மணிரத்னம் என்றவுடன் அவரது பட விஷூவல்களுடன் சேர்த்து அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் நம் நினைவுக்கு வருவதுண்டு. ‘இருவர்’ படத்திலிருந்து தனது படங்கள் அனைத்தையுமே ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் மூலமே தயாரித்து இயக்கிவருகிறார் மணி ரத்னம். அதுபோக, ‘நேருக்கு நேர்’, ‘டும் டும் டும்’, ‘வானம் கொட்டட்டும்’ போன்ற பிற இயக்குநர்களின் படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படிப்பட்ட ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ உருவான பின்னணி தெரியுமா?
அடிப்படையிலேயே சினிமா பின்னணியைச் சேர்ந்த பாரம்பரியமான கூட்டுக்குடும்பம்தான் மணிரத்னத்துடையது. இவரது தந்தை கோபாலரத்னம் ஒரு விநியோகஸ்தர். இவரது சித்தப்பா வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. அமரதீபம்’,
கல்யாண பரிசு’, `பட்டிணத்தில் பூதம்’ போன்ற ஏராளமான கிளாசிக்ச் படங்களைத் தயாரித்தவர். இப்படிப்பட்ட குடும்ப சூழல் அமைந்ததால் அடுத்த தலைமுறையினரும் படத் தயாரிப்பில்தான் இறங்கினர். மணிரத்னம் மட்டும்தான் பட இயக்கத்தில் இறங்கினார். முதல் நான்கு படங்களைப் பிற தயாரிப்பாளர்களுக்காக இயக்கிய மணிரத்னம் அதில் பல அசௌகர்யங்களை உணர்ந்தார். குறிப்பாக இதய கோவில்படத்தை அவரது விருப்பப்படி உருவாக்கமுடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து தனது அண்ணன் ஜி.வி என அழைக்கப்படும் ஜி.வெங்கடேஷ்வரனுடைய ஜி.வி.பிலிம்ஸ்’ தயாரிப்பில்
மௌனராகம்’ படத்தை இயக்கினார் மணிரத்னம். இந்தப் படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம்’,
தளபதி’, அஞ்சலி’ என இந்தக் கூட்டணி வெற்றிகரமாக பணியாற்றிவந்தது. பேரலலாக கமல் நடிப்பில்
குரு’, விசுவின் வேடிக்கை என் வாடிக்கை’ போன்ற படங்களையும் தயாரித்துவந்தார் ஜி.வி. அண்ணன்தான் தயாரிப்பாளர் என்பதால் மணிரத்னத்துக்கு பணியாற்ற மிகவும் வசதியாக இருந்தது. ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், முன்கூட்டியே இருவரும் ஆற அமர்ந்து ஆலோசித்து, மணிரத்னத்தின் கரியரில் அடுத்து இந்தக் கதைதான் படமாக வேண்டும் என முடிவெடுத்து செயல்படுவார்கள். அவர்களின் கணிப்பும் சரியாகவே இருந்துவந்தது.
நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதிலிருந்து லொக்கேஷன் பர்மிஷன் வாங்கித்தந்து ஷூட்டிங்கை திறம்பட நடத்திமுடிப்பதுவரை ஜி.வி பொறுப்பாக பார்த்துக்கொள்ள, மணிரத்னத்தால் கிரியேஷன் விஷயங்களை நிம்மதியாக கவனிக்க முடிந்தது. அந்நிலையில்பம்பாய்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம், ‘இருவர்’ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். இந்தப் படத்தின் கதை வணிகரீதியாக வெற்றிபெறாது என உணர்ந்த ஜி.வி, `இப்போதைக்கு இந்தப் படம் வேணாம், வேற பண்ணலாமே’ என்றிருக்கிறார். ஆனால், மணிரத்னமோ ‘இருவர்’ கதையை படமாக்கிவிட வேண்டும் என துடிப்புடன் இருந்தார். இந்தப் படத்தை தயாரிக்க தனக்கு விருப்பமில்லை என ஜி.வி சொல்லிவிட, இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. சொந்த அண்ணனே இந்தக் கதையை நம்பாதபோது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயம் இதில் விருப்பம் இருக்காது என்பதை உணர்ந்தார் மணிரத்னம்.
இதைத்தொடர்ந்து தனது தம்பி சீனிவாசனின் ஒத்துழைப்புடன் ‘இருவர்’ படத்தைத் தானே தயாரித்து இயக்க முடிவெடுத்தார் மணிரத்னம். அப்போது தொடங்கப்பட்ட நிறுவனம்தான் `மெட்ராஸ் டாக்கீஸ்’. தான் நினைத்ததுபோலவே ‘இருவர்’ படத்தை கச்சிதமாக எடுத்துமுடித்தார் மணிரத்னம். இருப்பினும் தயாரிப்பு விஷயத்தில் மணிரத்னத்துக்கு கூடுதல் பளு ஏற்பட்டது. ஆனால், அதையும் சுமக்கத் தொடங்கினார் மணிரத்னம். அதன்பிறகு ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பில்தான் அவரது அனைத்து படங்களையும் இயக்கிவருகிறார். 2007-ல் அவரது தம்பி சீனிவாசன் ஒரு விபத்தில் இறந்துவிட, ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தின் முழு பொறுப்பும் மணிரத்னம் கைவசம் வந்தது.
என்னதான் ‘இருவர்’ ஒரு கல்ட் கிளாசிக் படமாக இருந்தாலும் ஜி.வி கணித்ததுபோல வணிகரீதியாக தோல்விப்படமாகத்தான் அமைந்தது. அதன்பிறகு ஜி.வி, தனியே வந்து ‘தமிழன்’, ‘ஏய் நீ ரொம்ப நல்லாயிருக்கே’, ‘சொக்கத்தங்கம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களின் தோல்வியாலும் அதனால் ஏற்பட்ட நஷ்டத்தாலும் மனமுடைந்த ஜி.வி, 2003-ல் தற்கொலை செய்துகொண்டார் என்பது ஒரு பெரும்சோகம்.
Also Read – `3 தகவல்கள்… 2 கேரக்டர்கள்… ஒரு சம்பவம்!’ – பாரதிராஜா மேஷ்அப் #HBDBharathiraja