அன்பே சிவம் கமலின் நிஜ வடிவம்… பூ ராமுவின் கதை!

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இன்னைக்கு பூ ராமுவின் மறைவால வருத்தத்துல இருக்கு. தன்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க தான் பயன்படுத்தியிருக்காரு. பூ ராமு தன்னோட முதல் போராட்டத்தை எங்க இருந்து ஆரம்பிச்சாரு தெரியுமா? அவரோட அப்பா அவரை வீட்டை விட்டு அடிச்சு தொறத்துனாராம். ஏன்? அன்பே சிவம் படத்துல வர்ற நாடகம், நிஜத்துல பூ ராமு போட்டதுதான். அந்தக் கதை தெரியுமா? பூ படத்துல எப்படி நடிக்க வந்தாரு? சூரரைப் போற்று படத்துக்கும் பூ ராமு வாழ்க்கைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அது என்ன? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

Poo Ramu
Poo Ramu

சென்னையை அடுத்துள்ள ஊரப்பாக்கம்தான் பூ ராமுவின் சொந்த ஊர். பூ ராமுவோட அப்பா சென்ட்ரல் பி.டபிள்யூ.டி-ல வேலை செய்துருக்காரு. அவர் நிறைய பிரச்னைகளுக்காக பெட்டிஷன் போட்டுட்டே இருப்பாராம். அதனாலயே அவங்க அப்பாக்கு பெட்டிஷன் வரதராஜன்னு பேரு. அதுமட்டுமில்ல இந்த பஞ்சாயத்துனால மூணு வருஷத்து ஒரு தடவை டிரான்ஸ்ஃபர் கொடுத்துட்டே இருப்பாங்களாம். எங்க எப்படி இருப்போம்னு தெரியாமலயே இருக்குமாம். சூரரைப் போற்றூ படத்துல பூ ராமுவும் கிட்டத்தட்ட அதே கேரக்டர்லதான் நடிச்சிருப்பாரு. இந்த கோ-இன்சிடண்ட் பார்த்து ராமு ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் சுதா கொங்கராக்கிட்ட சொல்லி ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம். ஸ்கூல்ல படிக்கும்போதே பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததுக்காக போராட்டங்கள்லாம் நடத்துவாராம். எஸ்.எஃப்.ஐ இருந்துருக்காரு. அப்பவே அவருக்கு நாடகங்கள் மேலையும் பாடுறது மேலையும் ரொம்பவே ஆர்வம்.

Poo Ramu
Poo Ramu

பிளஸ் 2 படிக்கும்போது ஸ்கூல்ல டீச்சர்ஸ் இல்லை… இதேமாதிரி நிறைய பிரச்னைகள் இருந்ததால பரிட்சை எழுதாமல் பேப்பரை கிழிச்சுப்போட்டு பரிட்சை எழுதாமல் அதை பாய்காட் பண்ணாராம். இதைக் கேள்விப்பட்ட அவங்க அப்பா வீட்டை விட்டு அடிச்சு தொறத்திட்டாராம். பூ ராமுவோட அப்பா அவரை வீட்டை விட்டு தொறத்துனதும் வெளியதான் 2,3 நாள் இருந்துருக்காரு. அப்புறம் வீட்டுக்குப் போனதும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்னு ஒரு பத்திரிக்கைல, ஏர் ஃபோர்ஸ்ல ஆள் எடுக்குறாங்கனு செய்தியை பார்த்துட்டு அதுக்கு அப்ளை பண்ணியிருக்காரு. ஸ்கூல் படிக்கும்போது என்.சி.சில வேற இருந்துருக்காரு. அதனால, ஈஸியா ஏர் ஃபோர்ஸ்ல செலக்ட் ஆயிருக்காரு. அப்போ அவருக்கு 16 வயசு. அதனால, பேரன்ட்ஸ்கிட்ட இருந்து கையெழுத்து வாங்கணும்னு ஒரு ரூல் இருந்துருக்கு. அப்போ, பாசத்தால அவங்க அப்பா கையெழுத்து போடமாட்டேன்னு சொல்லியிருக்காரு. அதுக்கப்புறமும் ஏர் ஃபோர்ஸ்ல அப்ளை பண்ணியிருக்காரு. அப்பாவுக்கு அவருக்கும் முட்டியிருக்கு. கையெழுத்து போடல. அப்புறம் வயசும் அதிகமாய்ட்டதால அந்த ஏர் ஃபோர்ஸ் கனவு ராமுவுக்கு முடிஞ்சுது.

வீதி நாடகங்கள் மேல அதிக ஆர்வம் பூ ராமுவுக்கு இருந்துச்சு. சமூக பிரச்னைகளை தொடர்ந்து தன்னோட வீதி நாடகங்கள் மூலமா மக்களிடம் பேசிகிட்டே இருந்தாரு. பள்ளில மாணவர் அமைப்புகள்ல இருந்ததால அப்படியே பொதுவுடைமை சங்கங்கள் போடுற நாடகங்கள்ல நடிக்க தொடங்கியிருக்காரு. அவரோட பெயர் பூ ராமுனு பரவலா அறியப்பட்டாலும், அவரோட திரைப்பயணம் தொடங்குனது அன்பே சிவம் படத்துலதான். முதல்ல அன்பே சிவம் படத்துல கமலோட கேரக்டர் வெறும் ஓவியராதான் இருந்துருக்கு. அப்போ, ஒரு நாள் வசனகர்த்தா மதன், கமலைக்கூப்பிட்டு பூ ராமுவோட ‘பயணம்’ன்ற நாடகத்தைப் பார்க்க சொல்லியிருக்காரு. அந்த நாடகத்தைக் கமல் பார்த்துட்டு அன்பே சிவம்ல நாடக கலைஞராகவும் கேரக்டரை மாத்துனாரு. அந்த நாடகத்தை தழுவிதான் அந்தப் படத்துல வர்ற நாடகத்தையும் எழுதுனாரு. கமல்க்கு அந்த நாடகத்துல நடிக்க பயிற்சியாளரா இருந்ததும் பூ ராமுதான். முதலாளித்துவத்துக்கு எதிரா அந்த நாடகம் அவ்வளவு அழுத்தமா பேசப்பட்டுருக்கும்.

சசி இயக்கிய பூ படத்துல சிவகாசி ரதியேனு ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டைப் பாட ஒரு பாடகரை கேட்ருக்காங்க. அவரைக்கூட்டிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோ போகும்போது சசி ராமுவைப் பார்த்து பேனாக்காரர் கேரக்டரை சொல்லியிருக்காரு. ஆனால், தன்னால அதை பண்ண முடியுமானு ஒரு குழப்பம் ராமுக்கே இருந்துச்சாம். ஆனால், ஃபோட்டோஷூட்லாம் எடுத்துப் பார்த்துட்டு, நீங்கதான் அந்த கேரக்டரை பண்றீங்கனு சசி சொல்லிட்டாராம். தன்னோட மகனை கஷ்டப்பட்டு படிக்க வைச்சு பெரிய ஆளாக்கணும்ன்ற கனவோட இருக்குற அப்பாவாகவும் மகனுக்கு வேலை போட்டுக்கொடுங்கனு கெஞ்சுற அப்பாவாகவும் மகன் நிறைய சம்பாதிக்கணும்ன்ற கனவு நிறைவேறாமல் போன வருத்தத்துடனும் இருக்கும் அப்பாவாக சிறப்பாக நடிச்சிருப்பாரு. அதுக்கப்புறம் அவர் நிறைய படங்கள் பண்ணலை. ஆனால், அவர் நடிச்ச ஒவ்வொரு படத்துலயும் அவரோட கேரக்டர்கள் தரமானதா இருக்கும். இன்னைக்கு அவர் பெயரை சொன்னதும் டக்னு நியாபகம் வர்ற படம் பரியேறும் பெருமாள். மொத்தமே 2, 3 சீன்லதான் வருவாரு. ஆனால், மிகப்பெரிய இம்பேக்டை கிரியேட் பண்ணுவாரு.

Poo Ramu
Poo Ramu

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்கப்பா ரோட்டுல செருப்பு தைக்கிறவரு. அவருடைய புள்ள நான். உனக்கு பிரின்சிபல். திங்கிற பன்னி மாதிரி என்னை அடிச்சு அடிச்சு விரட்டுனானுவ. ஓடியா ஒளிஞ்சு போயிட்டேன் நான். அப்புறம் எது அவசியம்னு தெரிஞ்சுகிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடக்கணும்னு நினைச்சவன் எல்லாம், இன்னைக்கு ஐயா சாமினு கும்பிடுறான். உங்க அப்பாவ பார்த்தப்பிறகு நான் சொல்றேன். உன்னை சுத்தி நடக்குற எல்லா விஷயத்தையும் மீறி என்னை மாதிரி நீயும் ஜெயிச்சு வருவேன்னு நான் நம்புறேன். இதை மனசுல வைச்சுட்டு உனக்கு என்ன தோணுதோ செய். போ” – பரியேறும் பெருமாள் படத்துல பூ ராமு பேசுன இந்த டயலாக்கை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது உடம்பு சிலிர்த்து போகும். தன்னோட கருத்தியலுக்கு பொருந்திப்போற ஒரு கேரக்டர்னா அது பரியேறும் பெருமாள் பிரின்சிபல் கேரக்டர்னு பூ ராமு சொல்லுவாரு.

சீனுராமசாமி இயக்கத்துல நீர்ப்பறவை படத்துல குடிகாரனா சுத்துற விஷ்ணு விஷாலை திருத்தணும்னு நினைக்கிற அப்பா, தங்க மீன்கள் படத்துல “உன் மகளை நீ தான் படிக்க வைக்கணும் அது கூட முடியலைனா நீ எல்லாம் ஒரு அப்பனா”னு ராம் கன்னங்களில் அடிக்கிற அப்பா, நண்பன் படத்துல கனவுகளோட மகனை பெரிய கல்லூரியில படிக்க வைக்கிற அப்பா, பேரன்புல கண்டவன்கிட்ட எம்புள்ள அடிவாங்கக்கூடாதுனு நினைக்கிற அப்பா, சூரரைப் போற்றுல மகனை முன்னாடி திட்டுனாலும் பின்னாடி அவனோட நல்ல விஷயங்களை கடிதத்துல எழுதுற அப்பா, நெடுநெல்வாடை படத்துல மகளை நேசிக்கிற அப்பா, கர்ணன் படத்துலயும் மனசுல நிக்கிற மாதிரியான அப்பா கேரக்டர் – இப்படி தன்னோட எல்லா அப்பா கேரக்டரையும் அவ்வளவு அழகா பண்ணியிருப்பாரு. அந்த கேரக்டர்கள் எதாவது ஒரு இடத்துல நம்ம அப்பாவையும் நியாபகப்படுத்தும்.

சினிமாவின் வழியாக ராமு பரவலாக அறியப்பட்டாலும், அந்த சினிமா மேலயே அவருக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. ஆனால்,  நாயக பிம்பத்தை உடைச்சு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்குற  வெற்றிமாறன், சீனு ராமசாமி, லெனின் பாரதி, மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மீது ராமு ரொம்பவே நம்பிக்கை வைச்சிருந்தாரு. தன்னோட கடைசி நாள்கள் வரைக்கும் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்தாரு. போராட்டக்களத்துல மக்களோடு மக்களாக நின்னாரு. த.மு.எ.க.ச-ல உறுப்பினரா இருந்தாரு. மார்க்ஸிய தத்துவத்தின் மேல மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாரு. அதை தன்னோட வாழ்நாள்ல கடைபிடிக்கவும் செய்தாரு. பூ ராமு மாதிரியான நல்ல கலைஞனை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியதுனு எல்லாரும் எழுதுறாங்க. ஆனால், தனக்கு கிடைச்ச கேரக்டரால சமுதாயத்துல என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ, அதை ஏற்படுத்திட்டுதான் நம்மள விட்டு அவர் பிரிஞ்சுருக்காரு. பூ ராமுவை இந்த சமூகம் எப்போதும் மிஸ் பண்ணும்!

Also Read – உருவத்துக்காக நிராகரிக்கப்பட்டவருக்கு மாஸ் சீன் – ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top