பிரதாப் போத்தன் இயக்கத்தின் நெப்போலியன், சரண்யா உள்ளிட்டோர் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான படம் `சீவலப்பேரி பாண்டி’. நெல்லை மாவட்டம் சீவலப்பேரின்ற கிராமத்துல இருந்த பாண்டி என்பவரோட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் எடுக்கப்பட்டது… உண்மையான சீவலப்பேரி பாண்டி எப்படி இருப்பார் தெரியுமா.. கே.ஜி.எஃப் ஆண்ட ராக்கி பாய் மாதிரி சீவலப்பேரி சுத்துவட்டார கிராமங்கள்ல இருக்க மக்களோட அபிமானம் பெற்ற பாண்டியோட வரலாறு தெரியுமா… ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டியைப் பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
சீவலப்பேரி பாண்டி
நெப்போலியன் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப் படத்தை வேறொரு நடிகரை மனதில் வைத்துதான் பிரதாப் போத்தன் இயக்க நினைத்தாராம்… அந்த நடிகர் யார் தெரியுமா… 2017-ல் ஒரு பிரபலமான நடிகர் – இயக்குநர் கூட்டணி சீவலப்பேரி பாண்டி படத்தின் சீக்வெல்லை எடுக்கப்போவதாகத் தகவல் வெளியானது.. அந்த காம்போ யார் தெரியுமா? வீடியோவை முழுசா பாருங்க… இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நானே உங்களுக்குச் சொல்றேன்…

பத்திரிகையாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் பிரபல வார இதழில் எழுதிய தொடர் கதையை அதேபெயரில் படமாக எடுத்தனர். 1970-களில் திருநெல்வேலி ஜில்லாவையே அதிரவைத்த ஒரு டானின் வாழ்க்கை வரலாறு பத்திரிகையாளரின் பார்வையில் புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு வசன உதவியையும் சௌபா செய்தார். ஆதித்யன் இசையில், கிழக்கு செவக்கையிலே’,ஒயிலா பாடும் பாட்டுல..’, `திருநெல்வேலி சீமையில..’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. நடிகர் நெப்போலியனின் கரியரில் மிகவும் முக்கியமான படமாக மாறிய இந்தப் படம், சீவலப்பேரி கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்துக்கு திரைக்கதை எழுதிய கே.ராஜேஷ்வர் திருநெல்வேலிக்குச் சென்று பாண்டி குறித்து அப்பகுதி மக்களிடம் பல்வேறு தகவல்களை நேரில் கேட்டறிந்த பின்னரே, கதையை எழுதியிருக்கிறார்.
சீவலப்பேரி பாண்டி
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை கொலைவழக்கில் முக்கிய குற்றவாளிகளான சீவலப்பேரி பாண்டி, முருகன், முண்டத் தேவர் ஆகிய மூவரும் நண்பர்கள். கிராமத் தலைவரிடம் மெய்க்காப்பாளராகப் பணிபுரிந்த சீவலப்பேரி பாண்டி, கொலை வழக்கில் முதல் குற்றவாளி. கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, தனது குடும்பத்தினருக்கு நண்பர்கள் உதவவில்லை என்ற ஆத்திரத்தில் சிறையில் இருந்து தப்பிய பாண்டி, அவர்களைப் பழிவாங்கியிருக்கிறார். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுத்துவந்த இவர் அப்பகுதியின் ராபின்ஹுட்டாகவே கொண்டாடப்பட்டிருக்கிறார்.
சிறையிலிருந்து தப்பிய பாண்டி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் வரிசைகட்ட ஒருகட்டத்தில் அவரை என்கவுண்டர் செய்ய போலீஸ் முடிவெடுக்கிறது. போலீஸின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையில் 1981-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீவலப்பேரி பாண்டி என்கவுண்டர் செய்யப்பட்டார். போலீஸாரிடம் சரணடைய முடிவெடுத்த பாண்டி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டால், மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் அவருக்கு தண்டனை பெற்றுத் தருவது கடினம் என்று போலீஸார் கருதியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாண்டியின் பெயரையும், அவரது மனைவி வேலம்மாள் பெயரையும் சூட்டி மகிழ்கிறார்கள்.

முன்சீப் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மறுநாள் தண்டனை நிறைவேற்றப்படும் நிலையிலும் நிதானமாக உறங்கியவர் பாண்டி. ஆனால், எதிர்பாரா திருப்பமாக, காந்தியின் கொள்கைகளுக்கு ஏற்ப அவரின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் இரவில் அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. திருச்சி கண்டோன்மெண்ட் ஜெயிலில் இருந்து தப்பிய அவர், ரயிலில் சந்தித்த ஒரு பெரிய மனிதர் மூலம் கொடைக்கானலை அடுத்த பூம்பாறை அருகே உள்ள கிராமத்தில் சில காலம் ஒளிந்திருக்கிறார். முதலில் அந்த பெரிய மனிதரின் தோட்டங்களைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டவர், பின்னாட்களில் மனைவியோடு அங்கு குடியேறி விவசாயமும், குதிரை மூலம் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். மனைவியோடு வசித்து வந்தாலும், அவ்வப்போது திருநெல்வேலி சென்று கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கிறார். இருப்பவர்களிடம் இருந்து பறித்து, அதை இல்லாதவர்களிடம் கொடுத்து வந்ததால், திருநெல்வேலி ஜில்லாவில் சீவலப்பேரி பாண்டிக்கு ஆதரவு பெருகியது. போலீஸ் இவரை கொடுங்குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தது.
அப்படி உதவி செய்யும் நோக்கில் பூம்பாறைக்கு இவர் தத்துப்பிள்ளையாக அழைத்து வந்த சிறுவன் மூலமாகவே இவரை போலீஸ் டிரேஸ் செய்து பிடித்தது வரலாறு. செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கும்படி போலீஸ் வற்புறுத்தியபோது, சாவதே மேல் என அதைப் பற்றி இறுதிவரை இவர் வாய் திறக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். சீவலப்பேரி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு உதவி செய்ததோடு, பூம்பாறையில் கோனார் என்கிற பெயரில் வசித்தபோது கே.ஜி.எஃப் ராக்கி பாய் போலவே அந்தப் பகுதி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்துவந்திருக்கிறார் பாண்டி. இவரது உண்மையான பெயரைச் சொல்லி கைது செய்ய வந்திருப்பதாக திருநெல்வேலி போலீஸ் சொன்னபோது, அதை நம்பாமல் யார்கிட்டயும் அதிர்ந்துபேசாதவரு இப்படிப்பட்ட குத்தமெல்லாம் செய்திருக்காருர்னு சொன்னா எப்படீங்கய்யா நம்ப முடியும்னு அந்த மக்கள் கேட்ட கேள்வி இதை நமக்குப் புரியவைக்கும்.
சீவலப்பேரி பாண்டி கேரக்டர் பிரபலமாகக் காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் சௌபா. இவர் எழுதிய தொடர் கதையே பின்னாளில் படமாக எடுக்கப்பட முக்கியமான காரணம். உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவது குறித்தும் விரிவாக இவர் பதிவு செய்ததாலேயே, தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவந்தது.
நான் முன்னாடி கேட்டிருந்தேன்ல அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிச்சுட்டீங்களா… இல்லைன்னா… அதுக்கான விடையை நானே சொல்றேன்.
சீவலப்பேரி பாண்டி படம் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட இயக்குநர் பிரதாப் போத்தன், `நான் இந்த படத்தை மம்மூட்டிக்காக தான் எழுதினேன். அவர் அப்போ இருந்த பிஸியால நடிக்க முடியல. அதன் பிறகுதான் நெப்போலியன் கமிட் ஆனார். ஆனால், மம்மூட்டி நடிக்காதது, இன்னும் எனக்கு ஒரு வலியைத் தருகிறது. நெப்போலியனும் நன்றாக நடித்தார். இருந்தாலும், ஒரு சின்ன மனவருத்தத்தைத் தருது’னு பிரதாப் போத்தன் சொல்லிருந்தார். அதேமாதிரி, சீவலப்பேரி பாண்டி படத்தோட சீக்வெலா டைரக்டர் கௌதம் மேனனும் நடிகர் கமல்ஹாசனும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறதா, போன 2017ம் வருஷத்தோட தொடக்கத்துல ஒரு தகவல் வெளியானது. அந்தப் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் மியூஸிக் பண்ணப் போறதாவும் சொல்லப்பட்டது. ஆனா, என்ன காரணமோ தெரியல, அந்த புராஜக்ட் டேக் ஆஃப் ஆகவே இல்லை.

கோலார் தங்க சுரங்கம் மாதிரி குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக போலீஸை எதிர்த்தது, மக்கள்லாம் சேர்ந்து சீவலப்பேரி பாண்டியை போலீஸ் கைது பண்ண விடாம பண்ணது, ஒரு பத்திரிகையாளர் மூலமா இந்தக் கதை உலகத்தின் கவனத்துக்கு வந்தது… இதெல்லாம்தான் சீவலப்பேரி பாண்டிக்கும், கே.ஜி.எஃப் ரக்கி பாய்க்குமான ஒற்றுமை. ஒரே ஒரு பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா…? கே.ஜி.எஃப். ராக்கி பாய் நிழல்… வெறும் சினிமா. ஆனா, சீவலப்பேரி பாண்டி நிஜம். ரத்தமும் சதையுமா வாழ்ந்த மனுஷனின் கதை!
சீவலப்பேரி பாண்டி படத்தோட சீக்வெல்லை இப்போ எடுத்தா, இப்போ இருக்க ஹீரோக்கள்ல யாரு அந்த கேரக்டருக்கு சரியா இருப்பா… உங்களோட சாய்ஸை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே…
Also Read – மணிரத்னம் ஏன் 1986 விக்ரம் படத்தை இயக்கவில்லை? -Interesting facts of Vikram
0 Comments