வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயாவின் பைக்கர்ஸ் கேங்கின் பெயர் Satan’s Slaves. போதைபொருள் தொடங்கி கடத்தல், கொலை, கொள்ளை என பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உண்மையான Satan’s Slaves பைக்கர்ஸ் கேங்கை அடிப்படையாகக் கொண்டு வலிமை படத்தின் வில்லன் கேங்கை இயக்குநர் ஹெச்.வினோத் வடிவமைத்திருப்பார். உண்மையான Satan’s Slaves கேங் பத்தி தெரியுமா?
Satan’s Slaves
உலகம் முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பைக்கர் கேங்குகள் எத்தனையோ இருக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 1950-கள் தொடங்கி இப்படியான பைக்கர் கேங்குகள் வளரத் தொடங்கின. சட்டத்தை மதிக்காமல் தாங்கள் நினைத்தபடி வாழ்ந்து வந்த பைக்கர்கள், தங்கள் குழுவுக்கெனெ தனித்தனியாக விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர். அப்படி இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட பைக்கர் கேங்குகளில் முக்கியமானது இந்த Satan’s Slaves.
எப்போது தொடங்கப்பட்டது?
இங்கிலாந்தின் ஷிப்லி நகரில் மூன்று நண்பர்களால் 1967-ல் தொடங்கப்பட்டதுதான் Satan’s Slaves பைக்கர் கேங். ஹிட்லரின் நாஜி ராணுவத்தில் பணியாற்றியவர்கள்தான் இதன் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற தகவலும் உண்டு. இவர்கள் கேங்குக்கெனவே தனியாக லோகோ, அந்த லோகோ முதுகில் பிரிண்ட் செய்யப்பட்ட டெனிம் ஜாக்கெட்டுகள் உண்டு. மிகப்பெரிய ஹேண்ட்பார் கொண்ட பைக்கில் ஒருவர் கண்ணாடி அணிந்தபடியே அமர்ந்திருக்கும்படி அந்த லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கும். நெற்றியில் இவர்கள் அணிந்திருக்கும் பேண்ட்-இல் 13 என்ற எண்ணோடு மண்டை ஓடு ஒன்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இங்கிலாந்தில் மட்டும் 18 நகரங்களில் இந்த கேங்குக்குக் கிளைகள் இருந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டு இங்கிலாந்து தாண்டி ஜெர்மனியின் சில நகரங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடக்கும் வன்முறைகள், கொள்ளைகள் உள்ளிட்ட பல சம்பவங்களில் இவர்க்ளுக்குத் தொடர்பிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு இங்கிலாந்தின் பல்வேறு நீதிமன்றங்கள் தண்டனை அளித்திருக்கின்றன.
இங்கிலாந்தின் மற்றொரு மோட்டார் சைக்கிள் கிளப்பான Road Rats Motorcycle Club இவர்களின் பரம எதிரி கேங். 1983-ல் இந்த இரண்டு கேங்குகளும் அடித்துக்கொண்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. சாத்தான்ஸ் ஸ்லேவ் கேங்கைச் சேர்ந்த 24 பேர், ரோட் ரேட்ஸ் குழுவைச் சேர்ந்த 3 பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்ஸ் ஸ்லேவ் குழு உறுப்பினர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குழு எப்படி செயல்படும்?
பொதுவாக இதுபோன்ற பைக்கர் கேங்குகளில் நான்கு படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். முதல் படிநிலையில் இருப்பவர்கள் `the supporter’ என்றும், அதற்கடுத்தபடியாக இருப்பவர்கள் `the hangaround’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இரண்டாவது படிநிலையை எட்டினால் மட்டுமே இந்த கேங் வெளியில் சுற்றும்போது, அந்தக் குழுவில் இடம்பெற முடியும். மூன்றாவது நிலையில் இருக்கும் உறுப்பினர்களை `the probationer/prospect/probate’ என்று அனுபவம், நம்பிக்கை அடிப்படையில் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். கடைசியாக `the fully patched’ உறுப்பினர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனியர்களாக இருப்பார்கள்.
இந்தத் தகுதியைப் பெற்ற உறுப்பினர்கள் மட்டுமே தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்வு செய்யும்போது வாக்குரிமை பெற்றவர்கள். இதுதவிர, செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளும் இருந்திருக்கின்றன. அதேபோல், குழு உறுப்பினர்களின் ஒழுக்கம், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் போன்றவை குறித்து கண்காணிப்பதற்காகவே sergeant-at-arms என்ற ஒரு போஸ்டிங்கையும் வைத்திருப்பார்களாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பைக்கர் கேங்குகளால் வன்முறை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலான பைக்கர் கேங்குகள் சட்டத்தை மதிப்பவையே என்று அந்த குழுக்களின் ஒருங்கிணைத்து செயல்படும் தேசிய அளவிலான குழுக்கள் பல்வேறு காலகட்டங்களில் தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
Also Read – வலிமை படம் பார்க்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களைப் பார்த்துடுங்க!