப் பாடலிலும் ஹெவியாகவே ஒர்க் ஆகியிருந்தது.

பூப்பறிக்க நீயும் போகாதே  (உனக்கும் எனக்கும்)

இதுவொரு வித்தியாசமான  இண்ட்ரோ  பாடல். ஒரே நேரத்தில் ஹீரோ ஜெயம் ரவிக்கும் ஹீரோயின்  திரிஷாவுக்கும் இண்ட்ரோ பாடலாக வரும் இந்தப் பாடலில் இருவருக்கும் ஏற்றவாறு கச்சிதமாகப் பாடியிருப்பார் சங்கர் மகாதேவன்.

உன்னை கானாது நான் (விஸ்வரூபம்)

இதுவும் ஒரு வித்தியாசமான ஹீரோ இண்ட்ரோ பாடல்தான். ஹீரோக்கள் என்றாலே மாஸாகத்தான் அறிமுகப்படுத்த வேண்டுமா கொஞ்சம் நளினமாகவும் காட்டலாமே என கமல் யோசிக்க, அதற்கு பலமாக பொருந்தியிருந்தது சங்கர் மகாதேவனின் இனிமையான குரல்.

பாட்டு ஒண்ணு (ஜில்லா )

ரஜினிக்கு அவர் எப்படியோ விஜய்க்கு இவர் என எஸ்.பி.பியையும் சங்கர் மகாதேவனையும் குறிப்பிடலாம். அப்படிப்பட்டவர்கள் இணைந்து ஒரு இண்ட்ரோ ஸாங் பாடினால் இப்படித்தான் பட்டையைக் கிளப்பும்.

வேட்டி..வேட்டி.. (விஸ்வாசம்)

சில வருட இடைவேளைக்குப் பிறகு அஜித்துக்கு சங்கர் மகாதேவன்  இண்ட்ரோ சாங் பாடியது இந்தப் படத்தில்தான். அஜித் சாக்லேட் பாயாக  இருந்த காலத்தில் ‘சந்தனத் தென்றலே’ பாடிய இவரது குரல் நரைத்த கிடா மீசையில் மாஸ் காட்டும் அஜித்துக்கும் பொருந்தத்தான் செய்தது.

Also Read – பிறை தேடும் இரவிலே முதல் இளமை திரும்புதே வரை… `பொயட்டு’ தனுஷ்-ன் டாப் 5 பாடல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top